கட்டண உரை -------------------------------------------கடிதங்கள்--------------------விவாதக் களம்--------------நம் சிந்தனைக்கு

சில ஆண்டுகளுக்கு முன் ஓர் எழுத்தாளருடன் உரையாட சென்றிருந்தேன்.. இன்னும் சிலரும் உடன் இருந்தனர்.. பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே அது பயனற்ற உரையாடல் என தெரிந்து விட்டது.. காரணம் , அங்கிருந்த பலருக்கு ஓர் எழுத்தாளனுடன் எப்படி பேச வேண்டும் என தெரிந்திருக்கவில்லை.. கேள்வி கேட்க சொன்னால் ஒவ்வொருவரும் ஓர் உரை நிகழ்த்தினார்கள்.. எழுத்தாளரிடம் நான் ஒரு கேள்வி கேட்டால் , அவர் பதில் சொல்வதற்குமுன் மற்றவர்கள் ஆளாளுக்கு பதில் சொன்னார்கள் . . ஏமாற்றத்துடன் கிளம்பி வந்தேன்

இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் வரவில்லை என்பது சிலர் கவலை… தேவை அற்ற கூட்டம் வரக்கூடாதே என்பதும் நியாயமான கவலைதான்

உதாரணமாக , உங்களது டால்ஸ்டாய் குறித்த உரை நிகழ்ச்சி மிகச்சிறந்த அனுபவம் கொடுத்தது.. காரணம் அது பொது நிகழ்ச்சியாக இல்லாமல் , வரையறுக்கப்பட்ட அழைப்பாளர்களுக்கான நிகழ்வு.. எனவே வந்திருந்த அனைவருமே தீவிர கவனத்துடன் உரையை கேட்டனர். சக பார்வையாளருக்கு தொந்தரவு தரும் சிறு நிகழ்வுகூட நடக்கவில்லை… மறக்க முடியாத நிகழ்ச்சியாக இருந்தது…

எல்லா நிகழ்ச்சிகளையுமே இப்படி நடத்தினால் நல்லதுதான்.. உண்மையில் ஒரு நுழைவுத்தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் இது போன்ற கூட்டங்களுக்கு பார்வையாளர்களை அனுமதிப்பதே நல்லது,, ஆனால் அது சாத்தியமற்றது.. கட்டண உரை என்பது ,ஆர்வமற்றவர்களை தடுத்து நிறுத்த சிறந்த வழி என்றே நினைக்கிறேன். இதன்மூலம் உண்மையிலேயே தேடலுடன் வருபவனுக்கு நல்லதொரு அனுபவம் கிடைக்கும்

கட்டண உரை என்பது கண்டிப்பாக மேலும் பலரை கூட்டங்களுக்கு ஈர்க்கும் என்றே நினைக்கிறேன்.. கால வரையறை , ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே வருவதால் தேவை அற்ற சலசலப்புகள் இராது என்ற நம்பிக்கை என்பது போல பல காரணங்களால் இதுவரை கூட்டங்களுக்கு வராதவர்கள்கூட இனி வருவார்கள்

பிச்சைக்காரன்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கட்டணக்கூட்டம் என்ற ஐடியா நல்லதுதான். அதை மக்கள் சரிவரப் புரிந்துகொள்ளவேண்டும். கட்டணமில்லாத கூட்டமே உண்மையில் நல்லது. ஏனென்றால் அதில் ஒரு informal தன்மை உள்ளது. அதேபோல moderation இல்லாத கூட்டமே நல்லது.

ஆனால் இங்கே அவை தோல்வியடைகின்றன. என்ன காரணம் என்றால் இங்கே கூட்டத்திற்கு வருபவர்களில் ஒருசாரார் பொழுதுபோகாத வயசாளிகள். எதையாவது கொஞ்சம் வாசித்துவிட்டு அதை எங்காவது சொல்லிவிடவேண்டும் என்று தவிப்பவர்கள். இன்னொரு சாரார் உண்டு. அவர்கள் கொள்கை அடிமைகள். உலகையே மாற்றியமைக்கத்தக்க முடிவுகளை அடைந்துவிட்டதாக நினைப்பவர்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் அதை சொல்லிக்கொண்டிருப்பவர்கள். இந்த இருசாராரும் எங்கேயும் இலக்கியக்கூட்டமே நிகழமுடியாதபடி ஆக்கிவிடுகிறார்கள்.

சரமாரியாகப்பேசுவது, எவரையும் பேசவிடாமல் செய்வது இவர்களின் வழக்கம். தேவையற்றவர்களை அனுமதிக்காமல் மட்டும்தான் இனிமேல் இங்கே கூட்டமே நடத்தமுடியும் என்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டிருக்கிறது. அதற்குக் கட்டனக்கூட்டம் ஒரு வழிமுறை. அதையும் திட்டமிட்டு உடைப்பார்கள். இருந்தாலும் முயன்றுபார்க்கலாம்.

கூட்டங்களில் பயனுள்ளவை பேசப்படவேண்டும், கொஞ்சமாவது படித்துவிட்டு வந்து பேசவேண்டும் என்பதை ஒரு நெறியாக வைத்துக்கொள்ளவேண்டும். என்ன பிரச்சினை என்றால் இங்கே நம்மில் பலருக்கும் informal பேச்சு எங்கே நடக்கவேண்டும் formal பேச்சு எங்கே நடக்கவேண்டும் என்று தெரியாது. informal பேச்சு நிகழவேண்டும் என்றால் அங்கே இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் நன்றாகத்தெரிந்த சின்னக்குழுவாக இருக்கவேண்டும். பொதுவான கேள்விக்காரர்கள் இருந்தால் formal ஆன முறையான உரைதான் தேவை. இது உலகமெங்கும் உள்ள வழக்கம்.

அதேபோல எல்லா இடத்திலும் கேள்வி, உரையாடல், மறுப்பு ஆகியவை நிகழக்கூடாது. மறுத்துரை நிகழவேண்டும் என்றால் அங்கே இணையான வாசிப்பும் அறிவுத்தகுதியும் கொண்டவர்கள் இருக்கவேண்டும். கச்சிதமான moderation இருக்கவேண்டும். தேவையான விவாதங்கள் மட்டுமே நிகழும்படி கண்காணிக்கப்படவேண்டும். அதற்கு முன்னரே தெரிந்த குழுவின் சின்ன வட்டம்தான் சரியாக இருக்கும். முப்பதுபேருக்குமேல் ஆடியன்ஸ் இருந்தாலே விவாதம் சீரிய முறையில் நடக்க வாய்ப்பில்லை. அதற்குமேல் கூட்டமிருந்தால் அவர்களை ஒரே அமைப்பாக, ஒரு total entity யாக கண்டு அவர்களிடம் பேசும் உரைகள்தான் வழக்கம்.

இதையெல்லாம் நான் படித்த கல்லூரியில்கூட தெரிந்துகொள்ளவில்லை. ஆய்வுமாணவனாக இந்தியாவுக்கு வெளியே வந்து ஒரு நல்ல பல்கலையில் படிக்க ஆரம்பித்தபிறகுதான் புரிந்துகொண்டேன். நம் இலக்கியச்சூழலில் இதையெல்லாம் கொண்டுசென்று சேர்க்க இன்னும் நெடுங்காலமாகலாம்

சந்திரசேகர்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தங்களது நீண்ட நாள் வாசகன் நான். அதிகம் உங்களிடம் கடித தொடர்பு இல்லையென்றாலும், உங்களுடன், உங்களை பற்றிய உரையாடல் இல்லாமல் என் நாட்கள் நகர்ந்தது இல்லை. உங்கள் எழுத்துக்களை போலவே, உங்கள் மேடை பேச்சையும், பேட்டிகளையும் தொடர்ந்து கவனித்து வருகிறேன். தற்போது கட்டண உரை பற்றிய அறிவிப்பை பார்த்தேன், மிகுந்த மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாய் நடக்க வேண்டும். மேலும் பல நல்ல பேச்சாளர்களை ஒருங்கிணைத்து இது ஒரு தொடர் நிகழ்வாக வளர வேண்டும் என விரும்புகிறேன். தாங்கள் இந்த முறை தேர்ந்து எடுத்த தலைப்பும் மிகுந்த எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது. சிந்தனையை பற்றி பல இடங்களில் நீங்கள் குறிப்பிட்டு இருந்தாலும், இந்த பத்தி என் மனதில் மிக ஆழமாக பதிந்து உள்ளது.

“ஆனால் மானுட அனுபவங்கள் மட்டுமே மனிதனை மேம்படுத்துமா? மகத்தான அனுபவங்கள் வழியாகச் சென்ற பின்னும் காலியான டப்பாக்களாக இருக்கும் பலரைக் கண்டிருக்கிறேன். அனுபவங்களை ஒருவனின் அகம் சந்திக்க வேண்டும். உள்ளே இழுத்துக் கொண்டு அக அனுபவங்களாக ஆக்க வேண்டும். செரித்துக் கொள்ள வேண்டும். சாதாரணமான அனுபவங்களில் இருந்தே தீவிரமான ஆளுமை வளர்ச்சியைப் பெற்றவர்களும் உண்டு.

அனுபவங்களை உள் வாங்கிக் கொள்ளக் கூடிய, ஆராயக் கூடிய, சாராம்சப் படுத்தி தன்னுடையதாக ஆக்கிக் கொள்ளக் கூடிய அந்த அகச் செயல் பாட்டைத் தான் சிந்தனை என்கிறோம். அனுபவங்களை சிந்தனை இணையான வேகத்துடன் சந்திக்கும் போது சிறந்த ஆளுமை உருவாக்கம் நிகழ்கிறது எனலாம்”

என்னை போல் நேரில் வர வாய்ப்பில்லாது, வெளி ஊர்களிலும், நாடுகளிலும் வசிப்போருக்கு இந்தஉரையை கேட்க நீங்கள் ஆலோசிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். தாங்கள் பேசிய பின் அதன் காணொளியையோ, அல்லது குறைந்தபட்சம் ஒளிப்பதிவு செய்தோ, கட்டணம் கட்டுவோருக்கு அனுப்பினால் மகிழ்ச்சி. இதில் உள்ள சிக்கல், அது இணையத்தில் இலவசமாக வெளியிடபடும் அபாயம் இருப்பது புரிகிறது. ஆனால், இதனால் பயன் அடைபவர்கள் அதிகம் என நினைக்கிறன்.

மதன்.எஸ்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------காணொளி இலவசமாக வரும் என்றால் கட்டணக்கூட்டத்துக்கு வரும் பத்துபேரும் வராமலாகிவிடுவார்கள் அல்லவா?

ஜெ
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
. தங்களின் கட்டண உரை – ஒரு எண்ணம் படித்தேன் .இந்த முயற்சி மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஓன்று .இது குறித்த என் எண்ணங்களை உங்களிடம் பகிர விரும்புகிறேன்

ஏறத்தாழ இருபத்திஐந்து வருடங்கள் உயர் கல்வி நிறுவனங்களில் (பொறியியல் ) ஆசிரியர் பணி என்ற அனுபவத்தில் இந்த கருத்துக்களை பதிவு செய்கிறேன் .முதலாவதாக ஒரு பொருளுக்கு மதிப்பு அதன் விலையை பொறுத்ததே .பெரும்பாலான மக்கள் அதன் தரத்தை விலையை வைத்து தான் மதிப்பிடுகிறார்கள் .உதாரணமாக எனக்கு வரதட்சணை வேண்டாம் என யாராவது சொல்லி பெண் தேடினால் ,அவனுக்கு என்ன குறையோ என்று தான் நினைப்பார்கள் .அவன் அப்பழுக்கில்லாத உத்தமன் என்றாலும் அவனை யாரும் நம்புவதில்லை.ஆதலால் இதை வணிக நோக்கு என்று பார்ப்பதை விட தரம் உயர்த்த ஒரு வழியாக கொண்டால் நன்று .இரண்டாவதாக இத்தகைய உரை நிகழ்த்தும் கூட்டம் நடத்த விரும்புவார்கள் – தங்களின் நண்பர்களை போல – தமிழ் இலக்கியத்தில் பற்றுள்ளவர்களாக சமூக மேம்பாடு நோக்கம் உள்ளவர்களாக தான் இதனை முன்வைப்பார்கள் .அத்தகைய கூட்டங்கள் நடத்தப்பட தேவைப்படும் பணம் தான் Registration fee என ஈட்டப்படுகிறது .நவீன கால கட்டத்தில் இத்தகைய முயற்சிகள் பணம் இன்றி சாதிக்க இயலாது என்பது தான் நிதர்சனம் .

மேலும் எந்த ஒரு கல்லூரியிலும் மாணவர்களின் திறன் /அறிவு மேம்பாட்டு பட்டறைகள் ( SKILLS/KNOWLEDGE ENHANCEMENT WORKSHOPS) நடத்தப்பட்டாலும் பதிவு கட்டணம் உண்டு .மேலும் அதனை கட்டணமில்லா பட்டறை என்றால் மாணவர்கள் அதனை தரமற்றதாக கருதவும் இடமுண்டு .மேலும் பட்டறையில் பங்கு கொள்பவர்களும் ஓசியில் தான் பங்கேற்பு என சிரத்தையின்றி இருப்பதை காணலாம் .ஆதலால் கட்டணம் என்றால் தான் மாணவர்களிடமும் சரி ,ஆசிரியர்களிடமும் சரி ஒரு பற்றுதல் /ஒரு ஈடுபாடு வருவது தவிர்க்க இயலாதது .நான் COURSERA ,NPTEL முதலிய ONLINE PLATFORM களில் கோர்ஸ் செய்திருக்கிறேன் .மிகப்பெரும்பாலானவை கட்டணத்துடன் கூடியவை தான் .உங்களின் வெண்முரசு முயற்சி இத்தகைய MOOC (Massive Open Online Courses) முயற்சிகளை விட பெரியது .ஏனென்றால் வெண்முரசு படிப்பதால் ஏற்படும் அறிவு விரிவையும் /அறிவு விசாலத்தையும் வேறு எதனாலும் பெற்றுவிட முடியாது என்பது எனது நிலைப்பாடு .ஆனாலும் வெண்முரசு அறிமுகம் /உங்களின் இலக்கிய திறன் இன்னும் அதிக எண்ணிக்கையில் மக்களிடம் சேர வேண்டும் .அதனால் நல்லதொரு இலக்கிய பார்வைகள் கொண்ட வாசகர்கள் வட்டம் அதன் ஆரங்களை நீட்டிக்க வேண்டும் .அதற்க்கு கட்டண உரை சால சிறந்தது .

தமிழகத்தில் பள்ளிகளில் /கல்லூரிகளில் உள்ள தமிழாசிரியர்கள் தங்களின் உரையை கவனித்து பின்பு தங்களுடன் உரையாடினாலே போதும் .அதன் மூலம் தமிழக இலக்கியங்கள் குறித்த அவர்களின் எண்ணங்கள் விரிவடையும் /பார்வைக்கோணம் மாறும் என்பது எனது நம்பிக்கை .மேலும் தமிழகத்தில் ஒன்றும் அறியாதவர்கள் கூட EDUCATION CONSULTANCY என்ற பெயரில் EDUPRENEURS ஆக பணத்தை சம்பாதிக்கும் போது,அதனை நீங்கள் ஏன் குறைந்த செலவில் எடுத்து செய்யக்கூடாது என்பது தான் எனது தாழ்மையான கருத்து.இதனால் பலன் அடைய போவது வருங்கால சமுதாயம் தான் இதில் எனக்கு துளி கூட ஐயம் இல்லை .என்னை பொறுத்தவரை உரைகள் மூலமும் /எழுத்துக்கள் மூலமும் வாசகர்களின் மனதில் ஊடுருவும் சாதனை திறன் உள்ளவர் நீங்கள் தான் .நான் அதிகம் படித்தவன் அல்ல .சாண்டில்யன் கதைகள் தான் என் உச்சம் .

ஆதலால் தங்கள் நடத்தும் கட்டண உரைகள் ஒரே நாளில் மூன்று பேர் (90 minutes each ) என்ற அளவில் நடத்தி ,அதில் ஒரே ஒரு உரையாவது பள்ளி /கல்லூரி அளவிலான பாடத்திட்டத்தில் இருந்தாலே போதுமானது ( திருக்குறளில் இருந்து சங்க இலக்கியம் அகநானூறு ,கம்பராமாயணம் ,திருப்புராணம் என யாவும் இதில் அடக்கமே ). உங்களால் எத்தகைய preparation இன்றியும் இது குறித்து நாள் கணக்கில் எடுக்கமுடியும் என்பதை நான் அறிந்திருக்கிறேன் .ஆதலால் இத்தகைய கட்டண உரைகள் ஒரு நாள் அல்லது குறைந்தது ஐந்து நாட்கள் என்ற அளவில் நடந்து ,அதற்க்கு பதிவு கட்டணம் கட்டி பயில/கேட்க வருபவர்களிடம் அதற்க்கான Certificate of Participation என்றால் அது கூடுதல் மகிழ்வை தான் தரும் .அறிவு விசாலத்தை இத்தகைய Certificate of Participation தான் பிற தரமதிப்பீட்டாளர்களிடம் /அங்கீகார அதிகார அமைப்பினரிடமும் விளக்க முடியும் ( Directorate of School Education ,Directorate of Collegiate Education ,DOTE,UGC,AICTE ,NAAC ,NBA MHRD etc).எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களே தாங்கள் இதற்க்கு மிகவும் பொருத்தமானவர் என்பதனாலே தான் இத்தகைய விளக்கம் .

நூலாய்ந்து ,சொல்லாய்ந்து ,மரபாய்ந்து ,நெறியாய்ந்து ,அறமாய்ந்து (தங்களின் சொல்லாட்சி தான் ) பேசும் உரைகளை மட்டுமே கட்டண உரையில் தாங்கள் இடம் பெற செய்விர்கள் .அதன் மூலம் அது எந்த அளவுக்கு சில ஆண்டுகளில் விரிவடையும் என்பதனை என் மனக்கண்ணில் கண்டுள்ளேன் .அது வருமாறு – பள்ளி /கல்லூரி ஆசிரியர்கள் தங்களின் அறிவை பட்டை தீட்டிக்கொள்ள தங்களின் கட்டண உரை பட்டறைகளையே நாடுவார்கள் .( Example – For affiliated engg college faculty attending workshops at IITs,NITs like) .இரண்டாவது தங்களின் வெண்முரசுவில் வந்தது போல வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54 ‘மைத்ரியக்காட்டில் பேசப்படாத செய்தி’ என்ற சொல்லாட்சியே உருவாகி புழக்கத்திலிருந்தது.ஆம் அது போல எழுத்தாளர் ஜெயமோகன் நடத்தும் கட்டண உரை பட்டறையில் பேசப்படாத செய்தி என்ற சொல்லாட்சி உருவாகும் .உங்களால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் /தமிழ் ஆர்வலர்கள் தங்களின் இலக்கிய தாகம் தீர்த்த சுனையை கண்டறிந்திருப்பார்கள் .

மேலும் வரும்காலங்களில் தமிழின் புலமை குறித்த அரசு தேர்வுகளுக்கு வெண்முரசு மட்டுமே பாடத்திட்டமாக இருக்கும் .ஆம் வரும்காலங்களில் தமிழின் புலமை குறித்த அரசு தேர்வுகளுக்கு வெண்முரசு மட்டுமே பாடத்திட்டமாக இருக்கும் . ஏனென்றால் வெண்முரசு அறிந்தவன் தமிழை முற்றிலும் அறிந்தவன் என திரு உரு மாற்றம் கொள்வது உறுதி .தங்களின் கட்டண உரை முயற்சி தற்போது ஒரு விதை என எழுந்தெழ முயற்சிக்கிறது .அதனை பல நூறு மீட்டர் சுற்றளவு கொண்ட ஆலமரமாக பார்க்க விழைந்தது என் மனம் . பதிவு நீண்டதால் சிரமத்திற்கு மன்னிக்கவும் .IT COMPANY களில் ஒரு நாள் /இரு நாள் பட்டறைகளுக்கு லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பது சர்வ சாதாரணம் .தவிர்க்க முடியாததுவும் கூட .அது போன்றதொரு முயற்சியை தான் தங்களின் இந்த கட்டண உரையில் காண்கிறேன் .தங்களின் இலக்கிய அறிவு தற்போதைய ஆசிரிய சமுதாயத்திற்கும் அதன் மூலம் அவர்களிடம் படிக்கும் மாணவர்களிடமும் சேர வேண்டும் என்பதே என் விருப்பம் .“பெரும்பசிக்காக தவம்புரிகின்றன அடுமனைகள்.அதுபோல பெரும் அறிவு பசிக்காக தவம் இயற்றுகின்றன அறிவு சாலைகள் /கல்விசாலைகள் என்றோரு நிலைக்கு உயர தங்களின் பங்களிப்பு வேண்டும் .இது என்னுடைய வேண்டுகோள் .தவறு என்றால் பிழை பொறுத்திடுக

தி .செந்தில்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நாங்கள் இதைப்பற்றிப் பேசியதுமே எழுந்துவந்த ஒரு குரல் இது கல்விக்கு உகந்ததாக இருந்தால் நன்று என்று. உடனே அதை தவிர்த்துவிட்டோம். கல்வி, வேலைவாய்ப்பு, பொது அறிவு சார்ந்து மட்டுமே எதையும் தெரிந்துகொள்ளவேண்டும், பிற அனைத்துமே தேவையற்றவை என்ற எண்ணம் இங்கே இன்று உண்டு. அந்த எண்ணத்தை தவிர்க்கவேண்டும். அறிதலின்பொருட்டே அறிவது என்பதே அறிவியக்கத்தை உருவாக்குவது. அதை நோக்கியே நம் இலக்கு இருக்கவேண்டும் என முடிவெடுத்தோம்

ஜெ
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
15 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் ‘மனிதத்தேனீ ‘ சொக்கலிங்கம் அவர்கள் (கண்ணதாசன் மன்றத்தின் தலைவர்) இந்த முயற்சியை மேற்கொண்டார். மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் நெல்லை கண்ணன், தமிழருவி மணியன் மற்றும் சாலமன் பாப்பையா ஆகியோர் பேச்சாளர்கள். கட்டணம் ரூ.50. அரங்கம் நிறையவில்லை எனினும் பெருவாரியாக மக்கள் வந்திருந்தனர். ஆனால் அந்த முயற்சிகள் ஏனோ தொடரவில்லை.

ஜெயசீலன்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அவர்களைப்போன்ற நட்சத்திரப் பேச்சாளர்களுக்குரியதல்ல கட்டணக்கூட்டம். ஏனென்றால் அவர்கலுளுக்கு பெருந்திரளான கூட்டம் தேவை. அவர்கள் ஒருவகையான கட்டுப்பாடற்ற கூட்டம். நேரந்தவறாமல் வருவதும் சரி சரியாக கேட்பதும் சரி அவர்களால் இயலாது. எழுந்துசென்றபடி, தின்றபடி, குடித்தபடி, பேசியபடி இருப்பார்கள். அது திருவிழா மனநிலை கொண்ட கூட்டம்

ஜெ
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
படித்ததை பகிர்ந்துள்ளேன்
படிப்போம்
பகிர்வோம்
விவாதிப்போம்
நன்றி

வேலாயுதம் ஆவுடையப்பன்
248
சிந்தாமதார் பள்ளிவாசல் தெரு
கடையநல்லூர்
627751

எழுதியவர் : (16-Oct-18, 5:51 am)
பார்வை : 65

மேலே