நீ என்னை விரும்புகிறாயா என்ன?

நீ-நான்-நீ
நீ வரும் வேளையை எதிர்நோக்கி
இது நடக்கும் என்றெண்ணி தயாராயிருப்பேன்,
"அது போலவே என்னை ஏமாற்றாமல்
கடந்து செல்வாய் கண்டுகொள்ளாமலேயே.."
யாருமற்ற பக்கத்து இருக்கைகளை
தவிர்ப்பேன் பேருந்தில்,
அதையும் மீறி அமைந்து விடும் ஒரு துரதிஷ்டத்தில்
"வேண்டுமென்றே தாண்டிச் சென்று
வேறொருவர் அருகிலமர்ந்து
செயற்கையாய் குரலுயர்த்திப் பேசி
கவனமீர்த்துக் கொல்வாய்"
யாருமற்ற வராந்தாவில்
எதிரெதிர் வருகையில்
ஏதாவது பேசலாமா
புன்னகைக்கலாமா என
எச்சில் விழுங்க வேண்டும் நான்
"அப்போது தான் திருப்தியுடன்
அலட்சியமாய்க் கடக்க முடியும் உன்னால்"
கேண்டினில் சில்லரையின்றி தவிக்கையிலோ
உன் வேறு அலுவலக பிரச்சனையிலோ
நான் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டால்
"கண்ணோடு கண் பார்த்து
கோவப் பார்வை ஒன்று பரிசாய் கிடைக்கும் எனக்கு"
பிணி விடுப்பு முடிந்து-நான்
வேலைக்கு திரும்பும் நாளில்
ஏதும் அறியாதவளாய்
"இப்போ பரவால்லையா..உடம்பை பாத்துக்கோ"
என பேசி செல்வாய்
எந்த பதட்டமுமின்றி
உன்னை வேறு எவருடனேனும்
சேர்த்துப் பேசி கிசிகிசு எழுந்தால்
"இவன் அறிந்தானா இல்லையா இதை
என்ன நினைக்கிறான் இதுப் பற்றி,
சொல்லித் தொலையேன்டா"
என்ற ஒரு சஞ்சலத்தை
காட்டிக் கொடுத்துவிடும்
உன் கண்கள்..
ஏதோவொன்றை
மீண்டும் தொடங்கலாம்
என்றெண்ணி நெருங்கும் பொழுது
"யாரோ நீ" என்பது போல் நடந்து கொள்வாய்..
சரியான சந்தர்ப்பத்திற்கு காத்திராமல்
இன்னும் சற்று நெருங்கும் முன்
அவசரப்பட்டு என் அன்பை
அறிவித்துவிட்ட பிழைக்கு தண்டனைகளாய்..
தொடர்கிறது ஒவ்வொன்றாய் இவ்வாறாக
ஏதோவொரு விதத்தில்
என் நினைவுகளில்
எப்பொழுதும்
ஆக்கிரமித்திருக்க வேண்டுமென
விரும்பும் நீ...
"என்னையும் விரும்புகிறாயா என்ன?

எழுதியவர் : தஞ்சை இனியவன் (23-Sep-18, 11:26 pm)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
பார்வை : 112

மேலே