புலிவெறிக்காதல்

‘யாரங்கே?
இந்தக் கயவனைக் கைது செய்து
அடையுங்கள் சிறையில்'..

‘வேண்டாமப்பா வேண்டாம்…
விட்டுவிடுங்கள் என் பிரபுவை…’

‘என்ன? பிரபுவா?
கொடுங்கள் இவனுக்குக் கசையடிகள் நூறு…’

‘வேண்டாமப்பா வேண்டாம்…
விட்டுவிடுங்கள் என் நாதனை…’

‘என்ன? நாதனா?
கொடுங்கள் இவனுக்குக் கசையடிகள் இருநூறு…’

‘அடியே…
உன் பேச்சைக் குறையடி… - நீ
பேசப்பேச
உன் அப்பா
என்னை
உண்டு - இல்லை எனச் செய்துவிடுவார் போலிருக்கிறது …’

‘வேண்டாமப்பா வேண்டாம்…
விட்டுவிடுங்கள் என் மணாளனை…’

‘என்ன? மணாளனா?
வஞ்சி நாட்டு இளவரசியாம் உனக்கு
இந்த
இஞ்சித் தின்றக் குரங்கா மணாளன்?

‘ஆ.. அப்பா..
இவரா இஞ்சித் தின்றக் குரங்கு?
இவர் யார் என்று தெரியுமா?’

‘தெய்வமே…
என்ன சொல்லப் போகிறாளோ?’

‘நான்குகால் புலியையே
வேட்டையாடியத் தங்களுக்குத்
தெரியவில்லையோ இவரொரு இருகால் புலியென்று?…’

‘ஓகோ.. இருகால் புலியோ?
அப்படியானால்,
வீரர்களே…விட்டுவிடுங்கள் இவனைப் புலிக்குகையில்...
என்ன செய்கிறதென்று பார்ப்போம் இந்த இருகால் புலி…’

‘அய்யய்யோ… புலிக்குகையா?...’

‘அப்பா…
கோழையென்றா நினைத்தீர்கள் இவரை?
ஒரு புலி என்ன? பத்துப் புலிகளை விடுங்கள்…
கண்ணிமைக்கும் நேரத்தில்
கடைவாய்ப்பற்களைப் பெயர்த்தெறிவார் என் மணாளன்…’

‘அடிப்பாவி…
உன் அப்பா புலிக்குகை என்றபோதே
அடிவயிற்றில் ஆழிப்பேரலையடி…
நடுநிசி நேரம் பார்த்து அரண்மனை அந்தப்புரம் வா…
உற்சாகம் காணலாம் என்றாய்…ஊடற்செய்துப் பழகலாமென்றாய்…
கட்டியணைக்கலாம் என்றாய்…காதற்வானில் பறக்கலாமென்றாய் …
நீ கூறியதை நம்பி தாவி வந்தால் புலியிடமாத் தள்ளிவிடுகிறாய்…
பாதகத்தி…
ஆ… மழை…என்னிலைக் கண்டு வானமும் கண்ணீர் விடுகின்றதோ?’

‘வீரர்களே…மழை நின்றபின் தள்ளிவிடுங்கள் புலிக்குகையில் இவனை…’

‘அப்பா…
அடாத மழையிலும் விடாது போர்புரிவார் என் மணாளன்….
இப்போதே தள்ளிவிடுங்கள்…’

‘அடிச் சண்டாளி…
நான் என்னடி செய்தேன் உனக்கு? ஏன் இந்தக் கொலைவெறி?
உன் அப்பா விட்டாலும் நீ விடமாட்டாய்ப் போலிருக்கிறதே...
அப்படி என்னடி ஒரு புலிவெறிக்காதல் என்மேல் உனக்கு?...’

‘டேய்…..’

‘ஆ… இதென்ன?
என் அம்மாவின் குரல் கேட்கிறதே…’

‘டேய் குரங்கு…..’

‘அம்மா… நீங்களுமா?
மறுபடியும் முதலிலிருந்தா?..ஆண்டவா………………’


‘டேய் குரங்கு….
எந்திரிடா…மணி பத்தாச்சு…
தண்ணி ஊத்தியும் எந்திரிக்குறானாப் பாத்தியா…
இப்ப எந்திரிக்குரியா?..இல்ல சுடுதண்ணிய ஊத்தவா?'...

‘சப்பா…கனவா இது?
அம்மா…வயித்துல பால வார்த்தீங்க!!………’

எழுதியவர் : முகவை சௌந்தர் (17-Oct-18, 12:34 am)
பார்வை : 89

மேலே