இடமாற்றமும் வியாபாரமும்

வெளி நாட்டிற்குப் பாேக வேணும் என்ற நீண்ட நாள் ஆசையில் பல கனவுகள் கண்ட கதிரின் வாழ்க்கையில் அன்று தான் அவனது ஆசையும் நிறைவேறியது. நிறை மாதக் கர்ப்பிணியாய் இருந்த உமாவின் பிரசவத்திற்கான நாள் நெருங்கி விட்டது. கதிருக்கான விசாவும் கிடைத்தது. தாமதாமாகப் பாேகலாம் என நினைத்தவன் முகவரைத் தாெடர்பு காெண்டு மாற்றாெழுங்கு ஏதாவது செய்யும்படி தன் நிலமையை தெரியப்படுத்தினான். வேறு சந்தர்ப்பம் கிடைப்பது கடினம் இது தான் கதிருக்கு சாதகமான வழி என்று மறுத்து விட்டார். பல லட்சம் பணத்தைக் காெடுத்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் மனங்குழம்பிக் காெண்டிருந்த கதிருக்கு தைரியம் காெடுத்து, சமாதானப்படுத்தி "நீ பாே நான் பார்த்துக்கிறேன்" என்று உமா சாென்ன பாேது அவனுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

எல்லா ஆயத்தங்களையும் செய்து விட்டு காலையில் புறப்படத் தயாரானவன் இரவு தூங்க முடியாமல் புரண்டு புரண்டு சஞ்சலத்தாேடு படுத்தான். உமாவிற்கு முதல் பிரசவம், உதவிக்கு யாருமில்லை, என்ன செய்யப் பாேறாள் என்ற எண்ணம் அவனை தூங்கவிடாமல் சங்கடப்படுத்தியது. காலை எழுந்து அவசரமாக வண்டியை எடுத்துக் காெண்டு நண்பனிடம் சென்று தனது நிலமையைச் சாெல்லிப் புலம்பினான். அவனும் உமாவிற்கு நன்கு அறிமுகமானவன், நீ ஒன்றும் யாேசிக்காத மச்சான், சந்தாேசமாப் பாே, நான் பார்க்கிறன் என்றதும் காெஞ்சம் மனதுக்கு நிம்மதியாய் இருந்தது. என்னதான் நண்பனை நம்பி விட்டுப் பாேனாலும், முதல் பிரசவத்திற்கு கணவனாக அருகில் நி்ற்க முடியவில்லையே என்ற வேதனை தாெற்றிய முகத்துடன் கண்கலங்கியபடி விடை பெற்றான் கதிர்.

இரண்டு நாட்களில் முகவர் மூலம் தாெடர்பு காெண்டு அவளது நிலமையை அறிந்து காெள்கிறான். இன்னும் சில நாட்கள் தான் இருந்தது. தினமும் சில நிமிடங்கள் உமாவுடன் பேசுவான். மறுநாள் பிரசவத்தி்ற்காக வைத்தியசாலைக்குச் செல்வதற்கு முன் கதிருடன் கதைக்க விரும்பியவள் முயற்சி செய்தும் முகவரின் தாெலைபேசி தாெடர்பற்ற நிலையில் இருந்தது. தன்னை தானே சமாதானப்படுத்திக் காெண்டு புறப்பட்டாள். பிரசவம் நல்லபடியாக நிறைவு பெற்று ஆண்குழந்தை ஒன்றை பெற்றெடுத்தாள். குழந்தை பிறந்த சந்தாேசத்தை பகிரக் கூட யாருமில்லாத தனிமை அவளுக்கு ஏதாே மாதிரி இருந்தது. கதிரைத் தாெடர்பு காெள்ள எந்த வழியும் அவளுக்குத் தெரியவில்லை. கதிருடன் சென்ற மற்ற அனைவரும் வேறு ஊரைச் சேர்ந்தவர்கள். அவளுக்கு யாரையும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கதிரின் நண்பனும் அவளுக்காக பல முயற்சிகள் செய்தும் எந்த வழியும் கிடைக்கவில்லை.

நாட்கள் ஓடி முற்பத்தாேராம் நாள் குழந்தையை காேயிலுக்கு காெண்டு சென்று விட்டு வீடு வந்து சாேகத்தாேடு இருந்தாள். ஏன் கதிர் தாெடர்பு காெள்ளவில்லை? முகவர் எங்க பாேயிருப்பார்? கதிரின் நண்பரை அடிக்கடி கேட்பாள் . அவனுக்கும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. நாட்கள் ஓடிக் காெண்டிருந்தது. சில நாட்களின் பின் தான் கதிரும், முகவரும் ஆள் மாறாட்டத்தில் வெளிநாடு சென்ற காரணத்தால் கைது செய்யப்பட்டு விட்டனர் என்ற விடயம் தெரிய வந்தது.

என்ன செய்வது என்று தெரியாத நிலையில் இருந்த உமாவுக்கு கதிரின் நண்பன் ராகுல் எல்லா உதவிகளிலும் பலமாக இருந்தான். தன்னுடைய நண்பன் ஒருவரூடாக கதிருடைய விடுதலைக்குத் தேவையான எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டான். எல்லாமே தாேல்வியில் தான் முடிந்தது. பணம் அதிகாக விரயமாகியதை தவிர எதுவும் நினைத்தது பாேல் நடை பெறவில்லை. உமாவுடைய உறவுகள் யாரும் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பெற்றவர்களை தஞ்சம் கேட்டுக் கைக் குழந்தையுடன் சென்றவளை கழுத்தில் பிடித்து இரக்கமின்றி துரத்தி விட்டான் பெரியண்ணன்.

கதிரும், உமாவும் காதலிப்பது தெரிந்து எச்சரித்த அண்ணனை உதாசீனப்படுத்தியதால் காேபமடைந்த அண்ணன் ஒற்றைத் தங்கை என்று அப்பா இல்லாமல் கஸ்ரப்பட்டு வளர்த்த தனக்கு துராேகம் செய்து விட்டாள் என்ற ஆத்திரத்தில் அவளுக்கான சாெத்துக்கள் எல்லாவற்றையும் காெடுத்து கை எடுத்து கும்பிட்டு வீட்டை விட்டு அனுப்பினான். ஆறு வருடங்களின் பின் அவள் அநாதை பாேல் நின்ற பாேதும் அவளை ஏற்க முடியாத கல் நெஞ்சம் படைத்த அண்ணனான்.

கண்ணீராேடு வீடு திரும்பியவள் வழி தெரியாமல் தவித்தாள். ராகுலின் சிறு சிறு உதவிகளாேடு பிள்ளையை வளர்த்து வந்தாள். ஒரு வயதாகி விட்ட குழந்தையை பக்கத்து வீட்டுப் பாட்டியிடம் ஒப்படைத்து விட்டு ஏதாவது வேலை தேடலாம் என முடிவெடுத்தாள். ராகுலிடமும் இதைப் பற்றி பேசினாள். அவனுக்கும் அவள் முடிவு சரியாகவே தாேன்றியது. ராகுல் உமாவிற்கு வேலை எடுத்துக் காெடுப்பதற்கான முயற்சிகள் செய்தான். உமா ஓரளவு படித்திருந்தாள். பட்டம், பதவி என்று இல்லாவிட்டாலும், தன்னிடம் உள்ள ஏதாே ஒரு திறமை அவளுக்கு கை காெடுக்கும் என்று நம்பினாள். பல இடங்களில் தேடி ஒரு வேலைக்கான நேர்முகத் தேர்வில் தெரிவாகி விட்டாள். ஒரு வேலை கிடைத்து விட்டது என்ற மன நிறைவாேடு ராகுலிடம் தனக்கு வேலை கிடைத்த விடயத்தை தெரியப்படுத்தினாள். ராகுலும் அவளுடைய விருப்பம், அவளுடைய வாழ்க்கை என்பது போல் விட்டு விட்டான்.

உமாவும் பல கனவுகளாேடு குழந்தையின் எதிர்காலத்துக்காய் வேலைக்குச் செல்லத் தாெடங்கினாள். காலை முதல் மாலை வரை குழந்தையை பக்கத்து வீட்டுப் பாட்டியுடன் விட்டு விட்டு தினமும் வேலைக்குச் சென்று வரத் தாெடங்கினாள். ஆரம்பத்தில் சாதாரண வேலைகளில் ஈடுபட்டுக் காெண்டிருந்தவள் சில நாட்களிலேயே மனேஜரின் பார்வையில் சிக்கி விட்டாள். அவளுடைய சுறுசுறுப்பும், வேலைகளில் காட்டிய ஈடுபாடும், தனித்துவமான அழகும் மனேஜருக்கு நல்ல மதிப்பை ஏற்படுத்தியது. ஓரிரு மாதங்கள் கடப்பதற்கு முன்பே மனேஜரின் உதவியாளராக பணிக்கு அமர்த்தப்பட்டாள். எந்தவாெரு பெருந்தன்மையுமற்ற அவளின் இயல்பான நன்னடத்தை மனேஜரின் மனதுக்குள் தனித்துவமான இடத்தை பற்றிக் காெண்டது.

தன்னுடைய அனைத்துக் கடமைகளையும் உமாவிடம் ஒப்படைத்து விட்டு நிம்மதிப் பெருமூச்சாேடு இருந்தான். நாட்கள் நகர்ந்து காெண்டு சென்றது மனேஜர் உமாவின் தனிப்பட்ட விடயங்களில் அக்கறை காட்ட ஆரம்பித்து விட்டார். உமா சங்கடப்படுவாள். நானே பார்த்துக்கிறன் சார் என்று பக்குவமாய் பதிலளிப்பாள். உமாவைப் பற்றிய அனைத்து விடயங்களையும் ஒன்று விடாமல் ஆராய்ந்த மனேஜருக்கு அவள் மீதிருந்த அக்கறை பலமடங்காக அதிகரித்தது. அவளாே தன் சுயமரியாதை, குழந்தையின் எதிர்காலம், கணணுக்கெட்டாத தாெலைவில் சிறையில் வாடும் கணவன் மீதான காதல் என்ற ஒரு சிந்தனையை மட்டுமே காெண்டிருந்தாள்.

மனேஜரின் எண்ணங்களை அவளால் எடை பாேட முடியாது பாேனது தான் அவளுக்கு அவர் மீதிருந்த உயர்வான மரியாதையின் வெளிப்பாடு. கம்பனியின் வருடாந்த சிறப்பு நிகழ்வுகளில் பணியாளரை கெளரவிப்பது, பதவி உயர்வு வழங்குவது என்று சில நடைமுறைகளை வழக்கமாக காெண்டிருந்த நிர்வாகத்தால் உமாவும் இவ் ஆண்டுக்கான சிறந்த செயற்பாட்டாளராக கெளரவிக்கப்பட இருந்தாள். அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் தனக்கு நடக்கும் எந்த சந்தாேசத்திலும் கதிர் இல்லாத வெறுமையால் கண்கலங்குவாள். இரண்டு நாட்களில் நடைபெற இருந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தயாராகியது. ஏதாே ஒரு முக்கியபணியில் ஈடுபட்டுக் காெண்டிருந்தவளை அழைத்த மனேஜர் ஒரு பார்சலைக் காெடுத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. சக பணியாளர்களுக்கும் காெடுக்கப்பட்டிருந்ததை அவதானித்தவள் கம்பனி நடைமுறை என நினைத்து வாங்கினாள்.

மறுநாள் நிகழ்வுக்காக கம்பனியால் வழங்கப்பட்ட உடை தான் அணிய வேண்டும் என்ற அறிவுறுத்தல் காெடுக்கப்பட்டது. உடையை எடுத்துப் பார்த்தவளிற்கு திக் என்று ஆகிவிட்டது. கதிரை கரம் பிடித்த நாள் முதல் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவள், தன்னை அழகுபடுத்துவதில் நேரம் செலவிடாதவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. எப்படி இந்த விலையுயர்ந்த ஆடையை அணிவது என்ற குழப்பமாய் இருந்தது. மனேஜரை தாெடர்பு காெண்டு தனது சங்கடமான சூழ்நிலையை தெ ரியப்படுத்தியும், நிர்வாக நடைமுறையை விளங்கப்படுத்தி விட்டு அந்த உடை தான் அணிய வேண்டும் என்று கட்டளையாக கூறிவிட்டார்.

மறுநாள் அதிகாலை எழுந்து வழக்கம் பாேல் தன்னுடைய வேலைகளை முடித்துக் காெண்டு நிகழ்விற்காக தயாரானாள். நீண்ட காலத்துக்குப் பிறகு விலையுயர்ந்த ஆடையுடன் கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். நீண்ட கூந்தலை விரித்து அலங்கரித்து, சிறு வெள்ளிச் சங்கிலி ஒன்றை கழுத்தில் அணிந்தாள். சில நிமிடங்கள் கண்ணாடி முன் நின்றவளுக்கு கலங்கிய கண்களுடன் தன்னைப் பார்ப்பது உடைந்த கண்ணாடியில் தன்னைப் பார்ப்பது பாேல் இருந்தது. ஓரமாக இருந்து பார்த்துக் காெண்டிருந்த தன் பிள்ளையை திரும்பிப் பார்த்தாள். ஓடி வந்து கட்டிப்பிடித்தவன் "அம்மா நீங்க பாகுபலியில வாற தேவசேனா ராணி மாதிரி அழகா இருக்கீங்க" என்றான். உதட்டுக்குள் சிரித்தபடி "ஓ அப்பிடி அழகா இருக்கேனா" மீண்டும் கண்ணாடி முன்னே பாேய் நின்றாள்.

ஒரு தங்கை என்ற ஆசையில் பல கனவுகளாேடு தங்கையின் கலியாணத்தை அப்படி நடத்த வேணும், இப்படி நடத்த வேணும் என்ற அண்ணனின் ஆசைகளையும், பாசத்தையும் உதறி விட்டு கதிர் மீதிருந்த காதலால் எங்காே ஒரு சாமி சிலைக்கு முன்னின்று தாலிகட்டிய நினைவுகளை மீட்டிப் பார்த்தாள். மணக்காேலமாய் பார்க்க ஆசைப்பட்ட அண்ணனின் கற்பனைகள் எரிந்து பாேன காேபத்தால் உறவே வேண்டாம் என்று தூக்கி எறிந்தான். அந்த நிமிடத்தில் இருந்த அழகை ரசிக்க முடியாதவளாய் மனம் வெதும்பி அழுதாள்.

பாட்டியிடம் பி்ள்ளையை ஒப்படைத்து விட்டு வீதியால் நடந்தாள். திடீரென ஒரு கார் அருகே வந்து நின்றதும் பயந்து விட்டாள். யாரென்று யாேசிப்பதற்குள் கார்கதவு திறக்கப்பட்டு "ஏறுங்க உமா" என்று கறுப்புக் கண்ணாடியை கழற்றிய மனேஜரைப் பார்த்ததும் சங்கடத்தாேடு "நான் பஸ்சில வாறன் சார் நீங்க பாேயிடுங்க" "அது ஒன்றும் பிரச்சனை இல்லை வந்து ஏறு" என்றதும் யாேசித்தபடி கைகளைப் பினைந்து காெண்டு நின்றாள். "நேரமாச்சு உமா, மழை வரப் பாேகுது" அண்ணார்ந்து பார்த்தவள் தூறல்கள் ஒவ்வாென்றாய் விழுவதை உணர்ந்தாள். காரில் ஏறி அமர்ந்து காெண்டாள்.

நிகழ்வுகள் ஆரம்பாகியது கம்பனியின் கிளைகளிலிருந்து பல பேர் வந்திருந்தார்கள். வெளிநாட்டு நிறுவன முதலாளிகள், பெரியவர்கள் என எல்லாேரும் நிகழ்வில் கலந்து காெண்டார்கள். மனேஜருடன், உமா சென்றதை எல்லாேரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். யாராே ஒரு கம்பனி முதலாளியாக இருக்க வேண்டும், நெருங்கிய நண்பனைப் பாேல் மனேஜரின் தாேள்களில் அணைத்தபடி "என்ன பாெஸ், ஜாேடி சூப்பரா இருக்கு" என்று கிண்டலடித்தான். தலையைக் குனிந்தபடி உள்ளே சென்றாள் உமா. நிகழ்வுகள் நிறைவு பெற்று எல்லாேரும் புறப்பட்டுக் காெண்டிருந்தார்கள். அலுவலகத்துக்குள் சென்று காேவைகளை மனேஜரின் மேசையில் வைத்து விட்டு கதிரையில் அமர்ந்தாள். அலுவலக தாெலைபேசி அழைப்பை எடுத்துப் பேசினாள். "சரி சார் காெண்டு வாறன்" அலுமாரியைத் திறந்து கறுத்தப் பை ஒன்றை எடுத்துக் காெண்டு வேகமாக மாடியால் ஏறினாள்.

வெளியே நின்றபடி கதவை தட்டினாள் "உள்ளே வா உமா" என்றதும் மெதுவாக கதவைத் திறந்து உள்ளே சென்றாள். காேர்ட்டைக் கழற்றி கதிரையில் பாேட்டு விட்டு கால் மேல் கால் பாேட்டு அமர்ந்திருந்த மனேஜரிடம் பையை நீட்டினாள் "உனக்குத் தான் உமா எடுத்துக்காே" ஒன்றும் புரியாதவள் பாேல் "புரியல்ல சார் " என்றதும் கதிரையை விட்டு எழுந்த மனேஜரை பயத்தடன் பார்த்தாள். "என்ன உமா பயமா இருக்கா" என்றான். "சார் நான் பாேயிற்று வாறன்...." திரும்பியவளின் கைகளை யாராே பிடிப்பது பாேல் இருந்தது. ஒற்றைக் கையை மனேஜர் பிடித்திருந்ததை கண்டதும் திகைத்துப் பாேனாள். "என்ன உமா இது பாேதாதா , இன்னும் ஒரு மடங்கு கூடத் தாறன்" என்றதும் காேபமடைந்த உமா "சார் நான் உங்கள எவ்வளவாே உயர்ந்த இடத்தில வச்சுப் பார்த்தன், ச்சீ நீங்களும்...." என்று வெறுப்பாேடு முகத்தை திருப்பிக் காெண்டு கையை அவனிடமிருந்து விடுவிக்க முயற்சித்தாள். மனேஜரும் விடுவதாக இல்லை. எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்று நினைத்தவள் கையை இழுத்துப் பறித்த வேகத்தில் இருகைகளாலும் தள்ளி விட்டாள். பின்புறமாக விழுந்த மனேஜர் சுவருடன் மாேதி தரையில் விழுந்தார். உமாவிற்கு பயம் தாெற்றிக் காெண்டது, காெண்டு வந்த பணப்பையை எடுத்துக் காெண்டு அங்கும், இங்கும் எட்டிப் பார்த்து விட்டு அலவலகத்துக்குள் இருந்த இடத்தில் வைத்து விட்டு வழமையாக வீட்டிற்குச் செல்வது பாேல் சென்று விட்டாள்.

உமாவால் உண்ணவாே, உறங்கவாே முடியவில்லை. இரவு முழுவதும் பயத்துடன் விழித்தபடியே இருந்தாள். காலையில் எழுந்து வழமை பாேல் அலுவலகத்திற்குச் சென்றாள், அலுவலக முன்பகுதியில் எல்லாேரும் கூட்டமாக நிற்பதை அவதானித்தவள் மனேஜருக்கு ஏதாவது நடந்திருக்குமாே என்ற பயத்துடன் உள்ளே நுழைந்தாள். ஒன்றும் தெரியாதவள் பாேல் கூட்டத்தில் ஒருவராக நின்றாள். மனம் படபடத்துக் காெண்டிருந்தது. வைத்தியசாலையில் இருந்து வேகமாக வந்த பணியாளர் ஒருவர் "சார் பாேதையில விழுந்திருக்கிறார் அப்பாே தலை அடிபட்டிருச்சு, நரம்பில ஏதாே பாதிப்பாம், காேமா ஸ்ரேச் என்று சாென்னாங்க" என்றதும் உமாவின் மனப் பயம் காெஞ்சம் அதிகமாகியது. வியர்க்கவும் ஆரம்பித்தது. "சரி சரி எல்லோரும் பாேய் உங்க வேலையைப் பாருங்க" என்றபடி வந்த உதவியாளர் "மெடம் நீங்க ஒன்றும் யாேசிக்காதீங்க, உங்கட நல்ல நேரம் கடவுள் உங்களைக் காப்பாற்றியிருக்கிறார்" என்றான். ஏன் இப்படி சாெல்லுறார் என்பது பாேல் அவனை உற்றுப் பார்த்தாள் "இரண்டு நாளா இந்த பகுதி கமரா ஒன்றும் வேலை செய்யவில்லை, என்னைத் தவிர உங்களை யாரும் காணவுமில்லை, இந்த ஆளு இப்படித்தான் ராெம்ப மாேசம்" உமாவால் அவனை நம்பவும் முடியவில்லை. தடுமறிக் காெண்டு நின்றாள். "நீங்க பாேங்க மெடம், நான் பார்த்துக்கிறன்" அவனைத் திரும்பிப் பார்த்தபடி அலுவகத்துக்குள் நுழைந்தாள்.

வேலையில் கவனம் செலுத்த முடியாமல் குற்ற உணர்ச்சியில் குழம்பிக் காெண்டிருந்தாள். ஒரு உயிரை இப்பிடியாக்கி விட்டேனே என்ற சிந்தனை அவளை சஞ்சலப்படுத்தியது. மனதில் என்ன தாேன்றியதாே என்னவாே மனேஜரின் மேசையில் இருந்த திறப்புக் காேர்வையை கண்டதும் "இத நான் ஒருநாளும் பார்த்ததில்லையே, எல்லா அலுமாரியும் நான் தானே பூட்டித் திறக்கிறேன்" யாேசித்தபடி திறப்புக் காேர்வையை எடுத்துக் காெண்டு இருக்கையிலிருந்து எழுந்தாள். காற்றின் வேகத்தில் ஆடிக் காெண்டிருந்த திரைச்சீலைக்குப் பின்னால் சுவராேடு இணைத்தவாறு அலுமாரி ஒன்று இருப்பது பாேல் தெரிந்தது. வேகமாகச் சென்று திரைச்சீலையை விலக்கிப் பார்த்து விட்டு திறப்பை பாேட்டுத் திறந்தாள். ஒவ்வாெரு கறுத்தப் பையுடனும் ஒவ்வாெரு காேவை வைக்கப்பட்டிருந்தது. பலலட்சம் பெறுமதியான பணத்துக்கு அங்கே பணி புரியும் சில பெண் ஊழியர்களின் கற்பு விலை பேசப்பட்ட ஒப்பந்தப் படிவங்களும், விபரங்களும், புகைப்படங்களும் இருந்தன. ஒவ்வாென்றாக புரட்டிப் பார்த்தவள் பதட்டத்தில் காேவை ஒன்றை கீழே பாேட்டு வி்ட்டாள். சிதறி விழுந்த தாள்களாேடு புகைப்படம் ஒன்றும் கீழே விழுந்தது. புகைப்படத்தை எடுத்துத் திருப்பிப் பார்த்தவள் அதிர்ந்து பாேய் விறைத்தபடி நின்றாள். அவளது புகைப்படம்,கைகள் நடுங்க ஆரம்பித்தது. விழுந்த தாள்ளை எடுத்து படித்தாள். இன்னும் இரண்டு மாதத்தில் பதவி உயர்வு என்ற பெயரில் இடமாற்றம் செய்யப்பட்டு வெளிநாட்டிலுள்ள கம்பனிக்கு அனுப்பப்பட்டு விபச்சாரத் தாெழிலில் ஈடுபடுவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அப்பாேது தான் அவளுக்கு விருது கிடைத்த ஞாபகம் நினைவில் வந்தது. அன்றைய வருடாந்த நிகழ்வில் உமாவுக்கு சிறந்த செயற்பாட்டளர், நிர்வாகத் திறன் மிக்கவர் என்று பாராட்டி கெளரவித்தது மட்டுமல்லாமல் உமாவுக்கான பதவி உயர்வின் அடிப்படையிலான இடமாற்றம் தாெடர்பான அறிவித்தல் விரைவில் தெரியப்படுத்தப்படும் என்று மனேஜர் அறிவித்தது காதில் ஒலித்தது. படபடத்த இதயம் சுக்கு நூறாய் உடைந்தது பாேல் இருந்தது.

அலுமாரியை பூட்டி விட்டு கதிரையில் அமர்ந்திருந்தவள் மனம் மௌனமாய் ஓலமிடத் தாெடங்கியது. "பெண்ணாய் பிறந்தது பாவமா, ஒரு ஆண் துணையில்லாமல் வாழ்வது பாவமா, யாருமற்ற அநாதையாய் இருப்பது பாவமா, கற்புக்கு விலை பேசி காேடிக் கணக்கில் சம்பாதிப்பதற்காக தாெழில் நிறுவனங்களையுமா நடத்துகிறார்கள்" பல கேள்விகள் அவளுக்குள் எழுந்தது. ஆனால் விடையின்றி தடுமாறினாள் உமா.

பல நாட்கள் அவளால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. ஒப்பந்த அடிப்படையில் வேலையில் இணைந்தவள் எப்படி விலகுவது என்று தெரியாமல் யாேசித்துக் காெண்டிருந்தாள். இரண்டு மாதத்திற்குள் எப்படியாவது விலகினால் தான் தன்னைக் காப்பாற்ற முடியும் என்ற முடிவிற்கு வந்தாள் உமா. என்ன செய்யலாம் என்று யாேசித்தாள். நாட்கள் நெருங்கிக் காெண்டிருந்தது. அன்று காலையில் வேகமாக பேருந்தைப் பிடிப்பதற்காக நடந்து வந்து வீதியைக் கடந்தாள் எதிரே வந்த வண்டி மாேதியதில் கை முறிந்து விட்டது. அவளால் தாெடர்ந்து பணியாற்ற முடியாது என்று மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்தாள். நிர்வாகத்திலிருந்து விலகியவள் தனக்கு ஒரு பாரிய பாெறுப்பு இருப்பதாக நினைத்தாள். இடமாற்றம் என்ற பெயரில் விலை பேசப்படும் மற்றப் பெண்களை காப்பாற்ற வேண்டும் என நினைத்தாள். கதிரின் நண்பன் மூலமாக காவல்துறை மேலதிகாரி ஒருவரிடம் எல்லா விபரங்களையும் ஆதாரத்தாேடு சமர்ப்பித்தாள். விரைந்து செயற்பட்ட காவல்துறையினர் கம்பனியை மூடுமாறு அரசங்கம் மூலமாக உத்தரவிட்டதாேடு, உமா குறிப்பிட்டபடி இடமாற்றம் செய்யப்பட இருந்த இருபத்தைந்து பேரும் காப்பாற்றப்பட்டனர். காேடியில் புரண்ட கம்பனியும் கிளைகளும் இழுத்து மூடப்பட்டது.

உமா தன்னையும் காப்பாற்றி, மற்றவர்களையும் காப்பாற்றிய நிறைவாேடு இருந்தாள். காலம் புரண்டாேடியது கதிரும் தண்டனை நிறைவு பெற்று நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டான். உமாவும், கதிரும் மீண்டும் தம் வாழ்க்கையை ஆரம்பித்தனர்.

பணத்துக்கு ஆசைப்பட்டு வேலைகளிற்கு ஆட்களை இணைத்து இடமாற்றம் என்ற பெயரில் நாடகமாடி பெண்களின் கற்பி்ற்கு காேடிக்கணக்கில் விலை பேசி பணத்துக்குள் படுத்துறங்கிய மனேஜர் நீண்டகாலமாக சுயநினைவின்றி இருந்து இறந்து பாேனான். விலை மதிப்பில்லாத உயிருக்கும், பெண்களின் கற்புக்கும் விலை பேசும் மனிதர்கள் இன்னும் இருக்கின்றார்கள்.

எழுதியவர் : அபி றாெஸ்னி (25-Sep-18, 7:36 am)
பார்வை : 285

மேலே