காதலுக்கு நீ

வானம் இருட்டிக்கொண்டு வந்தது. அவந்திகாவின் பார்வை அலைகள் அறையின் சாளரம் வழியே கருமேகக்கூட்டத்தின் நகர்வை இன்னும் வேகமாய்த் தள்ளுவது போல விண்ணை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தன....

"அவந்திகா..... ரெடியா?" அம்மாவின் குரல் தொனித்தது...

சாளரக்கம்பியை இறுகப்பற்றியவளாய் அவளது கண்கள் கண்ணீர் துளிர்க்க அந்த விண்ணும் தண்ணீர் துளிர்த்தது. நேரம் செல்ல செல்ல அவள் தட்டுத்தடுமாறிப் போனாள்... தானாகவே மனதைத் திடப்படுத்திக்கொண்டு கண்களைத்துடைத்த வண்ணம் கட்டிலில் அமர்ந்தாள்... பட்டுப்புடவை, அதற்கொத்த நிறத்தில் வளையல்கள், ஆரம், நெத்திச்சுட்டி, மல்லிகைப்பூச்சரம், அலங்காரப்பொருட்கள் என மேசையில் அழகாய் வைக்கப்பட்டிருந்த கோலம் கண்டு இவள் கோலம் சிதைந்தாள்...
"என்ன செய்வேன்? என்ன செய்வேன்?" என அவளது உள்ளம் பலதடவை கேள்வி எழுப்பிக்கொண்டிருக்க கைகளைப் பிசைந்தவாறு சிடுசிடுவென இருந்தாள்.

"அவந்திகா நேரமாச்சு. கதவத்திற..."
மீண்டும் அம்மாவின் குரல் உரத்துத் தொனிக்க, "இதோ ஆச்சு ஆச்சு" என்று சொல்லிக்கொண்டே வேகவேகமாக சேலையை எடுத்து சுற்றிக் கொண்டாள்... வேண்டா வெறுப்பாக பூவையும் சூடி தன்னை அலங்கரித்துக் கொண்டு மெதுவாகக் கதவைத்திறந்தாள்.

அவந்திகா ஒரு வழக்கறிஞர். மிக நன்றாக படித்தவள். அவள் தன் படிப்பை நிறைவு செய்து நிரந்தரமாக தொழிலில் அமரவே இருபத்தேழு வயதாகிவிட்டது... இலங்கையின் கல்விமுறையிலுள்ள  காலக்கடத்தல்களை நான் என் வாயால் வேறு கூறவேண்டுமா என்ன! இப்போது அவளுக்கு முப்பது வயதாகிவிட்டது. மூன்று வருடங்களாக திருமணச்சிறையில் அடைபடாமல் முழுமுயற்சியுடன் வெற்றிகண்ட போதிலும் இனியும் அவளால் காலம்தாழ்த்த முடியாமல் போனது.

ஆண்துணையின்றி ஒரு பெண் வாழ்ந்தால் பழிகூறும் சமூகமும் பெற்ற மகளைத்  திருமணக்கோலத்தில் காணத்துடிக்கும் பெற்ற மனங்களும் அவளது சுதந்திரத்திற்கு இடமளிக்கவில்லை...
தனக்கு மணவாழ்க்கையில் ஈடுபாடு இல்லை இல்லை என ஆயிரம் தடவை உரத்துக்கூறிவிட்டாள். ஆனபோதும் கூட உறவுகள் அவளைப் புரிந்து கொள்வதாயில்லை. மூன்று வருடமாக முப்பது மாப்பிள்ளையைத் தட்டிக்கழித்த அவளால் இனியும் தாக்குப்பிடிக்க முடியாமல் போனது.

வாசலில் சத்தம் கேட்டது.
"அவங்க வந்துட்டாங்க... ரெடியா இரு. கூப்புட்றப்போ வந்தா போதும்" என்று தனது சேலையை சரிசெய்துவிட்டு கைகளைக்கூப்பியவாறு "வாங்க வாங்க வணக்கம்" என்று அம்மா அடியெடுத்து வைக்க அவந்திகா தலையிலடித்துக் கொண்டாள். நீதிமன்றத்தில் அவள் கொண்ட அதிகாரத்தை வீட்டுக்கு வரும்போது வாசலில் வைத்து விட்டு வரவேண்டிய நிலை அவளுக்கு!

அம்மா,அப்பா,அத்தை,மாமா,சித்தி,சித்தப்பா என அனைவரும் கூடி அமர இவளுக்கோ அடிவயிற்றில் கற்பாறைகளை உருட்டிவிட்டது போலிருந்தது. மாப்பிள்ளை வீட்டாரோடு கலந்து பேசிக்கொண்டிருக்க அம்மாவின் கண்சாடை கண்டு "எல்லாம் என் தலையெழுத்து" என மனதுக்குள் அங்கலாயித்த வண்ணம் தேநீர் கோப்பைகளை ஏந்திக் கொண்டு, வராத வெட்கத்தை கடினப்பட்டு வரவழைத்துக் கொண்டு சபைக்குச் சென்றாள்.

அனைவருக்கும் தேநீர் பரிமாறி இறுதியில் மாப்பிள்ளைக்கும் வழங்கினாள்.

"மாப்பிள்ளய நல்லா பாத்துக்கோ.... அப்புறம் ஃபோட்டோ கேக்காத" என்ற அத்தையின் கேலிப்பேச்சு கேட்டு சபையே பல்லைக்காட்ட அவந்திகாவிற்கு ஆத்திரம் தலைக்கேறியது. மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள். அவனும் பார்த்தான். அவனது கண்களில் ஆசையும் எதிர்ப்பார்ப்பும் பாய்விரித்து படுக்க இவள் முகத்திலோ ஒரு சலனமும் தென்படவில்லை.

"நான் அவருகூட தனியா பேசனும்" என்றாள் அவந்திகா திடமாக சபைநடுவே.
மாப்பிள்ளைக்கும் சம்மதம்தான்.
குடும்பத்தினருக்கு புரிந்து விட்டது, இவள் ஏதோ குட்டையைக் குழப்பப் போகிறாள் என்று.
"அவந்திகா உள்ள போ..." மாமாவின் கண்கள் தீப்பொறி பரப்பின.

"சின்னஞ்சிறுசுகள் மனசுவிட்டு பேசட்டுமே
.. இந்த காலத்துல இதெல்லாம் தப்பில்ல" என மாப்பிள்ளையின் தந்தை கூற,

"இல்லல்ல... எங்க குடும்பத்துல அந்த வழக்கமில்ல... நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க" என்றாள் அவந்திகாவின் அத்தைக்காரி.

மூன்று வருடமாக தேடிதேடிக் கலைத்துப் போய் அதிர்ஷ்டவசமாக சிக்கிய வழக்கறிஞர் மாப்பிள்ளையை விட்டுவிட அவர்களுக்கு துளியும் விருப்பமில்லை... ஒரே தொழில் செய்பவர்கள் இணைந்தால் மணவாழ்க்கை இனிமையாக அமையுமென மாப்பிள்ளை வீட்டாருக்கும் இந்த சம்மந்தத்தை விட மனதில்லை. இருவரும் படித்தவர்கள், வழிக்கறிஞர்கள், ஒரே ஜாதி, உயரம், ஜாதகம் என எல்லாம் பொருந்தியிருந்தது.

ஆனால் அவந்திகாவிற்கு ஜாதி, மதம் மற்றும்  ஜாதகம் போன்ற மூட நம்பிக்கைகளில் துளியும் ஈடுபாடு கிடையாது. அவள் கடவுளை வழிபடுவது கிடையாது. சாத்திர சம்பிரதாயங்களில் தலையிடவே மாட்டாள். அவள் திருமணத்திற்கு விரும்பி ஒத்துக் கொண்டாலும் அவளது கொள்கைகள் சமூகத்தோடு ஒத்துப்போகாது என்பது திண்ணம்.
 
மிக வித்தியாசமான அவளது மனதைப்
பறித்தவனும் ஒருவன் இருந்தான். புயலை பூவாக்கிச் சென்றவன் அவன். அவன் தான் சென்று விட்டானே... அதனால் தான் இவள் மீண்டும் புயலாகிவிட்டாள். காலத்தின் கோலம் அவளது காதல் வாழ்க்கையை பறித்துச் சென்றது. பள்ளிக்காதல் அது. வெறும் காதலல்ல; மனதில் ஆணியடித்த காதல்; உயிரிணைந்த காதல்; உடல் தொட்ட காதல்;பத்து வருட காதல்.

நொடிப்பொழுதில் தன்னை வெறுத்துவிட்ட அவனை வெறுத்து ஒதுக்க முடியாமல்
தவிக்கிறாள் அவந்திகா.. பெண்ணாய்ப் பிறந்துவிட்டாளே, அவளது படிப்பும் பட்டமும் கூட அவனுக்கு அடிமைப்பட்டு விட்டன.
அவளது காதல் வாழ்க்கை குடும்பத்தினருக்கு நன்கு தெரியும்.
"விட்டுச் சென்று வேறு திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருப்பவனை எண்ணி நீ உன் வாழ்க்கையைத் தொலைத்துவிடாதே, அவனைப் போல நீயும் உனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்" என அவளுக்கு புத்தி கூறாதவர்களென குடும்பத்தில் எவருமில்லை.

ஆயிரம் சொன்னாலும் அவளது மனம் சற்றும் கரையவில்லை. அவனுடன் வாழமுடியாதென்பது ஆணித்தரமாக தெரிந்த போதிலும் இன்னொருவனை ஏற்றுக் கொள்ள அவளது மனதிற்கு சக்தியில்லை. உருகி உருகி காதலித்த அந்த உருக்கமான காதலை தான் ஒற்றை ஆளாக நின்றாவது காப்பாற்றிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள்.
அவளால் அவனை மறக்கமுடியவில்லை. நினைத்து  நினைத்து அழுவாள் பின்பு மகிழ்வாள். அவனது  நினைவுகளே அவளது நிழலாக இருந்தன.

வந்த மாப்பிள்ளையுடன் பேசவும் சந்தர்ப்பம் கிட்டவில்லை. பெரியோரே பேசி சம்மதம் தெரிவித்து அனுப்பிவிட்டனர். அவந்திகாவால் பெற்றோர் பேச்சையும் மீற முடியவில்லை. திருமண வேலைகளை ஆரம்பிக்க வேண்டியதுதான் என குடும்பத்தினர் ஆரவாரப்பட்டுக் கொண்டிருந்தனர். மணிக்கு மணி அவளது இதயம் கனத்தது.

அலைபேசியில் யாருக்கோ அழைப்பை ஏற்படுத்தினாள். கெஞ்சிக் கெஞ்சிக் கதறினாள். அழுதாள். புலம்பினாள். மணிக்கணக்கில் பேசி இறுதியில் ஏதோ சாதித்துவிட்ட உணர்வில் பெருமூச்செறிந்து அழைப்பைத் துண்டித்தாள். பின்பு வழமைக்கு மாறான ஒரு புதுவித உத்வேகத்துடன் அலங்காரங்களைக் கலைத்துவிட்டு படுத்து உறங்கினாள். எதற்காகவும் அவளது காதலை இழக்க அவள் தயாராக இல்லை; காதலன் மணம் புரிந்து கொண்ட போதிலும் கூட... அந்த  ஊக்கத்தில் நிம்மதியாய் உறக்கம் கொண்டாள். அனைவருக்கும் இது கேளிக்கையாகவும் முட்டாள் தனமாகவும் கூட இருக்கலாம். ஆனால் அவளுக்கென ஒரு நியாயம் இருந்தது. தன் மனதையும் உடலையும் தானே கொச்சப்படுத்திக்கொள்ள அவள் விரும்பவில்லை. நாளுக்கு ஒருவன் எனக் சுற்றித் திரியும் இக்காலத்துப் பெண்களுக்கு மத்தியில் இவள் விநோதமானவள் தான்.

மறுநாள் காலை வழக்கம் போல உடுத்திக்கொண்டு புறப்பட்டுச் சென்றாள். பகல் உணவுக்கும் வீட்டுக்கு வரவில்லை.. அவளது கைபேசிக்கும் அழைப்பு எட்டவில்லை. அவந்திகாவின் பெற்றோருக்கு ஒருவித பயம் உண்டானது. அவந்திகா யாருடனும் ஓடிப்போக வாய்ப்பில்லை; நாம் கட்டாயப்படுத்தியதால் ஏதும் தவறான முடிவு........ என அப்பாவும் அம்மாவும் உயிரைக் கையில் பிடித்தவண்ணம் வாசலையே பார்த்துக் கொண்டிருக்க வீட்டுத் தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. அவந்திகாவின் அம்மா ஓடினார்.

"ஹலோ...."

"ஹலோ அம்மா நான் தான்"

"அவந்திகா... எங்க போன? பகல் சாப்பிடவும் வரல... நீ சாப்டியா? இப்போ எங்க இருக்க?"

"அம்மா.. நா(ன்) இன்னைக்கு வீட்டுக்கு வரமாட்டேன். நம்ம ஸ்ருதி(நண்பி)க்கு இன்னைக்கு பர்த்டே. அதனால இன்னைக்கு அவ வீட்டுல பார்ட்டி. அத அட்டென்ட் பண்ணிட்டு நாளைக்கு காலைல வீட்டுக்கு வந்துர்றே ம்மா"

"ஓ...அப்படியா..  சரிம்மா.. ஸ்ருதிக்கு நானும் வாழ்த்துனதா சொல்லு"

"சரிம்மா வச்சிடுறே(ன்)"
அவந்திகாவின் குரல் சிரமப்பட்டுத் தொனித்தது.

மறுநாள் காலை நடக்கப்பழகும் பிள்ளை போல் தத்தித்தத்தி வீடு வந்தவள் யாரும் பார்க்கும் முன்பதாக அறைக்குள் சென்று கதவை தாழ்ப்பாள் இட்டுக் கொண்டு கட்டிலில் அயர்ந்தாள்...
"அவந்திகா சாப்பிட வா.. வெறும் வயித்தோட இருக்காத" என்ற அம்மாவின் வார்த்தை அவளது அடிவயிற்றில் ஆயிரம் ஊசிகளை இறக்கியது போலிருந்தது...

ஆம், வந்தவள் வெறும் வயிறாகத்தான் தான் வந்திருந்தாள், தன் கருப்பையையே தொலைத்தவளாய்.....!!!

அவனது குழந்தையை மட்டுமே தன் வயிற்றில் சுமக்க ஆசைப்பட்ட அவளது உண்மைக்காதல், அவனில்லை என்று அறிந்தவுடன் தாய்மைக்கான அடையாளத்தையே ஆஸ்பத்திரியில் துடைத்தெறிந்துவிட்டது. அவளுக்கு தன் காதலைவிட தாய்மையோ, சட்டமோ, அவளது தொழிலோ பெரிதாய்த் தெரியவில்லை.

ஸ்ருதி அவளது நெருங்கிய நண்பி. வைத்தியரும் கூட. சொந்தமாக தனியார் மருத்துவமனை நடாத்திவருகிறாள். அவந்திகா  அலைபேசியில் இந்த உதவியைக் கேட்டுக் கெஞ்சியபோது ஸ்ருதி மறுக்கவே செய்தாள். இறுதியில் அவளது காதலின் ஆழத்தைப் புரிந்து கொண்டு தன் தோழமைக்காக இக்காரியத்தை செய்ய ஒப்புக்கொண்டு செய்து கொடுத்தாள். காதல் தந்த ஏமாற்றத்தை தன் நட்பும் அவந்திகாவிற்கு தந்துவிடக்கூடாதென ஸ்ருதியும் உடன்பட்டிருந்தாள். காதல்  விட்டுச் சென்ற போதிலும் அவந்திகா  நட்பை தக்கவைத்துக் கொண்டாள்.

இனி அவளுக்கொரு மண வாழ்க்கையை யாராலும் ஏற்படுத்தித் தரமுடியாது. அவளுக்கு அவளது காதலும், அவளது காதலுக்கு அவளுமே ஆறுதல்.

எழுதியவர் : பிரவீனா (14-Sep-18, 9:02 am)
Tanglish : kaathalaukku nee
பார்வை : 198

புதிய படைப்புகள்

மேலே