ஆத்தாமுக்குழி

பால்வாடிப்பள்ளி
மாலை மணி 4
'படிச்சது போதுண்டா ராமசாமி!
இன்னிக்கு வெள்ளிக்கிழம...
உன் ஆத்தா சுடுற
முக்குழி வாசம் எனக்கு வருது'
சொன்னுச்சு கரும்பலகை.

ஆமா..ஆமா..
அய்யோ...
இந்த வீட்டு மணிய அடிங்கடா..
வீட்டுக்குப் போவணும்..
ஆத்தா தேடும்..

சுடுற முக்குழியச்
சூதானமாத் திங்கணும்..
ஆறுன முக்குழி
ஆறேழுத் திங்கணும்..
இனிப்பு முக்குழி...உப்பு முக்குழி..
ரெண்டும் திங்கணும்..

அப்பன் படத்துக்கு முன்னாடி
ரெண்டு ரெண்டு வச்சுட்டுக்
கண்ணக்கசக்கும் என் ஆத்தா..
அப்புறம்...

மாமா வீட்டுக்குக் கொடுக்கச்சொல்லி
இலையில வச்சுத்தரும் என் ஆத்தா..
அப்புறம்...

'மணி' கத்திக்கிட்டே இருக்கும்..
அதுக்கும் ரெண்டு வச்சுரும் என் ஆத்தா..

ஆத்தா...முக்குழி..
முக்குழி...ஆத்தா..

அய்யோ...இந்த வீட்டுமணிய..
டிங்டிங்டிங்டிங்டிங்டிங்..

அடிச்சுப்புட்டாண்டோய்...
டேய்..இடிக்காதிங்கடா..
தள்ளு..தள்ளு..
டேய்...கரண்டிவாயா..தள்ளுடா...
'டேய்...ராமசாமி..வாடா..நடந்து போவலாம்'..
'அடப்போடா...எனக்கு வேல இருக்கு'ன்னு
ஒரே ஓட்டந்தான்..
மணியும் ஓடியாந்துருச்சு..

வீடு வந்துருச்சு..
கதவு மூடியிருந்துச்சு...
ஆத்தா..ஆத்தா...

தோளுல விழுந்துச்சு
மாமாவோட கையி..

'என் அப்பு...
இன்னியோட ஒரு மாசமாச்சுடா..
உன் ஆத்தா சாமிக்கிட்ட போயி'

எழுதியவர் : முகவை சௌந்தர் (6-Oct-18, 12:09 pm)
பார்வை : 106

மேலே