விதியென்ற விந்தை

நானாக கேட்டுப்பெற எனக்கும் வாயில்லை
நீயாக தருவாயென நினைத்ததும் நியாயமில்லை!!
கொடுத்தே பழகிய குடியில் பிறந்ததால்
கேட்காமலே போனேன் பெண்ணே உன்காதலை !!

மனதில்நின்ற உன்னை மறந்ததாய் காட்டிக்கொண்டு
மணமேடை தன்னிலே மௌனமாய் நான் !!
கண்களெனும் வாசலிலே கண்ணீர்பூக் கோலமிட்டு
வாழ்த்தொலிக்கும் கூட்டத்தில் கடைசியாய் நீ!!

சிங்கார வதனத்தில் சிறுபுள்ளி பொட்டிட்டு
கூரான மூக்கிலோர் சிகப்புக்கல் முத்திட்டு
சீரான வடிவெடுத்து சிறப்பான நடைவைத்து
நேராக வந்ததடி பாழும்விதி பெண்ணாகி!!

போனவெள்ளம் போனபின்னே புலம்புவதில் இலாபமென்ன??
ஆனதெல்லாம் ஆனபின்னே அழுவதிலே நியாயமென்ன ??
நேற்றுவரை இருந்ததுபோல் இன்றுங்கூட இருந்துவிடு
நாளையென்ன ஆகுமென்ற கவலையை மறந்துவிடு!!

நிச்சயிக்க பட்டதெனில் நடந்துதான் தீருமென்னும்
உச்சபட்ச உண்மையை உள்ளத்தில் ஊன்றிவிடு!!
மீதமுள்ள வினைகள்யாவும் தகர்க்கப்போட்ட கணக்கிது
மீதமுள்ள நாட்களை நகர்த்தபோட்ட பிணக்கிது!!

வழியில்லை என்றாலும் வாழ்வதில் நியாயமுண்டு
பழியில்லை என்றாலும் பாதைமாறத் தகுமோ??
விழிபார்த்துப் பேசினாலும் விளங்கிடுமே உன் எண்ணம்
மொழிசேர்த்து நீபாடினால் பரவிடுமே பொன்வண்ணம்!!!

எழுதியவர் : கார்த்தி கண்ணதாசன் (28-Sep-18, 2:10 pm)
பார்வை : 582

மேலே