இன்னும் எத்தனை காலந்தான்

=======================
காது கேளாத எருமைகளின் மேல்
மழையாக விழுந்துகொண்டிருக்கும்
கோரிக்கைகள் முன்னொருகால
மோசடிப் பள்ளத்தாக்கில்
விழுந்து மாண்ட
எங்கள் மூதாதையரின்
ஆன்மத் துயரங்கள் தந்துவிட்டுப் போன
வரலாற்று எச்சங்கள்.

உங்களுடைய கல்லறைகளுக்கு
மண்ணும் கல்லும் சுமந்த
வரலாற்றில் உங்கள் பெயர்கள்
மாய்ந்து போனபின்னும்
மாயாதிருக்கும் அவர்கள் உழைப்பைச்
சுரண்டிய உங்கள் கொடுமைகள்
அனுமன் வாலாக நீண்டுகொண்டே
இருக்கிறது எங்கள் பரம்பரைக்கும்

சிம்மாசன பெருங்கல்லால்
நசுக்கப்பட்ட எங்களின் வாழ்க்கை
அணுகுண்டு வீழுந்த நாகசாயி
ஹிரோஷிமா நகரங்களின்
கரப்பான்பூச்சிகளைப்போல்
மரணத்தைக் கடக்கப்
பழகிப்போனது.

எங்கள் உரிமைகளைக் கயிறாகத் திரித்து
நீங்கள் ஏற்றிய தேசியக்கொடியில்
அழகாகப் பறக்கிறது
எங்களின் வறுமை.

உங்கள் பட்டு வேட்டி சரிகைகளின்
பளபளப்பில் மிகத்தெளிவாகத்
தெரிகிறது எங்கள் கிழிசல் ஆடை.

சனநாயக கடுதாசிகளில்
சர்வாதிகார மண்ணும் மணலும் கலந்த
வேர்கடளையைப் பொதிசெய்து
எங்கள் தெருக்களில் விற்கக்
கற்றுக்கொண்ட உங்களால்
எங்கள் குழந்தைகளின் எதிர்கால நலம்
எழுந்திருக்க முடியாத பள்ளத்தில்
ஈனஸ்வரத்தில் அழுகிறது.

உள்ளூர் உற்பத்திகளுக்கு
சவப்பட்டிச் செய்யும் நீங்கள்
எங்கள் போராட்டக் கறையான்கள்
சவப்பெட்டி பலகைகளை அரித்துவிடுமென்ற
பீதியில் வெளிநாட்டிலிருந்து
இருக்குமதி செய்த தார் பீப்பாக்கள்
நம் தேசத்தின் பொருளாதார சூரியனை
குளிப்பாட்டிய பின்னரும்
மிச்சமிருக்கிறது

ஆனாலுமென்ன..
இன்னும் எங்கள் தெருக்கள் மட்டும்
தலையில் எண்ணெய்
வாசனையே காணாத
ஒரு அனாதை குழந்தையைபோலவே
கேட்பாரற்றுக் கிடக்கிறது.

நவீனத்துவம் அடையாத
மருத்துவமனைகளோ
புதிய நோய்களின்
உற்பத்திக் கூடமாக
வளர்ச்சி கண்டுள்ளது.

நாங்கள் வளர்ந்துவிடக்
கூடாதென்பதை உங்கள்
பரம்பரைக்கும் வளர்த்துவிடும்
வளர்ச்சியில் மட்டுமல்ல
எங்கள் வயிற்றிலடிப்பதையும்
வளர்த்து கொண்டுதான் செல்கிறது
உங்கள் வளர்ச்சி.

நீதியின் கண்களை
நிதியின் துணியால் கட்டி
விதியின் வீதியில்
விளையாட விட்ட உங்கள்
சதியின் சாதனையால்
தேசத்தின் சந்தோசம்
சத்தியமாய் சாத்தியமில்லை
என்பதை மட்டும் ஒவ்வொரு பொழுதும்
வெளிச்சம் போட்டே காட்ட இன்னும்
எத்தனை காலம் இருளில் இருந்தே
பார்க்கப் போகின்றோமோ ??

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (12-Sep-18, 10:22 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 130

மேலே