கரப்புச்சொல் கீழ்கள்வாய்த் தோன்றி விடும் - நான்மணிக்கடிகை 96

இன்னிசை வெண்பா

வடுச்சொல் நயமில்லார் வாய்த்தோன்றும் கற்றார்வாய்ச்
சாயினுந் தோன்றா கரப்புச்சொல் - தீய
பரப்புச்சொல் சான்றோர்வாய்த் தோன்றா கரப்புச்சொல்
கீழ்கள்வாய்த் தோன்றி விடும். 96

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

பழிச் சொற்கள் அன்பில்லாதாரது வாயில் பிறக்கும்;
அறிவு நூல்களைக் கற்றவரது வாயில் வஞ்சனைப் பேச்சுக்கள் அவர் இறந்துவிட நேர்ந்தாலும் பிறவாது;
தீயவற்றைப் பரப்புதலா லாகும் பேச்சுக்கள் மேன்மக்கள் வாயில் தோன்றமாட்டாது;
ஒன்றனை மறைத்தலும், குற்றமுமாகிய சொற்கள் கீழ்மக்களது வாயில் பிறந்துவிடும்.

விளக்கவுரை:

வடு - பழி. சாயினும் - இறப்பினும். தீய பரப்புஞ் சொல் - கோட்சொல்;
சான்றோர் - நல்லியல்புகள் நிறைந்தோர். கீழ்கள் - இழிவான வியல்புடையவர்கள்;
நயம் - நட்புக் குணம், அன்பு;
பரப்புச் சொல் - இல்லாத பழிச்சொற்களை ஏற்றிப் பலரறியக் கூறுதல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Sep-18, 4:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே