உடனே விழி தமிழா

உடனே விழி தமிழா

கண்கட்டு வித்தையிலே
காலங்கள் ஒடுதன்றோ
கட்டவிழ்ப் பாரின்றி
அமா வாசை ஆளுதன்றோ…!

துட்டர்கள் துன்மதியோர்
இட்டமாய் ராச்சியங்கள்- துயர்
பட்டுத்தான் துடிக்கின்றோம்
விட்டோடட்டும் ஏழரைகள்…!

தமிழர்கள் உடமை எல்லாம்
கண்டவன் கைப்பொருளாய்
அடமானம் இடுகின்றார்
வட நாடே சேட்டுக் கடை..!

மலை வளம் மண்வளமும்
விலையின்றி களவாட
கொலைவெறி குறுக்குவழி
நிலை மாறிட இமைகள் விரி..!

திருட்டுப் பூனைகள் வாய்
தமிழ் நாடு அப்பமடா
உருட்டுக் கட்டை எடு -, பூனைகள்
ஓட்டிட மிஞ்சுமடா..!

கல்விச் சாலையிலும்
பாலியல் தொல்லையடா
பெண்ணுக்கெதிரி இங்கே
பெண்ணாய்ப் போனதடா..!

கூட்டல் கழித்தல் என்று
பாடம் சொன்னதெல்லாம்
கூட்டிக் கொடுக்குதடா - கூறு கெட்டஜென்மமடா..!

விழிக்கதவை பூட்டிவிட்டு
விடியலைத் தேடுகிறோம்
ஒளிக்கே வழி அடைத்து
இருட்டினில் வாடுகிறோம்..!

எவையும் நடக்கட்டுமே
எனக்கென்ன போடா போ
இருந்திட இடர் விடுமா
தலையிட தலை நிமிர்வோம்..!

ஒரு குரல் ஒலித்திடுமோ
பல குரல் இடிமுழங்கும்
மெத்தனம் எறிந்துவிட்டு - மோடி
வித்தைகள் முறியடிப்போம்..!

விடியலை எதிர்நோக்கும்
விழியிரண்டின் கதவு உடை
விழி திறக்க வெளிச்சம் வரும்
வழி பிறக்க வாழ்வு நலம்..!

#சொ.சாந்தி

(பைந்தமிழ்ச் சோலை இலக்கிய அமைப்பின் நிகழ்ச்சியில் வாசிப்பதற்காக எழுதிய கவிதை. தலைப்பினை அளித்த மரபு மாமணி திரு மா. வரதராசன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்)

எழுதியவர் : சொ.சாந்தி (10-Oct-18, 10:47 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 595

மேலே