அப்பப்பா இந்தப்பெண்களும்

மாமல்லக் கடற்கரை
மாலை மணி ஐந்து

நான்,அவள்‍ - முன்னால்
வயிற்றெரிச்சலில் வந்துவந்து
முறைத்த அலைகள்...

தூரத்தில் சூரியன்,மேகம்,வானம்
அவற்றின் கொடுக்கல் - வாங்கல்கள்..

முகவரிகள் மறந்த முத்தங்களை
முதுகில் கட்டிக்கொண்டு
சுற்றித்திரிந்த காற்று..

அருகில் பலரது கால்தடங்கள்..

எங்களுக்கான நிமிடங்கள்
மௌனங்களில் நத்தைகளாய்...

சட்டெனத்திரும்பி என்னைத்
திட்டடா என்றாள்..

வேண்டாமடி பெண்ணே....
உன் கயல்விழித்தொட்டி
கசிந்து விடுமென்றேன்...

அடம்பிடித்தாள்...
நான் ஆரம்பித்தேன்..
"அடி என் இதயச்சிறுக்கி..
நீ என் சுவாசமாய்ப் போக...
உன் தலையில் இடிமுத்தம் விழ..
நீ தனியாவே இருக்க மாட்ட..
உன்னை நான் கொண்டுபோக..
உனக்கு என் எண்ணக்காய்ச்சல் வர...
உன் கழுத்தில் என் தாலி விழ..
உன் காலில் என் கொலுசு விழ..
உன் கையில் என் வளையல் முளைக்க..
உன்..... ......... ......
.
.
.
.
.
தொட்டி கசிந்துவிட்டது.
எழுந்து ஓடினாள்..
நின்று அழுகிறாள்...

அலைகள் திட்டத்துவங்கின..
சூரியன் சினத்தில் சிவந்திருந்தான்.

நான் எழுகின்றேன்...

மனதில்..
"நான்தான் சொன்னேனடி..
அப்பப்பா....
இந்தப்பெண்களும்
இவர்கள் பிடிவாதமும்..."

எழுதியவர் : முகவை சௌந்தர ராசன் (17-Oct-18, 8:52 pm)
பார்வை : 90

மேலே