சங்கத் தமிழ் அனைத்தும் தா

சங்கத் தமிழ் அனைத்தும் தா !

சங்கத் தமிழெனும் சரித்திரம் படித்தேன் !
வங்கக் கடலினும் பெரிதெனக் கண்டேன் !
எங்கும் தமிழரின் ஏற்றம் கண்டேன்!
வங்கம் தாண்டியும் வாழ்ந்தது தமிழே !
வடவரை மேல்முடிச் சூடிய தமிழே !
மடல்விரி பூவென மணந்திடும் தமிழே!
நெடுநெடுங் காலமாய் நிலைத்தது தமிழே !
கடுகெனும் கவிதையில் கடல் பொருள் புகுத்தும் !
பொதுமறை புதுமுறை புகுத்திடும் ; உலகம்
எதுவரை உயிர்க்குமோ அதுவரை உரைக்கும் !
வகை வகைத் திணைகளை வகுத்தனர் பார்த்து !
தொகையொடு பாடலும் எட்டொடு பத்தாம் !
தொடர்கிற வாழ்விற்கு துணைவரும் சொத்தாம் !
உலகுக்கு உயர்வழி உரைத்திடும் பாடல் !
உண்மையில் வாழ்வினை உணர்த்திடும் பாடல் !
சங்கத் தமிழின் சான்றுகள் தருவேன்
" காதலன் வீட்டுக் கலங்கிய நீரும்
காய்ச்சியப் பாலினும் சுவைமிகு மென்றாள்,
தாயொடு தந்தை தன்னுற வெல்லாம்
தான்மறந் தோடிய தலைவியின் கூற்று .
காதலன் நட்பு யாவினும் பெரிதாம்,
காதலன் வழியினில் கால்தடம் பதித்தாள்,
துயர்வர அஞ்சாள்; துணிந்து பின் சென்றாள்
யாழிசை, சந்தனம், ஆழ்கடல் மாமணி
யாவையும் பிறர்க்கே ஆவது போலே.
வீரர்கள் யாவரும் விழுப்புண் ஏற்பர் !
வீழ்ந்திடும் போதிலும் புகழினைச் சேர்ப்பர்! "
வாழ்ந்தவர் வழிதனை வாழ்பவர் அறிந்திட
வாழ்க்கையில் உதவும் வழித்துணை யாகும் !
எத்தனைக் கோடி ஆண்டுகள் ஆயினும்
இத்தமிழ்ப் பாடல் இத்தரை வாழும் !
வாழ்ந்திடின் தமிழர்தம் வாழ்வினை ஏற்போம் !
வீழ்ந்திடின் தமிழ்மணம் வீசிட வீழ்வோம் !
சங்கத் தமிழமு தனைத்தும் அறிவோம் !
சாகா வரமதை வாழ்வில் பெறுவோம் !

எழுதியவர் : கவி இராசன் (18-Sep-18, 3:19 pm)
சேர்த்தது : கவி இராசன்
பார்வை : 736

மேலே