முன்னே கொடுத்தார் உயப்போவர் - நாலடியார் 5

இருவிகற்ப நேரிசை வெண்பா

என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே
கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்
தொடுத்தாறு செல்லும் சுரம். 5

- நாலடியார்

பொருளுரை:

யாதாயினும் ஒரு பொருளை தமது கையில் கிடைக்கும்படி பெறுவராயின் மூப்புக் காலத்தில் பயன்படுவதென்று இறுகப் பிடித்துக்கொண்டு சும்மா இராமல் இளமையிலேயே அறஞ் செய்தவர் நடுவுநிலைமையுள்ள அருளில்லாத கூற்றுவன் கயிற்றாற் கட்டிக் கொண்டுபோகின்ற காட்டு வழியை தப்பிப் புண்ணிய உலகம் புகுவார்.

கருத்து:

இளமையிலேயே அறஞ் செய்தவர் புண்ணிய உலகம் புகுவர்.

விளக்கம்:

சிறிது கிடைத்தாலும் அறஞ் செய்க என்பதற்கு ‘என்னாலும்' என்றார்.

பொருள் கிடைப்பதன் அருமை நோக்கிப் ‘பெற்றக்கால்' என்றார்.
பொருள் கிடைப்பது அருமையாய் இருத்தலின், கிடைத்த உடனே அறத்திற் செலவிடுக என்பது கருத்து.

பிடித்திருத்தல், தாமும் உண்ணாது இறுக்கஞ் செய்து கொண்டிருத்தல்.

‘முன்னே ' என்பது முதற்காலத்திலேயே என்னுங் கருத்தில் வந்தது; அஃதாவது, பெற்ற உடனே என்பது;

கோடு இல் தீக் கூற்றம் - நடுவுநிலைமையுள்ள அருளில்லாத கூற்றுவன்,

தொடுத்து செல்லும் சுரம் ஆறு - கயிற்றாற் கட்டிக் கொண்டுபோகின்ற காட்டு வழியை,

உய்ய போவர் - தப்பிப் புண்ணிய உலகம் புகுவார்.

நடுவு நிலைமையுள்ள அறஞ்செய்வார் கூற்றுவனுலகுக்குச் செல்லும் வழி தப்பிப் புண்ணிய உலகுக்குப் போவர் என்பது பின் இரண்டடிகளின் பொருள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Sep-18, 7:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

சிறந்த கட்டுரைகள்

மேலே