தாயே நீயே

" ...தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன?..."

மேசை மீது இருந்த வானொலிப்பெட்டி பரப்பிக் கொண்டிருந்த மெல்லிய குரல் கோபக்கனல் தெறிக்க அமர்ந்திருந்த நந்தினியின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தியது. அருகிலிருந்த கைபேசியை எடுத்து அழைப்பை ஏற்படுத்தினாள். அவளது கொதிப்பு அடங்குவதாகத் தெரியவில்லை.

   "அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே....."
கட்டிலின் மீது கிடந்த கைபேசி பாட ஆரம்பித்தது. அமைந்தால் பேரின்பம்தான் என்று அங்கலாயித்த வண்ணம் அழைப்பை ஆன் செய்தான் முரளி.

   "நான் தந்த பத்திரத்துல கையெழுத்து போட்டிங்களா இல்லையா?"
 
   "இங்க பாரு நந்து நான் எத்தன தரம் உனக்கு சொல்றது, உடனே அதெல்லாம் செய்ய முடியாது மா. சொன்னா புரிஞ்சிக்கோ. நாம காதலிச்சு தானே கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கல்யாணத்துக்கு முன்னாடி எவ்வளவு சந்தோஷமா இருந்தோம். இப்போ யேன் இப்டி பண்ற?"

   "ஹாங்ங்ங்.... அப்போ அவங்க இல்லையே. இப்போ இருக்காங்களே. நான் உங்க கூட சந்தோஷமா வாழத்தான் ஆசப்பட்டேன். கண்டதையெல்லாம் கட்டிக்கிட்டு மாரடிக்க என்னால முடியாது.
இதுதான் என் முடிவு. கையொப்பம் போட ரெடின்னா சொல்லுங்க வீட்டுக்கு வாரேன். இல்லன்னா இப்டியே விட்ருங்க"
 
   "நந்து....சரி முதல்ல நீ வீட்டுக்கு வா. ஹலோ.....ஹலோ..... ஹூம்...."

முரளிக்காகவே காத்திருந்தவள் நந்தினி. ஐந்து வருட காதலுக்கு பின்பு ஒன்றிணைந்த ஜோடி. நந்தினி சுதந்திரத்தை விரும்புபவள். தனது அம்மா,அப்பா,அண்ணன்,தங்கை என அனைத்து உறவுகளையும் உதறித்தள்ளி விட்டு முரளியை மட்டுமே நம்பி வந்த அவளுக்கு முரளி முழுதாய் வேண்டும் என்ற உறுதிப்பாடு. அதுதான் விவாகரத்தில் வந்து நின்றது.

நண்பி ஹேமாவின் வீட்டிலிருந்து கோபாவேசத்துடன் கிளம்பி விறு விறுவென வீட்டுக்கு வந்த நந்தினி நாட்காலியில் அமர்ந்து பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்த கணவனைக்கூட கவனிக்காது புயலாக சென்று அறைக்கதவை 'பட்'டென்று அடைத்துக் கொண்டாள்.

   "முரளீ..... சாப்பிட வா. நந்தினி எங்க? அவளையும் கூட்டிட்டு வா"
  
முரளியின் தாய் தனியார் மருத்துவமனையில் வைத்தியராகப்  பணிபுரிந்தவர். முரளியின் சிறுவயதிலேயே அவர் தன் கணவரை இழந்து தனிமையைப் பழகிக்கொண்டார். ஓய்வு பெற்று இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆனாலும் வீட்டு வேலைகள் அத்தனையும் செய்வது அவர்தான். நந்தினி கடுகளவும் அசையமாட்டாள். முரளியும் பிரபல வைத்தியர். தனக்கு தன் கணவனே பிரசவம் பார்க்க வேண்டும் என்பது நந்தினியின் ஆசை. முரளியுடன் தான் எண்ணிய வண்ணம் வாழ முடியாததற்கு தாயாரை ஒரு இடைஞ்சல் எனக்கருதினா
ள்.

 "நந்து...அம்மா கூப்புட்றாங்க. சாப்பிட வா"

முரளிக்கு நந்தினி மீது அளவுகடந்த அன்பு.
அவனுக்காக அவள் கடிதம் எழுதி வைத்து விட்டு பெற்றோரைப் பிரிந்து வந்தவளாயிற்றே! அவளுக்கும் அவன் என்றால் கொள்ளைப் பிரியம்! இதுவரை அவளது வாழ்க்கை பற்றி அவளது பெற்றோருக்கு தெரியாது. என்றைக்கு கடிதம் கண்டனரோ அன்றே தலைமுழுகி விட்டனர் அவளை.

கதவு மெதுவாகத் திறந்தது.

"நந்து... நேரமாச்சு சாப்பிட வா"

"பத்திரம் எங்க? கையெழுத்து போட்டாச்சா?"
வெடுக்கென்று கழுத்தைத் திருப்பிக் கொண்டாள்.

நந்தினிக்கு முரளியுடன் தனிமையில் வாழ ஆசை. முரளிக்கும் ஆசைதான். ஆனாலும் பெற்ற தாயைக் கைவிட அவனுக்கு ஒருபோதும் மனம் வராது. அவனுக்கு நந்தினியைக் கைவிடவும் மனமில்லை. 

"பெற்ற தாயை அநாதைகள் ஆசிரமத்தில்  விடுவதா? கட்டிய மனைவிக்கு விவாகரத்து தருவதா?"
முரளி நிலைகுலைந்து போனான்.

"கையெழுத்து போட்றது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல. நீ என்ன நம்பி வந்துட்ட. இனி எங்க போவ? உன் வாழ்க்க?"

"நான் எங்கயோ போறேன். என் வாழ்க்கையப் பத்தி ரொம்ப கவலைப்பட்றவர்தான்  நீங்க! நான் நல்லா படிச்சிருக்கேன். எங்க போனாலும் என்னால வாழமுடியும். உங்க அம்மாவ அனுப்ப மாட்டிங்கன்னு எனக்கு  நல்லா தெரியும். அதனால கையெழுத்து போட்டுட்டா நான் கிளம்புறேன். அதுவும் இல்லன்னா........."

"இல்லன்னா.....???"
பரிகாரம் எதிர்ப்பார்த்துதான் வினயமாகக் கேட்டான்.

பல நாட்களாக முரளியுடன் போராடி போராடி  வெறுத்துப் போன நந்தினி உடனே அருகிலிருந்த கத்தியை எடுத்து தன் கழுத்தில் அழுத்திக் கொண்டாள்.

"நந்தினி வேண்டாம் ம்ம்மாஆஆஆஆ....."
ஓடிவந்த முரளியின் தாய் அவளது கையிலிருந்த கத்தியைப் பிடுங்கியெறிந்தார்.

"அம்மா நீ எப்போ வந்த?"
முரளியின் மனம் பதைத்தது.
"அம்மா.........."

"ரெண்டு பேரும் சாப்பிட வாங்க. மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்"
முரளியின் தாய் மௌனமாகத் திரும்பி விட்டார். நந்தினி கோபத்துடன் கட்டிலில் விழுந்தாள். முரளி இதயம் படபடக்க சுவரில் சாய்ந்து விட்டான்.

கடிகாரம் நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தது. சாயங்காலம் ஆனது. முரளியின் தாய்
மௌளமாக வந்து முரளியின் முன்னே நின்றார்.

"என்னை எங்கயாவது அநாதை ஆசிரமத்துல சேர்த்து விட்டுடு முரளி."

திகைத்துப் போனான் முரளி.
"அம்மா......"

"இல்லப்பா....நீங்க ரெண்டு பேரும் வேலைக்கு போன அப்புறம் நான் தனியாத்தானே வீட்டுல இருக்கேன். எனக்கும் பேச்சுத்துணைக்கு யாரும் இல்ல. ரொம்ப கஷ்டமா இருக்கு. அங்க என்ன மாதிரி நிறைய பேர் இருப்பாங்க. எனக்கும் மன ஆறுதலா இருக்கும்"

முரளியும் நந்தினியும் பேசிக் கொண்டிருந்தது தாயின் காதில் விழுந்துவிட்டதென முரளி யூகித்துக் கொண்டான். அந்த வார்த்தைகளைக் கேட்ட பின்பு தான்  தலைக்கு ஏறியிருந்த நந்தினியின் கோபம் மெது மெதுவாகக் குறையத் தொடங்கியது.
உடனே எழுந்தாள். முகத்தில் சிறிய மகிழ்வு.

"ஆமாங்க, அவங்களும் தனியா என்னதான் செய்வாங்க. ஆசிரமத்துல நிறைய பேர் இருப்பாங்க. அவங்களோட பேசிட்டு இருந்தா அத்தைக்கும் நேரம் போறதே தெரியாது. வாரத்துக்கு ஒரு தரம் நாம போய் பார்த்துட்டு வரலாம்"
  
முரளி தன்மேல் இடி விழுந்தது போல பேச்சு மூச்சின்றி நின்றான்.

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மா. இங்க உங்களுக்கு என்ன கொற? நீங்க பேசாம நிம்மதியா போய் தூங்ங்க்...."

"போதும்" முறைத்துப் பார்த்தாள் நந்தினி.

"அத்தை அவரு டயர்ட் டா இருக்காரு. நீங்க கிளம்பிட்டா சொல்லுங்க, நானே உங்கள கூட்டிட்டுபோய் விட்டுட்டு வரேன்"

"சரிம்மா வா போகலாம்"

முரளியால் எதுவுமே செய்ய முடியவில்லை. நடைப்பிணமாய் ஆனான். ஒருபுறம் தாயை
இழந்து விடுவேனோ என்ற பயம்; மறுபுறம் காதலித்துக் கைபிடித்த மனைவியை இழந்து விடுவேனோ என்ற பயம். தடுக்கவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் நின்றான்.

"நான் வரேன்ப்பா..."
கண்ணீர் கலந்த புன்னகையுடன் முரளியை கட்டித்தழுவி முத்தமிட்டு விடைபெற்றுக் கொண்டார்.

"நான் போய் அத்தைய விட்டுட்டு வந்துர்றேங்க"
என்று வெகு ஆர்வத்துடன் புறப்பட்டுச் சென்றாள் நந்தினி.

வெகுதூரம்சென்று ஒரு அநாதைகள்
ஆசிரமத்தை அடைந்துவிட்டனர். அங்கு பல அநாதைக்குழந்தைகளும் பெரியவர்களும் இருந்தார்கள். எப்படியேனும் விட்டு வந்துவிட வேண்டும் என்ற எண்ணமே நந்தினியின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

"அத்தை... இங்க உக்காந்திருங்க. நான் பணம் கட்டிட்டு வந்துட்றேன்"
எனக்கூறிவிட்டு உள்ளே சென்றாள்.
ஆசிரமத்தில் அலுவலக வேலைகளை முடித்து கட்டுப்பணத்தையும் கட்டிவிட்டு வெளியேறினாள் நந்தினி.

ஆசிரமக்காப்பாளர் மிகுந்த மகிழ்வுடன் வருவதை அவதானித்தாள் நந்தினி.
வயதானவர் தான். ஆனால் முப்பது வருடங்களுக்கு மேலாக ஆசிரமத்தை சிறப்பாக நடத்தி வருகிறார்.

"டாக்டர் அம்மா. நல்லா இருக்கிங்களா?"

"எனக்கென்ன கொற... நல்லா இருக்கேன் ஐயா"

"முரளி எப்படி இருக்கான்? அவனையும் டாக்டருக்கே படிக்க வெச்சிட்டிங்கன்னு கேள்விப்பட்டேன். இப்படி ஒரு அம்மா கிடைக்க அவன் கொடுத்து வெச்சவன்"

"அவன் நல்லா இருக்கான். தனக்கு பிடிச்ச பொண்ணையே கல்யாணமும் பண்ணிக்கிட்டான்"

"ஆமாம், என்ன விஷயமா இங்க வந்துருக்கிங்க"

"அம்மா உங்களுக்கு ரூம் ரெடியா இருக்கு. வாங்க"
பணிப்பெண்ணின் குரல்.

காப்பாளர் அதிர்ச்சியடைந்தார்.
"டாக்டர் அம்மா இங்க தங்குறதுக்காக வந்துருக்காங்களா?"
அவருக்கு எதுவுமே புரியவில்லை.
முரளியின் தாய் பையை எடுத்துக் கொண்டு மௌனமாக உள்ளே சென்றார்.

அனைத்தையும் அவதானித்த நந்தினி ஆசிரமக்காப்பாளரை நெருங்கினாள்.
"அந்த டாக்டர் அம்மாவ உங்களுக்கு முன்னாடியே தெரியுமா ஐயா?"

"நல்லா தெரியும். டாக்டர் அம்மாவும் அவங்களொட கணவரும் அவங்களுக்கு கொழந்த இல்லன்னு  சொல்லி இருபத்தெட்டு வருஷத்துக்கு முன்னாடி இங்கதான் ஒரு ஆண்கொழந்தய தத்தெடுத்துக்கிட்டு போனாங்க. போய் ரெண்டு வருஷத்துலயே அவங்க கணவர் இறந்துட்டாரு. தனி ஆளா நின்னு அந்த புள்ளைய படிக்க வெச்சி டாக்டர் ஆக்குன அவங்களுக்கே இன்னைக்கு இந்த கோலம்! அவன் இருந்த இடத்துக்கே அம்மாவையும் அனுப்பிட்டானே முரளி"
என்று கண்ணீருடன் தலையில் அடித்துக் கொண்டு உள்ளே சென்றார்.

"நந்தினி உணர்வில்லா ஜடமானாள்"

ஓடோடி சென்று முரளியின் தாயின் காலைப்பிடித்து கதறி அழுதாள்.
"அத்தை என்ன மன்னிச்சுடுங்க. அவரு நீங்க பெத்த கொழந்த இல்லன்னாலும் இவ்வளவு அன்பா ஒழுக்கமா அவர வளர்த்து இருக்கிங்க. இப்படி ஒரு பெரிய மனசு உள்ள உங்கள என்னோட சுயநலத்துக்காக இங்க விட்டுப் போக பார்த்தேனே....என்ன மன்னிச்சுடுங்க"

"எழுந்திரி நந்தினி... உன் மேல எந்த தப்புமில்ல. எனக்கு வாழ்க்கைன்னா என்னன்னு புரிய வெச்ச என் மகன் கிடைச்ச இடத்துல நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன். நீ முரளிய நல்லா கவனிச்சுக்கோ. நேரமாச்சு கிளம்பு"
அந்த வார்த்தைகளில் அவரது பெருந்தன்மை தொனித்தது.

"நான் பண்ண தப்புக்கு எனக்கு என்ன தண்டனை வேணாலும் கொடுங்க... வரமாட்டேன்னு மட்டும் சொல்லாதிங்க. என்ன உங்க மருமகளா இல்ல மகளா நினைச்சி என்ன மன்னிச்சி ஏத்துக்கோங்க.
'அம்மா' என்கூட வாங்க."

அவரால் மறுக்கமுடியவில்லை.
"நான் வரேன். ஆனால் இந்த இரகசியத்த எப்பவுமே முரளிக்கிட்ட சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணு."

"சத்தியமா சொல்ல மாட்டேன் அம்மா. நீங்க வந்தா போதும்"
என்று கைத்தாங்கலாகத் தூக்கி நிறுத்தி ஒரு கையில் பையை எடுத்துக் கொண்டு மறுகையை தாயின் தோளில் போட்டுக் கொண்டு வெளியேறினாள் நந்தினி.

இருவரும் மகிழ்வுடன் வீடு திரும்பினர். முரளி அதிர்ச்சியில் இருந்து மீளாமல் சுவரில் மாட்டியிருந்த தாயின் புகைப்படத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். யாரோ தன்னை தொடுவது போல் ஒரு உணர்வு. திரும்பிப் பார்த்தான்.
"அம்மா......"
அவனது கண்களில் ஆனந்தக் கண்ணீர் சொட்டியது. இருவரும் கட்டியணைத்துத் தழுவிக் கொண்டனர். நந்தினி முரளியின் காலில் விழுந்து கதறி அழுது மன்னிப்பு கேட்டாள்.

முரளிக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. ஒன்றுமே புரியவில்லை. சந்தோஷம்
மட்டும் தழைத்தோங்கியது. தாயையும் தாரத்தையும் அமர வைத்து தான் நடுவில் அமர்ந்து கொண்டான். முரளியின் மனம் மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்தது.
"இனி எனக்கு ஒரு மகன் மட்டுமல்ல, மகளும் கூட"
என்று தாயின் கண்கள் கலங்கி நின்றன.

அவரது கண்ணீரை முரளியின் கைகள் துடைக்க, அருகிலிருந்த விவாகரத்து பத்திரத்தை நந்தினியின் கைகள் இரகசியமாய்க் கசக்கிக் கொண்டிருந்தன.

  

 

 

எழுதியவர் : பிரவீனா (14-Sep-18, 9:19 am)
Tanglish : thaayaye neeye
பார்வை : 169
மேலே