புழுவின் சோகப் புலம்பல்

புழுவின் சோகப் புலம்பல்
****************************************************
புழுவென்று எனைச் சொல்வார் மண்மேல் ! எப்பொருளால்
புழுவாய்நான் ஆனேனென்று அறியேனே ! என்னுருவம்
மண்ணில்நீர் தங்கினால் அங்கிருந் தெழுந்துவர
மண்மேல் உடல்நகர்த்தித் தொட்டுணர்ந்தேன் புல்லினையே !
அதனடியே இருப்பிடமாய் அதையே உணவாய்
இதமின்றி எடுத்தாலும் மறுத்தெனையே ஒதுக்காத
மாண்புடைய புல்பிறப்பு ! மாநிலத்தே மறக்கிலனே
அதனடியே தஞ்சமென்று அண்டிநிற்கும் போதினிலே
காற்றுவரும் மழையுவரும் வெயிலடிக்கும் புழுதிவிழும்
மாற்ற எனக்காகாது பொறுத்திராது என்னசெய்ய ?
சின்னசின்னப் பறவைவரும் மண்ணிலுள்ள உணவுகொள்ளத்
தன்னலகால் மண்கொத்தும் வேளையிலே என்னைப்போல்
புழுக்களென்றால் இட்டமுடன் கொத்திக்கொத்தி வாயிலிட்டு
விழுங்கிவிடும் என்னசெய்ய ? என்னநொந்து என்னபயன் ?
என் இயலா நிலைமைதனை எண்ணிஎண்ணிப் பார்த்திடினும்
என்னபயன் நானிருந்து ? என்னபயன் நான்பிறந்து ?
மண்ணினிலோர் உயிர்க்குணவாய் உபயோகம் ஆனேனே !
அன்னதுவே என்பிறப்பு வீணாகா நிலைசேர்க்கும் !
அதுஎனக்குப் போதுமே ! அதுஎனக்குப் போதுமே !
அதற்குமேல் ஓர்நிலையும் வேண்டுமோ ? வேண்டுமோ ?
இதற்க்குமேல் பிறந்தபயன் ஒன்றிருக்கக் கூடுமோ ?

எழுதியவர் : சக்கரைவாசன் (16-Oct-18, 6:58 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 59

மேலே