மடமொழி வண்ணந்தா - ஐந்திணை எழுபது 64

ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

தெண்ணீ ரிருங்கழி வேண்டு மிரைமாந்திப்
பெண்ணைமேற் சேக்கும் வணர்வாய்ப் புணரன்றில்!
தண்ணந் துறைவற் குரையாய் மடமொழி
வண்ணந்தா வென்று தொடுத்து. 64

- ஐந்திணை எழுபது

- மூவாதியார்

பொருளுரை:

தெளிந்த நீரினைக் கொண்ட கடலின் பெரிய கால்வாய்களில் விரும்பிய அளவு மீன் முதலிய உணவுகளை இரையாக திருப்தியோடு உண்டு அருகிலுள்ள உயர்ந்த பனைமரத்தின் மீது அமைந்த கூட்டில் தங்கும் வளைந்த வாயினை உடைய இணையைப் பிரியாது வாழும் அன்றில் பறவையே!

குளிர்ந்த அழகிய துறைமுகத்திற்கு உரிய தலைமகனிடம் நீசென்று, ”இளமையான மழலைச்சொற்களை உடைய தலைமகளின் களவுப் புணர்ச்சியில் நீ பெற்ற அவளின் கன்னித் தன்மையாகிய அழகினைத் திருப்பிக் கொடுத்து விடு” என்று வேண்டிய மொழிகளை அடுக்கிச் சொல்வாயாக என்று தோழி அன்றில் பறவையிடம் கூறினாள்.

விளக்கம்:

தலைவியுடன் வாழ்வதற்கு வேண்டிப் பொருள் தேடச் சென்ற தலைமகன் திரும்பிவரக் காலம் நீடிப்பதைத் தலைமகள் பொறுக்க மாட்டாமல் வருந்த, அதனைக் கண்ட தோழி மனமுடைந்து கூறியதாகும்.

அன்றில் – ஒருவகைப் பறவை. இது எக்காலத்திலும் தன் துணையுடன் இணைபிரியாது வாழும் தன்மை உடையதாகும். ஆகவே ’புணரன்றில்’ எனப்பட்டது.

அன்றில் என்பது பனைமரத்தில் வாழும் பறவை. மழைக்காலத்தில் தம் இணையை விட்டு நீங்காமல் தழுவிக் கொள்ளும் தன்மையன இவை. ஆங்கிலத்தில் 'Black Ibis' என்று அழைக்கப்படும் அன்றில் பறவை கூரிய, நீண்ட, வளைந்த அலகினை உடையது. எனவே 'அரிவாள் மூக்கன்' என்றும் அழைப்பார்கள். இறக்கையின் மேல் வெண் திட்டினையும், தலையின் மேல் சிவப்பு நிறத் திட்டினையும் உடையது. பெரும்பாலும் பனை அல்லது தென்னை மரங்களின் மேலே வசிக்கும். விவசாய நேரங்களில் மருத நில வயல் வெளிகளில் கூட்டமாக மேயக் காணலாம். இதற்கு இணையாக வட மாநிலங்களில் காணப்படும் 'Sarus Crane' எனும் பறவையைக் குறிப்பிடுவார்கள். இந்தப் பறவை தன் இணையோடு ஆடும் நடனம் அவ்வளவு பிரசித்தம்!

மடமொழி - இளமையான மழலைச்சொற்களையுடைய தலைமகள், வண்ணம் – அழகு

வரைவிடைப் பொருட்பிரிவில் தலைமகன் நீட்டித்ததால் தோழி அன்றிலிடம் கூறியது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Oct-18, 12:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 65

சிறந்த கட்டுரைகள்

மேலே