கட்டண உரை ------------------------------–ஓர் எண்ணம்

நான்காண்டுகளுக்கு முன்பு ஒருமுறை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது உரைகளுக்குக் கட்டணம் வைப்பதைப்பற்றிச் சொன்னேன். உரைகேட்க வருபவர்கள் ஒரு கட்டணத்தைச் செலுத்தி நுழையவேண்டும். அதற்கு உடனடியாக எதிர்ப்பு வந்தது. அது ஒரு வகை அத்துமீறல் என்ற கருத்து உருவானது. பலர் ஆவேசமாக அது எழுத்தாளரின் நன்மதிப்பைக் குறைக்கும் என்றனர்.

என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமே என அவ்வெண்ணத்தை குழுமத்தில் இட்டேன். அங்கும் பெரும்பாலானவர்கள் ஒவ்வாமையையே குறிப்பிட்டார்கள். அவர்களின் உணர்வுகளை இப்படி தொகுத்துக்கொள்கிறேன்.
இ. இலக்கியம் ஒரு கருத்துச் செயல்பாடு. அது மக்களை நோக்கிச் செய்யப்படவேண்டும். அதற்கு கட்டணம் போன்ற நிபந்தனைகள் இருக்கலாகாது


அ. எழுத்து, பேச்சு ஆகிய இலக்கியப்பணிகள் ஒருவகையான சேவைகள். எழுத்தாளன் ஆசிரியனின் இடத்தில் இருக்கிறான். அவன் கட்டணம் கோரும்போது அந்த உறவு வணிகமாக ஆகிவிடுகிறது. கேட்கவருபவன் நுகர்வோராக ஆகிறான். ஆகவே அவன் ஆணையிட ஆரம்பிக்கிறான். அது எழுத்தாளனுக்குக் கௌரவம் அல்ல

ஆ. கட்டணம் செலுத்தி உரைகேட்பது என்பது இன்னமும் இங்கே வழக்கத்தில் இல்லை. புதிய வழக்கமாக அதை உருவாக்க முடியாது. இலவசமாக உரைக்கு வருந்தி வருந்தி அழைத்தும்கூட கூட்டங்களுக்கு மக்கள் வருவதில்லை. கட்டணம் என்றால் எவருமே வரமாட்டார்கள்.

இ. இலக்கியம் ஒரு கருத்துச் செயல்பாடு. அது மக்களை நோக்கிச் செய்யப்படவேண்டும். அதற்கு கட்டணம் போன்ற நிபந்தனைகள் இருக்கலாகாது

ஏன் கட்டணக்கூட்டம் என்ற எண்ணம் வந்தது என்றால் அதற்குச் சில காரணங்கள் உள்ளன. ஒன்று, இலக்கியக்கூட்டம் என்ற பேரில் இங்கே நிகழும் பொறுப்பின்மை. இதை சுதந்திரம் என்று அபத்தமாக விளங்கிக்கொள்கிறார்கள். எதிரே வந்து அமர்ந்திருப்பவன் தன் வேலையைவிட்டு, பயணம்செய்து வந்திருக்கிறான், அவனிடம் நமக்கு ஒரு கடப்பாடு உள்ளது, அவனுக்கு நம்மால் முடிந்த சிறந்த ஒன்றை அளிக்கவேண்டும் என்ற எண்ணமே பலருக்குக் கிடையாது. ஒரு நிகழ்ச்சியை நடத்தவேண்டும், அவ்வளவுதான். ஆகவே தோன்றியபடி கூட்டங்கள் நிகழ்கின்றன

பெரும்பாலான மேடைகளில் ஏராளமானவர்கள் பேசுகிறார்கள். அவர்களில் பலர் எந்தவகையான தயாரிப்பும் அற்றவர்கள். பொதுமேடையில் பேசுவதற்கான பொறுப்பும் இல்லாதவர்கள். கணிசமானவை பொறுமையைச் சோதிக்கும் உரைகள். பயிலா உரைகளைக்கூட பொறுத்துக்கொள்ளலாம், எந்தவிதமான அறிவார்ந்த தயாரிப்பும் இல்லாமல், அந்த மேடைக்குப் பொருத்தமும் இல்லாமல் ஆற்றப்படும் உரைகள் நம் மீதான வன்முறையாகவே ஆகிவிடுகின்றன. மேடையை அசட்டு விளையாட்டாக ஆக்கிக்கொள்ளுதல், மேடையிலிருப்பவர்கள் ஒருவரை ஒருவர் புகழ்பாடுதல், வெற்றுச்சம்பிரதாயப்பேச்சுக்கள் என ஒரு கேலிக்கூத்து நிகழ்கையில் அந்த அரங்கில் சென்று அமரும் ஒருவர் பயனற்ற ஒன்றைச் செய்வதாக உணர்கிறார்.

இன்னொருபக்கம் இங்கே மேடையுரை என்பது பொதுவான அரங்குக்கான கேளிக்கையாக மாறிவிட்டிருக்கிறது. நகைச்சுவை வெடிகளை உதிர்த்தபடி, அவ்வப்போது நாடகீயமான சில கதைத்துணுக்குகளைக் கோத்தபடி, பெரும்பகுதி அரட்டையாகவே செல்லும் உரைகள். அவற்றுக்குப் பல்லாயிரம் கேள்வியாளர்கள் உள்ளனர். அது வேறு ஒரு பாதை. அதற்கும் அறிவியக்கத்துக்கும் தொடர்பில்லை. நான் குறிப்பிடுவது இலக்கியம், அழகியல், தத்துவம், ஆன்மீகம் சார்ந்து நிகழ்த்தப்படும் அறிவார்ந்த உரையை. அவை நிகழவே முடியாத சூழல் மெல்லமெல்ல உருவாகியிருக்கிறது.

கட்டணக்கூட்டம் என்பது இதற்கு ஒரு தீர்வு என நான் கருதினேன். ஏனென்றால் அங்கே கேட்கவருபவர் பணம் கொடுக்கிறார். ஆகவே அவருக்கு ஓர் உரிமை உள்ளது. அவர் வெறும் விருந்தாளி அல்ல. அந்த உரைக்கு அவரும் பொறுப்பேற்றுக்கொள்கிறார். அதேபோல உரையாற்றுபவரும் எதையேனும் சொல்லிவிட்டுச் செல்லமுடியாது. அது அவர் ஏற்றுக்கொண்ட பணி. அதற்காக அவர் சற்றேனும் உழைக்கவேண்டும். பொறுப்புடன் முடிந்தவரைச் சிறப்பாக உரையாற்றவேண்டும். இந்த ஒப்பந்தம் ஒர் உறுதிப்பாட்டை அளிக்கிறது. உரைகேட்கச் செல்வது வீணாகப்போக வாய்ப்பில்லை என்று.

இன்று கணிசமானோர் கூட்டங்களுக்கு வராமலிருப்பது கூட்டங்கள் எப்போது தொடங்கும் எப்போது முடியும் எனத் தெரியாமலிருப்பதனால்தான். கூட்டத்தில் உருப்படியாக ஏதேனும் பேசப்படுமா அல்லது வெற்றுச்சடங்காக முடிந்துவிடுமா என்ற ஐயம் எப்போதும் உள்ளது. கட்டணக்கூட்டங்கள் அந்த ஐயத்தை விலக்கும் வாக்குறுதி ஒன்றை அளிக்கின்றன.

ஆனால் அதற்கு எதிராகச் சொல்லப்பட்ட கருத்துக்களில் முதல்கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. இலக்கியவாதியை ஆசிரியனாக எண்ணுவதும் அதைச்சார்ந்த உரையாடலும் வேறு ஒரு தளத்தில் நிகழவேண்டியவை. மேடையில் அல்ல என்பது என் கருத்து.

ஆனால் இரண்டாவது கருத்துடன் எனக்கு உடன்பாடு உண்டு. ஏனென்றால் இணையதளங்களேகூட இங்கே கட்டணம் வைத்தால் அப்படியே படுத்துவிடுவதே வழக்கம். சினிமாவுக்கு மக்கள் செலவழிக்கிறார்கள் என்றால் அது கேளிக்கை. இலக்கியம் போன்றவற்றுக்குச் செலவழிப்பதை பொதுவாக தமிழர் வீண் என்றே நினைக்கிறார்கள். இலக்கியஆர்வம் கொண்டவர்கள்கூட.

இக்காரணத்தால் அன்றே இவ்வெண்ணம் ஒத்திப்போடப்பட்டது. ஆனால் நண்பர் கிருஷ்ணன் இதை ஒரு பிடித்தமான பேசுபொருளாக நெடுங்காலமாகக் கொண்டிருக்கிறார். சொல்லிக்கொண்டே இருந்தவருக்கு நெல்லை நண்பர் சக்தி கிருஷ்ணனின் ஆதரவு கிடைக்க ஒரு கட்டணக்கூட்டத்தைச் நெல்லையில் அமைத்தாலென்ன என்னும் எண்ணம் ஏற்பட்டது. உற்சாகத்துடன் என்னிடம் அதைச் சொன்னபோது நான் ஆர்வம் காட்டவில்லை. தமிழ்ச்சூழலில் அதற்கு ஆதரவிருக்காது என்பதே என் எண்ணம். ஆனால் அவர்கள் நம்பிக்கையுடன் இருந்தார்கள்

முதன்மையான பேச்சாளர்களை நாடலாம் என்பது என் எண்ணம். ஆனால் அதிலுள்ள சிக்கல் அவர்கள் கடல் அலைபோல கூட்டத்தை எதிர்பார்ப்பார்கள். தீவிரமாக ஓரு கரு குறித்துப் பேசவைக்கலாம் என்றால் இங்கே நிபுணர்கள் என அறியப்படும் பலருக்கு தெளிவாகப் பேசத்தெரியாது. ஒரு தொடக்கமாக நான் பேசலாம் என்று நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு என் பேச்சு குறித்து கொஞ்சம் அவநம்பிக்கை உண்டு. என் உச்சரிப்பு தெளிவானது அல்ல. ஒலிப்பெருக்கியுடன் நான் இன்னமும் ஒத்திசையவுமில்லை. ஆனால் வேறுவழியில்லை

நவம்பர் 10 அன்று நெல்லையில் ஒரு கட்டணக்கூட்டத்தை முடிவுசெய்திருக்கிறார்கள். ரூ 150 கட்டணம். நான் சற்றேறக்குறைய ஒன்றரை மணிநேரம் பேசுவேன். ‘நமது இன்றைய சிந்தனைமுறை உருவாகி வந்தது எவ்வாறு?” என தலைப்பு. சென்ற இருநூறாண்டுகளில் நாம் இன்று சிந்திக்கும் முறையின் பொதுப்போக்குகளும், கருக்களும் எப்படி உருவாகிவந்தன என்று பேசலாமென நினைக்கிறேன். சமகால இந்திய சிந்தனையின் பரிணாமம் என்று சொல்லலாம் . நான் இலக்கியவாதி என்பதனால் இலக்கியத்தின்வழியாகவே இந்த உரை அமையும். ஒரே உரைதான். சரியான நேரத்தில் தொடங்கி முடியும்.

எந்த அளவுக்கு இம்முயற்சி வெல்லும் எனத் தெரியவில்லை. வருந்தத் தக்கதாக இருக்காதென நினைக்கிறேன். சொல்லும்படியான வெற்றி கிடைத்தால் தொடரலாம் என்று தோன்றுகிறதுஜெ
மின்னஞ்சல்

எழுதியவர் : (11-Oct-18, 10:53 pm)
பார்வை : 37
மேலே