விடியும் வரை போராட்டம்

#விடியும் வரை போராட்டம்..!

சகுனியும் துரியோதனனும்
சகட்டு மேனிக்கு வாழ்ந்த காலம்
அதர்மங்களில் ஊறி
அக்கிரமங்களில் ஊஞ்சலாடி..!

கௌரவர்கள் என்கிற பெயரில்
கௌரவம் தொலைத்தவர்கள்
ஆளுமையும் பாசமும் அற்றவர்களுக்கு
சூட்சி மட்டுமே ஆகி வந்ததாய்..!

பல உயிர்களை தின்ற பிறகுதான்
மகாபாரத போர் வெளிச்சம் கண்டது..

போராட்டம் கலியுகத்தில் மட்டுமில்லை
புராண காலத்திலிருந்தே..!

விடியலுக்கான போராட்டங்களில் எல்லாமும்
உயிர்கள் திரியாக்கப்பட்ட பின்புதான்
நிறைய பேருக்கு வெளிச்சங்கள்..!

தீண்டாமைக்கு எதிரான வைக்கம் போராட்டம்
உப்பு வரி விதிப்பிற்கு
வெள்ளையனை எதிர்த்து போராட்டம்
சுதந்திரத்திற்காய் போராட்டம்
இந்தி மொழி திணிப்பை எதிர்த்து போராட்டம்
இன்னுமின்னுமாய் கணக்கில்லா போராட்டங்கள்
வெற்றி கண்டதெல்லாம் சரித்திர காலம்..!

தலைவர்களின் ஒற்றுமையில்
போராட்டம் பூக்களை தூவியது
வெற்றி மாலை சூட்டியது
விடிந்துவிட்ட பொழுதுகளில்
மகிழ்ந்து களித்தார்கள்..!

நரிகளின்
கூட்டுக் களவாணி ஒப்பந்த ஆட்சியில்
சரித்திரத்திற்கு வழியில்லை
தரித்திரம் மட்டும் குறைவில்லாமல்..!

விவசாய போராட்டம்
சாயம் போனது..!
சில விவசாயிகளின் உயிர் குடித்து..!

நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம்
நீச்சமற்று நோஞ்சானாகி
மரித்தும் போனது
அனிதாவை போலவே..!

மீத்தேன் தடுப்பு போராட்டம்
இன்னும் போராட்டத்தில் இருந்து
மீள முடியாமல் போராளிகள் ...

இப்படியாகத்தான் பல போராட்டங்கள்
விடியலற்ற முடிவிலிகளாய்..!

பதவிக்கான போராட்டம் தமிழ் நாட்டில்
இன்னமும் புரியவில்லை நிறையபேருக்கு
யார் தலைவர் என்றும்
யார் முதல்வர் என்றும்..?

முதல்வர் பதவிக்கான போராட்டமே
இன்னும் முற்றுப்பெறாத போது
மக்களின் போராட்டம்
மக்கிப் போகக்கூடும்..!

அனைத்து விடியலின் குறுக்கிலும்
மடை கட்டப்பட்டுவிட்டது
அரசியல் மடையர்களால்
அடக்கு முறைகளில்..!

வெளிச்சம் வெள்ளமாய் பாயும்
என்கிற நாளுக்காய்
தவம் இருப்பதை விட
மடை உடைக்கலாம் வாருங்கள்
மடையர்களை மண் கவ்வ செய்து..!

எழுதியும் பேசியும் கிழித்தது போதும்
வாய் புளிக்க வாதம் புரிந்தது போதும்
நீசர்களை வதம் செய்வோம் வாருங்கள்
விடியலைத் தேட வேண்டாம்
விடியல் நம்மைத் தேடும்..!

#சொ.சாந்தி

(அருந்தமிழ் கலை இலக்கிய மன்றத்தில் நேற்று 07-102017) நடந்த கவி அரங்கில் வாசித்த கவிதை. தலைப்பினை அளித்து வாசிக்கும் வாய்ப்பினை நல்கிய திரு கனல் மணி சார் அவர்களுக்கும், திரு துருவன் சார் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்)

எழுதியவர் : சொ.சாந்தி (8-Oct-18, 12:48 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 729

மேலே