மன்மத ரகசியம்-------------மருத்துவர் நாராயணரெட்டி ----------தொடர் 3

அமெரிக்காவின் புகழ் பெற்ற மருத்துவரான வில்லியம் மாஸ்டர்ஸ் பிறந்தது, ஒஹையோ மாநிலத்தில் இருக்கும் க்ளீவ்லாண்டில். பாரம்பரியமிக்க ரோசெஸ்டர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அவர் படித்தார். அந்த பல்கலைக்கழகத்தில் தான் ‘செக்ஸ் உயிரியல்’ வல்லுநர் என பெயர் பெற்ற ஜார்ஜ் வாஷிங்டன் கார்னர் பணி புரிந்தார். வாஷிங்டன் கார்னரை குருவாக ஏற்றுக் கொண்ட வில்லியம் மாஸ்டர்ஸ், எலிகளின் செக்ஸ் வாழ்க்கை பற்றிதான் முதலில் ஆராய்ந்தார். பெண்களுக்கு மாத விடாய் வருவது போல எலிகளுக்கும் ஒருவித திரவச் சுரப்பு நிகழ்கிறது என்பது அவரது ஆராய்ச்சி முடிவு.

அதை மனிதர்களின் செக்ஸ் சுழற்சி யோடு ஒப்பிட்டு பார்க்க முயன்றபோது அவருக்குத் தோல்விதான் கிடைத்தது. சரியான புத்தகங்கள் அவருக்கு கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு சில ஆராய்ச்சி நூல்களும் மனித உடலில் செக்ஸின்போது நிகழும் மாற்றங்கள் குறித்து தப்புத் தப்பாக சொல்லியிருந்தன. அப்போது அவருக்கு 24 வயசு. ‘தாங்கள் எங்கிருந்து எதனால் வந்தோம்... தலைமுறை தலைமுறையாக தாயின் கருவில் உயிர்ச்சுழற்சி எப்படி நிகழ்கிறது என்பது பற்றி யாரும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டவில்லையே?’ என்ற விஷயம் அவரை உறுத்தியது. ‘என் வாழ்நாள் முழுக்க செக்ஸ் பற்றிய உருப்படியான ஆராய்ச்சிதான் செய்யப் போகிறேன்’ என அப்போதே அவர் முடிவெடுத்தார்.

ஆனால், அவரது குருவான கார்னர் கவலையோடு அவருக்கு எச்சரிக்கை விடுத்தார். ‘‘உனக்கு அதற்கான வயதும், பக்குவமும் வரும் வரை காத்திரு. இப்போது நீ சின்னப் பையன். நீ மனப்பூர்வமாகவே ஆராய்ச்சி செய்தாலும் அதற்கு தப்பான பெயர் சூட்டி உன்னைக் களங்கப்படுத்தி விடுவார்கள். எத்தனையோ மகத்தான ஆராய்ச்சியாளர்களுக்கு ‘செக்ஸ் வெறியர்கள்’ என பட்டம் கொடுத்து, தண்டனையும் கொடுத்த தேசம் இது. அப்படி ஒரு நிலை உனக்கும் வரக் கூடாது. முதலில் ஒரு டாக்டராக புகழ் தேடிக் கொள். அப்புறம் ஏதாவது ஒரு நிறுவனத்தின் உதவியோடு ஆராய்ச்சி நடத்து. அப்போதுதான் பிரச்னை வராது’’ என்றார் அவர்.

மாஸ்டர்ஸ் அதை ஏற்றார். வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் வந்து வேலைக்கு சேர்ந்தார். மாதவிடாய் கோளாறுகள், மகப்பேறு பிரச்னைகள் என பெண்கள் மருத்துவத்தில் புகழ்பெற்றார். குறிப்பாக முதுமை வந்து மாதவிடாய் நிற்கும் பருவத்தில் பெண்களுக்கு ஹார்மோன் ஊசிகளைப் போட்டு, மாதவிடாய் கோளாறு களை தடுக்கும் இவரது புதிய சிகிச்சை முறையைப் பெற பெண்கள் கூட்டம் ‘க்யூ’வில் நின்றது. செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சி எதற்கும் பெண்களின் சப்போர்ட் தேவை. அது அவருக்கு கிடைத்து விட்டது.

அவரது ஆராய்ச்சி ஆசைக்கு தீனி போடும் விதமான விஷயங்கள் இங்கும் அவருக்கு கிடைத்தன. புகழ்பெற்ற மகப்பேறு நிபுணர் என அவர் பெயர் வாங்கியதால், ‘‘டாக்டர்! எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை’’ என்ற புலம்பலோடு அவரிடம் நிறைய பெண்கள் வந்தார்கள். அவர்களைப் பரிசோதித்துப் பார்த்த மாஸ்டர்ஸுக்கு ஆச்சர்யம்...

உடல்ரீதியாக அவர்களில் பலருக்கு எந்த குறையும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் ‘குழந்தை இல்லை’ என்ற மனக்குறையோடு வரும் பெண்களில் நூற்றில் முப்பத்தேழு பேருக்கு செக்ஸில் ஆர்வம் இல்லை. அவர்கள் குறைந்தபட்ச ஈடுபாடு காட்டி கணவருடன் சேர்ந்து படுக்கை அறைக்கு போனாலே போதும்... அவர்களது பிரச்னை தீர்ந்துவிடும். அதைச் சொன்னால் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு செக்ஸில் நாட்டமும் இல்லை... அதுபற்றி தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் இல்லை.

தவறு எங்கே இருக்கிறது என்று அவருக்கு குழப்பம். இந்த குழப்பம் வந்தபோது அவருக்கு 38 வயது ஆகியிருந்தது. கண்ணியமான டாக்டர் என்ற பெயரும் வாங்கியிருந்தார். இப்போது நம் ஆராய்ச்சியைச் செய்ய ஆரம்பிக்கலாம் என்ற நம்பிக்கை அவருக்கு வந்தது. அமெரிக்கர்கள் தனிமனித ஒழுக்கத்தைப் பிரதான விஷயமாக மதித்த காலம் அது! செக்ஸ் என்ற வார்த்தையை உச்சரிப்பதே ஆபாசமான விஷயமாக கருதப்பட்டது.

ஆனாலும் செக்ஸ் ஆராய்ச்சிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து பலத்த சர்ச்சைகள் எழுந்து கொண்டிருந்தன. அதுவரை செக்ஸை ஆராய்ந்த எல்லோருமே வெறும் இன்டர்வியூ டைப் ஆராய்ச்சிகளைத்தான் முடித்திருந்தனர். பெரும்பாலும் அவர்கள் மனோதத்துவ நிபுணர்கள். எங்காவது ஒரு ஆபீஸ் போட்டுக் கொண்டு, தங்களிடம் சிகிச்சைக்குத் தனியாக, தம்பதிகளாக வருகிறவர்களிடம் கேள்விகள் கேட்டு, அவர்கள் சொல்லும் பதில்களை வைத்து ஆராய்ச்சி முடிவுகளை அறிவித்துக் கொண்டிருந்தனர். பலருக்கு கேள்விகள் புரியாது. சிலருக்கு தங்கள் பதிலை எப்படி சொல்வது என்று தெரியாது. ‘எந்த வயதில் முதல் தடவையாக உறவு கொண்டீர்கள்? ஒரு மாதத்துக்கு எத்தனை தடவை? மனைவியுடனான செக்ஸ் தவிர வேறு ஏதாவது உண்டா?’ என்கிற மாதிரியான கேள்விகள்தான். கூச்சப்பட்டுக் கொண்டு பலர் உண்மைகளை மறைத்துவிடுவார்கள். இவை வெறும் உணர்வுப்பூர்வமான விஷயங்களாக இருந்ததே தவிர, அறிவியல்ரீதியாக அவற்றால் உபயோகம் எதுவும் இல்லை.

ஆனால், சும்மா இன்டர்வியூ ஆராய்ச்சி செய்ததற்கே எதிர்ப்புகள் எழும்போது, ‘நான் பரிசோதனைக் கூடத்தில் ஒரு படுக்கையை வைத்து, அதில் பலரை உறவு கொள்ளச் செய்து ஆராய்ச்சி செய்யப் போகிறேன்’ என்று சொன்னால் அமெரிக்க மக்கள் தன்னைக் கொன்றே விடுவார்கள்... அதன் நல்ல பலன்கள் பற்றி எவ்வளவு சொன்னாலும் யாருடைய மண்டையிலும் ஏறாது என்பதை மாஸ்டர்ஸ் உணர்ந்தார். அதனால் முடிந்தவரை தனது ஆராய்ச்சியை ரகசியமாக வைத்துக் கொள்ள தீர்மானித்தார்.

முதல்கட்டமாக தங்கள் பல்கலைக்கழக நிர்வாகியிடம் தனது ஆராய்ச்சி பற்றி விளக்கமாகச் சொல்லி அவரிடம் சம்மதம் வாங்கினார். பிறகு ஆராய்ச்சியைத் தடை செய்யும் அளவுக்கு சக்தி வாய்ந்தது எது எது... யார் யார் என்று ஒரு பட்டியல் போட்டார்.


சிவா

எழுதியவர் : (14-Sep-18, 6:46 pm)
பார்வை : 67

சிறந்த கட்டுரைகள்

மேலே