அறிவுஜீவிகளின் மவுனம் ஏற்படுத்தும் அச்சம்அறிவுஜீவிகளின் மவுனம் ஏற்படுத்தும் அச்சம்

வங்காளத்தில் 1943-ல் ஏற்பட்ட கொடிய பஞ்சம் பற்றிய ஆவணப்படத்தைச் சில மாதங்களுக்கு முன் பார்த்தேன். ‘வங்காளத்தின் நிழல்கள்’ என்ற தலைப்பு நல்ல நோக்கத்தில் இடப்பட்டிருந்தாலும் பின்னால் வரக்கூடியவற்றுக்கு முன்னுரையாகவே இருந்தது. 35 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களைப் பலிகொண்ட பஞ்சத்தின்போது மக்களைக் காக்கத் தவறிய பிரிட்டிஷ் அரசின் அலட்சியத்தை - அகங்காரத்தைக் கண்டிக்காமல், ஆட்சியாளர்களைப் பொறுப்பாக்காமல் அப்போதைய அறிவுஜீவிகள் ஏன் மவுனம் சாதித்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.

இந்திய வரலாற்றாசிரியர்கள் இந்த விவகாரத்தை அடக்கத்தோடு, அதே சமயம் விமர்சன நோக்கில் அணுகியிருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் மீது கருணையைக் காட்டவில்லை. பஞ்சம் தொடர்பாகக் கண்டனக் குரல் எழுப்பாமல் மவுனம் காத்தவர்கள், ஒன்றுமே அறியாதவர்கள் என்று இரு பிரிவினரே இருந்தனர். பஞ்சம் பற்றிய பதிவுகள் நாட்டுப்புறப் பாடல்களாகவும் தாத்தா பாட்டிகள் குழந்தைகளுக்குச் சொல்லும் அந்த நாள் கதைகளாகவும் சுருங்கிவிட்டன. பஞ்சத்தின் கொடுமைகளையும் அதில் லட்சக்கணக்கானோர் இறந்ததையும் அற்பமான நிகழ்வைப் போல, சடங்காகப் பதிவுசெய்துள்ளனர். சுதந்திரப் போராட்ட இயக்கம் அமைதியாகவும், அரசுடன் பேசும் நிலையில் இருந்ததாலும் இது அதிகம் விவாதிக்கப்படாமல் போயிருக்கலாம். ஆனால், தேசப் பிரிவினையாலும், வங்காளப் பஞ்சத்தாலும் லட்சக்கணக்கானோரை இழந்ததால்தான் மக்களைக் காக்க வேண்டிய ‘அரசு’ பற்றிய சிந்தனை, அனைவருடைய எண்ணங்களிலும் தோன்றியது.

பஞ்சம் காட்டிய பாதை

சுதந்திரம் அடைந்த பிறகு அறிவியல், ஐந்தாண்டு திட்டமிடல், அனைத்துத் துறைகளின் வளர்ச்சி ஆகியவற்றில் அக்கறையும், பெரும் எண்ணிக்கை யிலான மக்களைப் பஞ்சம்-பசி-பட்டினியிலிருந்தும் நோய்களிலிருந்தும் மீட்க வேண்டும் என்ற உறுதியுமுள்ள அரசு ஏற்படக் காரணமாயிற்று.

அடுத்ததாக, வன்முறையும் அதனால் பெருமளவில் ஏற்பட்ட சீர்குலைவுகளும் நாட்டையே பிளவுபடுத்துவதில் முடிந்தன. அப்படிப் பெருமளவில் நிகழ்ந்த வன்செயல்கள்தான் புதிய நவீனத்துவத்தின் பகுதியாக மாறின. மக்களுக்கு ஒரு வாய் சோறுகூடக் கிடைக்காமல் போகுமளவுக்குப் பஞ்சம் நேரிட எது அல்லது யார் காரணம் என்ற தேடலோ, அப்படிப்பட்டவர்கள் மீதான கடும் விமர்சனமோ வரலாற்றில் இல்லை. பிரிட்டிஷாரின் அகந்தையான போக்குக்கு ஒரு எதிர்ப்போ, ஏராளமானோரின் உயிரிழப்புக்குக் காரணமான வின்ஸ்டன் சர்ச்சிலைப் போர்க் கைதியாக விசாரிக்க வேண்டும் என்ற ஆவேசமோ இல்லை. அதற்கு மாற்றாக, பிரிட்டிஷாரிடம் எப்படிக் கண்ணியமாகவும் மரியாதையாகவும் நடந்து சுயராஜ்யம் பெற வேண்டும் என்ற இதோபதேசம்தான் கூறப்பட்டது.

வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சமும் அதில் 35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்ததும் இன்றைய தலைமுறைக்குத் தெரியாமலிருப்பதற்குக் காரணம் கதைசொல்லிகள்தான். எந்த வன்முறையையும் இந்தியச் சமூகம் அமைதியாக ஏற்றுக்கொள்ளும் என்பது - அறிவுஜீவிகளுக்கு உணர்வு மரத்துப் போய்விட்டதையே காட்டுகிறது. மவுனமாக எதையும் ஏற்கும் சதியில் அறிவுஜீவியும் கூட்டாளியாகிவிடுகிறார் என்பதுதான் இதில் பெரும் சோகம்.

சொல்ல மறந்த கதைகள்

இவற்றையெல்லாம் பார்க்கும்போது இந்திய அறிவுஜீவிகளின் கதை சொல்லும் திறன் எப்படிப்பட்டது என்ற வியப்பு ஏற்படுகிறது. அவர் அரசின் பின்னொட்டா, அல்லது அரசை விமர்சிக்கக்கூடியவரா? இந்தக் கேள்வி சமீப காலத்தில் மேலும் உரத்து ஒலிக்கிறது. அறிவுஜீவிகளின் மவுனமும், சாத்வீகமும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. இருந்தும் இது ஏன் என்று ஆராய்ந்து தெளியும் முயற்சிகளும் இல்லை.

முக்கிய நிகழ்வுகளையெல்லாம் ஏன் இப்படி மவுனமாகவே கடந்திருக்கிறார்கள் என்ற வியப்பும் ஏற்படுகிறது. இன அழிப்பு, வன்செயல்கள் என்று எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்க மவுனம் காக்கப்பட்டது என்றால் அதற்கு மாபெரும் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறேன். பிரிவினைக் காலத்து மவுனம், வன்புணர்வுகள் பற்றிச் சிலர் பேசுவதுடன் முடிகிறது. இந்தியா என்பதே மவுனங்களின் வரலாறாகிவிட்டது. போபால் விஷவாயுக் கசிவு சம்பவத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர். இறந்தவர்கள், மீள முடியாமல் நோய்வாய்ப்பட்டவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தி, சட்டபூர்வமான உரிமைகள் பற்றிப் பேசப்பட்ட பிறகு நடவடிக்கை ஏதுமில்லை. துயரங்களும் மவுனங்களும் சேர்ந்தே வரும் என்று தோன்றுகிறது. நர்மதை அணையில் நீர்தேங்கும் அளவை உயர்த்தி ஏராளமான பழங்குடிகளை அவர்களுடைய வாழிடத்திலிருந்து அகற்றியபோதும் அதே மவுனம் தொடர்ந்தது. அங்கே தப்பியவர்கள் ஆண்டுதோறும் பல போராட்ட நிகழ்வுகளை நடத்தியும் பலன் ஏதுமில்லை. அந்த அணையில் உயரத் தொடங்கிய தண்ணீரில் அறிவுஜீவிகளின் குரலும் மூழ்கி அடங்கிவிட்டது.

உயர்த்திக் குரலெழுப்பிக் கண்டிக்கப்பட்ட சம்பவங்கள்கூட பிறகு ஏன் மவுனத்தில் மூழ்கடிக்கப்படுகின்றன என்ற வியப்பு ஏற்படுகிறது. நெருக்கடிநிலை காலத்தில் என்ன நடந்தது என்பதை ஷா கமிஷன் விசாரணை அறிக்கை பேசுகிறது. 1984-ல் சீக்கியர்களுக்கு எதிரான படுகொலைகளின் போது நடந்தவை என்ன என்று ‘பியுசிஎல்-பியுடிஆர்’ ஆகிய மனித உரிமை ஜனநாயக உரிமைகளுக்கான அமைப்புகளின் அறிக்கைதான் பேசுகிறது.

ஒவ்வொரு அக்கிரமத்துக்குப் பின்னாலும் அறிவுஜீவிகளின் மவுனம் பின்தொடர்வதே மரபாகி வருகிறது. இந்தியா என்பதே மவுனங்களின் தொடர் வரலாறாக இருக்கிறது. உண்மையான வரலாறு குரலே இல்லாமல் அமுங்குகிறது, சாட்சியாகக்கூட இருக்க முடியாமல். தேசப் பிரிவினை, போபால் விஷவாயுக் கசிவு, நர்மதை அணையில் நீர்மட்ட உயர்வு ஆகிய சம்பவங்களின்போது கடைப்பிடிக்கப்பட்ட மவுனங்கள் பெரியவை என்றாலும் பல சிறியவையும் பேசப்படாமலேயே இருக்கின்றன. அவை மட்டுமல்ல பெண்கள், குழந்தைகள், ஒடுக்கப்பட்டவர்கள் என்று பலதரப்பட்டவர்கள் மீதான சமீபத்திய தாக்குதல்களின்போதும் தொடரும் மவுனம் பேசப்படக் காத்திருக்கிறது.

மவுனத்தின் கனம்

சம்பவங்கள் நடந்தபோது காத்த மவுனங்களைவிட இப்போது அன்றாடம் நிலவும் மவுனம் அதிகம் என்னை அலைக்கழிக்கிறது. சித்ரவதைகளையும் வன்புணர்வையும் நேரில் பார்த்த இணையர்கள் பிரிவினையைப் பற்றி இன்னமும் வாய் திறக்காதது. 2002 வகுப்புக் கலவரங்களுக்குப் பிறகு குஜராத்தின் மவுனம். இங்கே மன உளைச்சல் ஏன் என்றால் மவுனம்தான் பேசுகிறது, மவுனம்தான் பேச வேண்டும் என்கிறது, மவுனம்தான் குரல் கொடுக்குமாறு இறைஞ்சுகிறது, கடைசியில் மவுனம்தான் தோற்கிறது. மவுனத்துக்கு இன்னமும் சொல்திறன் இருக்கிறது. நம்மை ஒவ்வொரு கணமும் தாக்குகிறது. ஒரு குடியரசை மவுனங்களின் மீது கட்டமைக்க முடியாது. அதற்குப் பேச்சு அவசியம். மவுனத்துக்குப் பதிலாக கூச்சலை இட்டு நிரப்ப முடியாது. சில வாரங்களுக்கு முன்னால் ஒரு சீன ஓவியத்தைப் பார்த்தேன். அதன் அடியில் ஹைகூவைப் போல ஒரு கவிதை. “எவ்வளவு துயரமானது, மவுனம் என்பது” என்றது.

இது நவீன இந்தியாவைப் பற்றிய வர்ணனையாகக் கூட இருக்கலாம்.



தமிழில்: சாரி, ‘தி இந்து’ ஆங்கிலம்.

எழுதியவர் : (12-Sep-18, 4:17 pm)
பார்வை : 26

மேலே