மீப்போர்வை பொ’ய்’ம்மறையாக் காமம் புகலாது – நாலடியார் 42

’ய்’ ஆசிடையிட்ட நேரிசை வெண்பா

தோற்போர்வை மேலும் தொளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும்
மீப்போர்வை மாட்சித் துடம்பானால் - மீப்போர்வை
பொ’ய்’ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப்
பைம்மறியாப் பார்க்கப் படும். 42

- தூய்தன்மை, நாலடியார்

பொருளுரை:

தோலாலான போர்வையின் மேலும் தொளைகள் பலவாகி அவற்றின் உள் அழுக்குகளை மறைக்கும் மேற்போர்வையாகிய ஆடையின் பெருமையையுடையது இவ்வுடம்பென்றால்,

அவ்வுடம்பைக் காமத்தால் மகிழாமல் அம்மேற் போர்வையாகிய ஆடையை அழுக்கு மறைக்குந் திரையாகவும் மற்றொரு போர்வையாகிய தோற் போர்வையை ஒரு பையின் திருப்பமாகவும் நினைத்துப் பார்த்து விருப்பத்தை நீக்கிக் கொள்ள வேண்டும்.

கருத்து: உடம்பின் அழுக்குடைமையை எண்ணிப் பார்த்து அதன்மேல் உண்டாகும் அவாவை நீக்கிக்கொள்ள வேண்டும்.

விளக்கம்:

தொளை பலவானமையால் மேலே ஆடை போர்க்க வேண்டியதாயிற்று என வருதலின். மாட்சித்து என்றது, இகழ்ச்சி.

பையின் உட்புறத்தை மேற்புறமாகத் திருப்பிப் பார்ப்பதுபோல என்றற்குப் ‘பைம்மறியா' எனப்பட்டது. இங்கே தோலின் உட்புறத்தை நினைத்துப் பார்க்க வேண்டுமென்பது கருத்து. பார்த்து நீக்கப்படும் என்னுங் கருத்தும் அடங்கி நின்றது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Oct-18, 8:39 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 61

சிறந்த கட்டுரைகள்

மேலே