உம்பர்க் கிடந்துண்ணப் பண்ணப் படும் – நாலடியார் 37

நேரிசை வெண்பா

மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால்
எத்துணையும் ஆற்றப் பலவானால் - தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகா தும்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும். 37

- அறன் வலியுறுத்தல், நாலடியார்

பொருளுரை:

மக்கட் பிறவியினால் செய்யத்தக்க பெரும்பயனான நற்செயல்களை எண்ணிப் பார்க்கும் போது எப்படிப் பார்த்தாலும் மிகப் பலவாகுதலால், பல கருவிகளோடு கூடிய இவ்வுடம்புக்கே உதவிகள் செய்து கொண்டிராமல் மேலுலகத்தில் எளிதாக இருந்து இன்பம் நுகரும் பொருட்டு உயிருக்கான அறவினைகளே மிகவும் செய்து கொள்ள வேண்டும்.

கருத்து:

கருவியாக வந்த உடம்புக்கே காரியங்கள் செய்து கொண்டிராமல், உயிருக்கான காரியங்களையே மிகவும் செய்து கொள்ளல் வேண்டும்.

விளக்கம்:

உயிர்க்குரிய அறச்செயல்கள் ‘பெரும்பயன்' எனப்பட்டன. உடம்பிற்குரிய சிறுபயனைத் தழீஇயிற்று. உடம்பிற்குரிய சிறு செயல்களைச் செய்தற்கிடையே உயிர்க்குரிய எவ்வளவோ மிகப் பலவான பெருஞ் செயல்களையுஞ் செய்து கொள்ளலாமென்றற்கு, ‘எத்துணையும் ஆற்றப் பல' என்றார்.

ஆற்ற - மிக; ஆனால் - ஆதலாலென்னும் பொருட்டு.

உடம்பு, தன் காரியங்களைச் செய்துகொள்ளுதற்கு, இதயப் பை, மூச்சுப்பை, இரைப்பை, முதலிய அகக் கருவிகளும்; நா, பல், கை, கால், கண், காது முதலிய புறக்கருவிகளும் பெற்றிருக்கின்றது;

இங்ஙனங் கருவிகள் தொக்க உடம்பாயிருத்தலால் அவ்வுடம்பு தானே தன் காரியங்களைச் செய்துகொள்ளும் என்றற்குத் ‘தொக்க உடம்பு' என்று நினைவு கூட்டினார்;

சிறப்பாகத் தாமே இயலுகின்ற அகக் கருவிகளை நினைந்தே அங்ஙனங் கூறப்பட்டது. ஆதலால், உடம்புக்கே உதவிசெய்து கொண்டிருக்க வேண்டிய கட்டாயமில்லை; செய்யவேண்டுவது உயிருக்கே என்று அறிவுறுத்தப்பட்டது.

உடம்பு அதனியற்கையில் இயங்குமாறு விழிப்பாக நடந்துகொண்டால், அதன்பொருட்டுச் செயற்கையாக முயற்சிகள் எடுக்க வேண்டுங் கட்டாயமில்லாமற் போம் என்னுங் கருத்தும் இதுகொண்டு உணர்ந்து கொள்ளப்படும். ‘இடையறாமல் இங்ஙனம் செய்கை முயற்சிகளைச் செய்துகொண்டு வருந்தற்க,' என்றற்கு ‘ஒழுகாது,' என்றார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Oct-18, 3:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35
மேலே