காழிலா மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகும் – நாலடியார் 14

நேரிசை வெண்பா

தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா
வீழா இறக்கும் இவள்மாட்டும் - காழிலா
மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகும் தன்கைக்கோல்
அம்மனைக்கோல் ஆகிய ஞான்று. 14

இளமை நிலையாமை, நாலடியார்

பொருளுரை:

முதுகு தாழ்ந்து உடம்பின் கட்டுத் தளர்ந்து தலை நடுங்கி கையில் தடி ஊன்றி விழுந்து இறக்கப் போகும் மூப்பு நிலையிலுள்ள இத்தகைய ஒருத்தியிடத்தும் உறுதியான அறிவில்லாத காம மயக்கத்தைக் கொள்ளுகின்ற மக்களுக்கு,

அவள் இப்போது பிடித்திருக்கும் கையின் ஊன்றுகோல் அவள் தாயின் கைக் கோலாயிருந்த காலத்தில் வருத்துகின்ற காமத் தன்மையையுடைய அழகுருவம் இருந்திருக்கும்.

கருத்து:

முன்பு, கண்டோரைப் பிணிக்கும் அழகுருவோடு திகழ்ந்த மகளிர் பின்பு உடம்பு கூனித் தலை நடுங்குகின்ற இரங்கத்தக்க மூப்பு நிலையை அடையக் காண்டலின் இளமையை ஒரு பொருட்டாக எண்ணிக் காமத்தில் ஆழ்ந்து அதனால் அறச்செயல்களைக் கைநழுவ விடுதலாகாது.

விளக்கம்:

முதுகு வளைந்து கூன் அடைந்து என்றதற்குத் தாழா எனப்பட்டது.

‘காழ் - உரம்; இங்கே அறிவு உரம்.

அணங்கு - வருத்தும் அழகுருவம்; அணங்கா யிருந்திருக்கும் என்னும் பொருளில் "அணங்காகும்" என வந்தது.

இப்போது மூத்திருக்கும் இவள் கையின் கோல் இவள் தாயின் கையில் ஊன்றுகோலாயிருந்த போது இவள் இளமையுடையவளாய் இருந்திருப்பாள் என்பது குறிக்கத் ‘தன்கைக்கோல் அம்மனைக் கோலாகிய ஞான்று' எனப்பட்டது.

இவள் இளமைக் காலத்தில் என்று குறித்தற்கு இங்ஙனம் வந்தது; ஈதுகாண் உலகியல்பு என்று அறிவுறுத்துதற்கு. இது மேற் செய்யுளாலும் உணரப்படும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Sep-18, 12:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 68

மேலே