உரியான் தருகெனின் தாயம் வகுத்து – நான்மணிக்கடிகை 75

இன்னிசை வெண்பா

தூர்ந்தொழியும் பொய்பிறந்த போழ்தே மருத்துவன்
சொல்கென்ற போழ்தே பிணியுரைக்கும் - நல்லார்
விடுகென்ற போழ்தே விடுக உரியான்
தருகெனின் தாயம் வகுத்து. 75

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

நட்பினர்க்குள் பொய் யுண்டான போதே நட்புக்கெடும்;

மருந்து கொடுப்போன் சொல் என்று சொன்னபோதே நோயாளன் பிணியை யுரைப்பான்;

பெரியார் ஒரு செயலை விடுக வென்ற பொழுதே அச் செயலை விட்டிடுக;

ஒரு பொருட்குரியான் கொடுவென்றால் அவன் பாகத்தை பங்கிட்டுக் கொடுத்து விடுக.

கருத்து:

பொய் பிறந்த போதே நட்புக் கெடும்; மருத்துவன் சொல்லென்ற போதே பிணியாளன் நோய் சொல்வான்; பெரியார் ஒரு செயலை விடுகென்ற பொழுதே அச்செயலை விட்டொழிக; பொருளுக்கு உரிய ஒருவன் தருகென்ற பொழுதே அவன் பங்கை வகுத்துத் தந்து விடுக.

விளக்கவுரை:

மருத்துவன் சொல்லென்றால் மட்டும் பிணியாளன் உண்மையைச் சொல்வானென்று கருத்துக் கொள்க. பிணியை அஃதுடையான் என்று உரைப்பினுமாம்,

‘அதற்குரியான் தாவெனில் தாயம் வகுத்து' என்பதும் பாடம். தாயம் பங்கிட்டுத் தாரானாயின் வழக்குண்டாகும்; அதனாற் பொருள் குறைந்து போம்; ஆதலால் ‘விடுக' என்றார். மருந்து - பொருள்: மருந்திழைத்துக் கூட்டிக் கொடுப்போன்;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Sep-18, 6:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே