அரிசிக்குப்பதிலா எதக்கொடுக்க மக்கா

சேவச்சத்தம் கேக்குமுன்ன வெரசா எழுந்திருச்சு
பச்சத்தண்ணில குளிச்சுப்போட்டு
கஞ்சித்தண்ணியக் குடிச்சுப்போட்டு
கலப்பயத்தான் தோளுல போட்டு
மாடுகள பத்திக்கிட்டு
பாட்டு ஒன்ன பாடிக்கிட்டு
வயலுக்குத்தான் போனாக என் பாட்டனும் முப்பாட்டனும்...

ஆத்துமீன அரிச்சுவந்து மஞ்சட்டில உரசியெடுத்து
கத்திரிக்காயக் கிள்ளிப்போட்டு
காரங்கொஞ்சம் அள்ளிப்போட்டு
மட்டயரிசில மணக்கச்சோறாக்கி 
தூக்குவாளில அள்ளிவச்சு
உச்சிவெயில் நேரம்பாத்து
வயக்காட்டுக்கு ஓடிவந்து
பாட்டனுக்குத் தருவாக ஆச்சியும் பேச்சியும்...

இப்போ
காடெல்லாம் அழிச்சுப்புட்டோம்...
தாய்மரத்தயெல்லாம் வெட்டிப்புட்டோம்...
மழத்தண்ணி மறந்துபோச்சு! கருமேகம் ஏச்சுப்போச்சு!

வயலெல்லாம் வறண்டுபோக
வயிறெல்லாம் காஞ்சுபோக
செம்மண்ணக் கொட்டி
வெள்ளயடிச்ச செங்கல  நட்டு
நெஞ்சடைக்க நிலத்த வித்து   
என் புள்ளைக படிக்குதுக...

பெத்தக்கடனுக்கு படிப்பக்கொடுத்துப்புட்டேன்...
அரிசிக்குப்பதிலா எதக்கொடுக்க மக்கா?

எழுதியவர் : முகவை சௌந்தர் (16-Oct-18, 10:51 pm)
பார்வை : 40

மேலே