வேண்டுமே காக்கை கடிவதோர் கோல் – நாலடியார் 41

நேரிசை வெண்பா

மாக்கேழ் மடநல்லாய் என்றரற்றும் சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல். 41

- தூய்தன்மை, நாலடியார்

பொருளுரை:

மாந்தளிர் போன்ற இளநங்கையே என்று மாதரை நோக்கிப் பலகாலுங் கூறி உருகும் பெரியோர்கள் அம் மாதராரது தாழ்ந்த சிற்றுடம்பின் இயல்பை எண்ணிப் பாரார்களோ? அவ்வுடம்புக்கு ஓர் ஈயின் சிறகைப் போன்றதொரு தோல் அறுபட்டாலும் காக்கையைத் துரத்தவொரு கோல் வேண்டியிருக்கும்.

கருத்து:

உடம்பு அழுக்குடையதென்று உணர்ந்தொழுக வேண்டும்.

விளக்கம்:

மா - மாந்தளிர்; கேழ்: உவமப்பொருளது. இச்செய்யுள் உடம்பை நோக்கியதாகலின், நல்லாய் எனபதற்குப் பொதுவில் ‘பெண்' என்று உரைத்துக் கொள்ளவேண்டும்.

தாங் காமுற்றும் மாதரார்பால் இங்ஙனம் பல முறையுங் கூறி உள்ளங்கரைந்து குறையிரப்பது தோன்ற ‘அரற்றும்' என்றார். சான்றவர் என்றது, இகழ்ச்சி.

உயிர் புகுந்திருக்கும் இல்லமாதலின், உடம்பு ‘புக்கில்' எனப்பட்டது. ஓர் - சிறிய என்னும் பொருட்டு.

பின் இரண்டடிகளில் யாக்கையின் தூய்தல்லாமை காட்டப்படுதலாலும் உடம்பின் தாழ்ந்த தன்மை தோன்ற இங்கும் ‘நொய்யது' என்றொரு சொல் வந்தமையாலும் மீண்டும் இழிவு தோன்றும்படி ‘துச்சில்' எனப்பாடங் கொள்ளுதல் சிறப்பன்று;

புக்கில் என்னும் பாடம் பொருட் போக்குக்கும் பொருந்தும். மிகச்சிறிய அளவுக்கும் மீந்தோல் நிலைமைக்கு ‘ஈச்சிறகு' கூறினார்.

காகத்தைக் கூறினமையின், புண் மிகுதி தோன்றிற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Oct-18, 9:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 125

மேலே