நனிபெரிதும் வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் – நாலடியார் 17

நேரிசை வெண்பா

பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும்
வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்
கோல்கண்ண ளாகும் குனிந்து. 17

- இளமை நிலையாமை, நாலடியார்

பொருளுரை:

இளமைப் பருவம் குளிர்ச்சி பொருந்திய சோலையிலுள்ள பயன் தரும் மரங்கள் எல்லாவற்றினின்றும் பழங்கள் உதிர்ந்து வீழ்ந்தாற் போலுந் தன்மையது;

இப்பொழுது வேல்போலுங் கண்ணுடையாளென்று இந்த இளந்தன்மையாளை மிகப்பெரிதும் விரும்ப வேண்டாம்;

இவ்விளமையுடையவளும் ஒரு காலத்திற் கூனாகி வழிதெரிந்து நடப்பதற்கு ஊன்று கோலையே கண்ணாக உடையவளாவள்.

கருத்து:

இப்போது கனிந்தும் குளிர்ந்தும் தோன்றும் இளமை ஒரு காலத்தில் நிலைமாறிக் கெடும்.

விளக்கம்:

உவமையிற் சுட்டிய தன்மைகள் பொருளுக்கும் ஒக்கும்.

இளமை யாவர்க்கும் ஒரு படித்தாய்க் கெடுதலின், ‘மரமெல்லாம்' என்றார்.

வீழ்தலின் விரைவு தோன்ற ‘உதிர்ந்து வீழ்ந்தற்று' என்றார்.

இவள் என்னுஞ் சுட்டுக்கள் இரண்டுள் முன்னது ஒரு மாதையும் பின்னது அவள் இளமைப் பண்பையுஞ் சுட்டி நின்றன.

கோல்கொண்டு வழி தெரிந்து செல்லுதலின் ‘கோல் கண்ணள்' எனப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Sep-18, 9:08 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 63

மேலே