உடைமையறாது ஈட்டல் உறுதுணையாம் – இன்னிலை 12

இன்னிசை வெண்பா

உடைமையறா(து) ஈட்டல் உறுதுணையாம் யாண்டும்
உடைமையராச் சென்றக்கால் ஊரெல்லாஞ் சுற்றம்
உடைமைக்கோல் இன்றங்குச் சென்றக்காற் சுற்றம்
உடையவரும் வேறு படும். 12 – இன்னிலை

பொருளுரை:

ஒருநாளும் விட்டு விடாமல் செல்வத்தைச் சம்பாதிக்க வேண்டியது எப்பொழுதும் மிக்க துணையாகும்.

செல்வமுடையவராக அயலூர்க்குச் சென்றால் சென்ற ஊரில் உள்ளவர் எல்லாரும் சுற்றத்தாராவார்.

செல்வமாகிய ஊன்று கோலின்றி அங்கு சென்றால் சுற்றத்தார் என்ற உரிமை யுடையவரும் வேறுபட்டு அயலார் போலாவார்.

கருத்து:

செல்வமுடையவரை எல்லாரும் சேர்ந்து தம் சுற்றமாகவே கொண்டாடுவர். ஆதலால், செல்வத்தை இடைவிடாது வருந்திச் சேர்க்க வேண்டும்.

செல்வரைக் கண்டால் யாவரும் சுற்றத்தார் போலச் சூழ்ந்து திரிவதும், வறியரைக் கண்டாற் சுற்றத்தாரும் நோக்காமற் கைவிட்டு நீங்குவதும் உலகியல்பு.

அவ்வுலகியல்பு தோன்ற ஊரெல்லாம் சுற்றம் என்றும், சுற்றம் உடையவரும் வேறுபடும் என்றும் கூறினர்.

செல்வமாகிய ஊன்றுகோலின்றிச் சென்றால் வாழ்வாகிய நல்வழி கடக்க வியலாது. தாய் தந்தை உடன் பிறந்தோர் முதலியவர் சுற்றத்தாராவர். அவ்வகைச் சுற்றத்தாரும் அயலாராக வேறுபடுவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Sep-18, 2:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே