அஹிம்சை அறிவின் ஏழாம் நிலை

ஆங்கிலேயன்
ஆயுதங்கள் விட்டு போனான் - காந்தியின்
அஹிம்சை கற்று சென்றான்...தத்துவ மொழிகளிலொன்றாய்
காந்தியம் சேர்த்தான்...

காந்தியை ஈன்ற இந்தியாவிலோ...

ஆங்கிலேயனிடம் மீட்டெடுத்த சுதந்திரம்
அரசியல்வாதிகளிடம் அடகு போகிறது!

சத்தியங்கள்
கோர்ட்டுகளிலும் பதவிப்பிரமானங்களிலும் மட்டும்
உச்சரிக்கப்படும் தேசிய கீதமாகிறது!

அஹிம்சை
மாடுகள் விற்பதையும் ஜல்லிக்கட்டை
தடை செய்யும் அளவிலேயே நீர்த்துபோகிறது!

உண்ணா விரதங்கள் சுயநலத்துக்காக செய்யப்பட்டு
உள்நோக்கத்தோடு முடிந்துபோகின்றன!

அறப்போராட்டங்கள் அடிதடிகள் நடத்தி
முடித்து வைக்கப்படுகின்றன!

சாதி பேதங்கள் அழிப்பதற்குள் பல
புதிய சாதி சங்கங்கள் அவசரமாய் பிறக்கின்றன!

இப்படியாய்...
காந்தியம் தொலைத்துவிட்டு தேடுகிறோம்
இன்னொரு காந்தியை!

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடி நின்றால்....
மூடிய மனதை அன்புச்சாவியால் திறந்திட்டால்...
கிடைக்கக்கூடும் காந்தியம்!

அஹிம்சை அறிவின் ஆறாம் நிலை...
அதை கடந்தால் போவோம்
இறையெனும் அறிவின் ஏழாம் நிலை!

எழுதியவர் : அமுதன் (23-Sep-18, 11:15 pm)
சேர்த்தது : சிவா அமுதன்
பார்வை : 341

மேலே