பீட்பிதுக்கிப் பிள்ளையைத் தாய்அலறக் கோடலான் – நாலடியார் 20

நேரிசை வெண்பா

ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால்
தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் - பீட்பிதுக்கிப்
பிள்ளையைத் தாய்அலறக் கோடலான் மற்றதன்
கள்ளம் கடைப்பிடித்தல் நன்று. 20

- நாலடியார்

பொருளுரை:

தான் உயிர் பிரித்துக் கொண்டு போகும் ஆளைக் கருதி அதே வேலையாகத் திரிகின்ற இரக்கம் இல்லாத கூற்றுவன் ஒருவன் இருக்கின்றானாதலால் மறுமையாகிய வழிக்குக் கட்டுச் சோறு போல் உதவும் புண்ணியத்தை இளமையாகிய தக்க காலத்திலேயே உண்டாக்கிக் கொண்டு பிழையுங்கள்,

முற்றாத இளங்கருவையும் வெளிப்படுத்தி, குழந்தையை தாய் அலறியழும்படி உயிர் கொள்ளுதலால் அக்கூற்றுவனது கடுமையை நினைவில் இருத்திக் காரியங்கள் செய்தல் நல்லது.

கருத்து:

இளங் கருவையும் அழிக்கும் கூற்றுவன் உண்மையால் இளமை நிலையாமை விளக்கமாதலின், இம்மை மறுமைக்குரிய புண்ணிய காரியங்களை இளமை யுடையோர் உடனே செய்துகொள்ள வேண்டும்.

விளக்கம்:

கூற்றுவன் கருத்தாய் இருக்கிறானென்பதற்கு ‘ஆட் பார்த்து' எனவும்,

அதுவே வேலையாய் இருக்கிறானென்பதற்கு ‘உழலும்' எனவும்,

கடமையைச் செலுத்தும் போது கண்ணோட்டங் குறுக்கிட இடந்தரான் என்பதற்கு ‘அருள்இல்' எனவும்,

உயிரை மட்டும் உடம்பினின்று பிரித்துக்கொண்டு போவான் என்பதற்குக் ‘கூற்று' எனவும்,

அவன் என்றும் உள்ளான் என்பதற்கு ‘உண்மையால்' எனவும்,

உயிருடன் நெடுகச் செல்லத்தகுந்த புண்ணியத்தைத் தேடுமின் என்பதற்குத் ‘தோட்கோப்புக் கொண்டுய்ம்மின்' எனவுங் கூறினார்.

பீள் - முதிராக் கருப்பம். கள்ளம் என்றது இங்கே ‘உள் எண்ணம்' என்னும் பொருளில் வந்தது.

கூற்றுவன் தன் உட்கருத்தை உறுதியாகச் செய்தே முடித்தலின், அக்கடுமை தோன்றக் ‘கள்ளம்' என்றார்.

தோள் கோப்பு - தோளில் கோத்துச் செல்லுங்கட்டுணா.

மறுமையாகிய வழிக்கு அதுபோல் உதவும் புண்ணியத்தை அச்சொல்லாற் கூறினார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Sep-18, 5:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

சிறந்த கட்டுரைகள்

மேலே