வெள்ளந்தி மனசு

தொடர்ந்து நான்கு நாட்கள் அலுவலக விடுமுறை.அந்தப் பெண்கள் தங்கும் விடுதியிலிருந்த அனைவரும் உடமைகளை அடுக்கி வைத்து தத்தம் ஊர்களுக்குச் செல்லத் தொடங்கினர். எப்பொழுதும் போல் வார்டன் அனிதாவின் அறிவுரையும் தொடங்கியது.
எல்லோரும் பத்திரமா போயிட்டு வாங்க. பஸ்ல பக்கத்துல உக்காந்துகிட்டு இருக்கிறவங்க கிட்டபேச்சு கொடுக்க வேண்டாம். இங்கேயிருந்து பஸ் ஸ்டாண்டுக்கு ஆட்டோல போகும் போது கவனமா இருக்கணும். நக நட்டல்லாம் கழட்டி பத்திரமா வச்சிக்கிங்க.
வெளியிலிருக்கும் அனைத்து மனிதர்களும் சந்தேகத்துக்கு இடமானவர்கள் போல்பேசிக் கொண்டே போனாள்.
ஊருக்குப் போகும் மன நிலையில் அன்று சமையல் கார சண்முகத்தின் அரை வேக்காடு அரிசிச் சோறும் , ஒரு மடக்கில் கிக் ஏறுவது போல் புளித்திருக்கும் மோரும் கூட மட மட வென்று காலியாகியது.
காயத்ரிக்கு அவளின் ஊரான காரங்காடு போய்ச் சேர எட்டு மணி நேரமாகும். வார்டனின் அறிவுரையை அசை போட்டுக் கொண்டே பேருந்தின் வெளியேபார்த்துக் கொண்டு வந்தவளுக்கு அனைத்தும் வித்தியாசமாகத் தெரிந்தன. அடுத்த நிறுத்தத்தில் இலைக் கட்டுக்கள் ஏற்றப் பட்டன.
அவளுக்கு பின் சீட்டிலிருந்த பார்ப்பதற்கு நாகரிகமானவர் எனத் தோன்றிய நடுத்தர வயது மனிதர் தன் வேலையைத் தொடங்கினார். சீட்டின் இடைவெளியில் கைகளை நுழைத்து அவளின் முதுகைத் தடவுவதும், கால்களால் கால்களை உரசுவதுமாக அவரின்தொந்தரவுகள் எல்லை மீறிக் கொண்டிருந்தன. சீ எவ்வளவு கேவலமான மனிதர்கள். தோற்றத்தை வைத்து யாரையும் எடை போட முடிவதில்லை.
நடத்துனரிடம் சொல்லி இடம் மாறி உட்கார்ந்தபின் கொஞ்சம் நிம்மதி. பேருந்தின் வேகம் அதிகரித்தது. வெளியே தெரிந்த நபர்களும் கடைகளும் வேகமாக எதிர்ப் புறம் கடந்து செல்லத் தொடங்கினர்.
விதவிதமான வாசனைகள், காப்பிப்பொடி, பக்கோடா, வெங்காய மண்டி, மிளகாய் வற்றல் நெடி. ஒன்றை உணரும் முன்புஅடுத்தது. இடை இடையில் திருமண மண்டபத்திலிருந்து பாட்டு, அம்மன் கோவில் கச்சேரி, வில்லுப் பாட்டு. பேருந்தின் வேகத்தைப் போன்றே காயத்ரியின் மனமும் வேகமாகப் பயணித்துக் கொண்டிருந்தது. முகத்திற்கு நேராக வீசிய சில்லென்ற காற்றில் உறங்கிப் போனாள். மீண்டும்கண் திறந்த போது இருட்டிற்குள் எல்லாப் பனை மரங்களும் கால் முளைத்ததுபோல்எதிர்ப்புறம் ஓடிக் கொண்டிருந்தன.
பேருந்தின் ஹார்ன் அடிக்கும் சத்தம் தவிர வேறெதுவுமில்லை. அதிகாலை வீடு போய்ச் சேர்ந்தவுடன்
பிரயாணக் களைப்பினால் உறங்கியவள் பெருங்கூக்குரல் கேட்டு வெளியே வந்தாள்.
கையில் தூக்குச் சட்டியுடன் ஓட்டமும் நடையுமாக அழுது கொண்டே தெருவில் போகும் பெண்ணின் குரல் தான் அது.
மண்ணு தரையில படுத்தா
மனசு நோவுமுன்னு
ஓலப் பாயில படுக்கச் சொல்லி
ஒறங்க வெப்பேனே. ஏ ஆத்தா.....
அது மட்டும் தான் காயத்ரியின் காதில் விழுந்தது. விடாமல் பாட்டு பாடி ஒப்பாரிவைத்துக் கொண்டே போகும் இவளுக்கென்ன பிரச்சினை. மனம் தாங்காமல்அவளின் பின்னே தெரு முனை வரை நடக்க ஆரம்பித்தாள் காயத்ரி.
கீரை வித்துக் கொண்டிருந்த மூக்காச்சி இவளைப் பார்த்தவுடன் என்ன தாயி பயந்திட்டயோ. செல்லத்தாயி கையில தூக்குச் சட்டி கொண்டு போறால. அவ மவன் பள்ளியூடத்துக்கு சாப்பிடாம போயிருப்பான். அதான் ஒப்பாரி வைக்கா.
அவளுக்கு வெள்ளந்தியான மனசு. இது கிராமமில்ல சுகமோ துக்கமோ மனசுல வச்சுக்கிட மாட்டோம். சத்தமா கத்தி சொல்லிடுவோம். அதான் ஆரோக்கியமா நோவு நொடியில்லாம இருக்கோம். உங்க பட்டணத்துல சக மனுசங்கள கூட விரோதியா பாப்பாங்கன்னு சொல்லக் கேட்டுருக்கேன்.
கீர கீர வியாபாரத்தைத் தொடர்ந்தாள் ஆச்சி.
இந்த வெள்ளந்திமனம் அனைவருக்கும் இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். நகரத்து அவசர வாழ்க்கையில் மன அழுத்தம் என்ற ஒன்று இல்லாமலே போய்விடும். யோசித்துக் கொண்டே வீடு நோக்கி நடந்தாள் காயத்ரி.

எழுதியவர் : நாங்குநேரி வாசஸ்ரீ (10-Oct-18, 6:36 pm)
பார்வை : 216

மேலே