முதுமொழிக் காஞ்சி 69

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
பொருணசை வேட்கையோன் முறைசெயல் பொய். 9

- பொய்ப் பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் பொருணசையால் வரும் வேட்கையை உடையான் முறைசெய்தல் பொய்.

நசை - இச்சை. வேட்கை - ஆசைப்பெருக்கம். முறை -நீதி.

(ப-ரை.) பொருள் நசை - பொருளில் விருப்பத்தால் வரும், வேட்கையோன் - பேராசையுடையவன், முறைசெயல் - நீதியை மேற்கொண்டு நடத்தல், பொய் - பொய்யாம்.

மிக்க பொருளை விரும்பிப் பேராசையுற்றவன் நடுவுநிலைமையில் நின்று நீதியை மேற்கொண்டு நடக்கமாட்டான்.

வேட்கை - பொருள்களின்மேல் தோன்றும் பற்றுள்ளம். இந்சூத்திரம் அரசனைக் கருதியது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Sep-18, 4:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 99

மேலே