உண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன கண்ணீர்மை – நாலடியார் 44

இன்னிசை வெண்பா

தெண்ணீர்க் குவளை பொருகயல் வேலென்று
கண்ணில்புன் மாக்கள் கவற்ற விடுவெனோ
உண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன
கண்ணீர்மை கண்டொழுகு வேன். 44

- தூய்தன்மை, நாலடியார்

பொருளுரை: தெளிவான நீரில் உள்ள குவளைமலர், புரள்கின்ற கயல்மீன், வேற்படை என்று சொல்லி மெய்யறிவில்லாத தாழ்ந்த மக்கள் எனதுள்ளத்தைக் கவலைப்படுத்த இடம் விடுவேனோ, உள்ளுள்ள நீர் நீக்கப்பட்டால் நுங்கு தோண்டி விட்டாற்போன்ற கண்ணின் இயல்பை அறிந்து பற்றற் றொழுகுவேனான நான்.

கருத்து:

உடம்பின் அழுக்கியல்பு தெரிந்து அதனிடம் பற்றற்று ஒழுகுதல் வேண்டும்.

விளக்கம்:

கண்களைக் குவளைமலர் என்றும் கயல்மீன் என்றும் ஒப்புமையாற் கூறும் மரபுபற்றி அவற்றைக் குறிப்பிட்டார்.

மாதரை அவர்க்குரிய பெண்மைப் பண்பு1 அறிந்து போற்றாமல் காமங் காரணமாக அவருடம்பை நச்சித் திரிவாரை உட்கொண்டு, ‘கண்ணில் புன்' என்றதன் மேலும் மக்கட் பண்பில்லாதவர் என்னுங் கருத்தால் மாக்கள் எனவுங் கூறினார்.

மாக்கள் என்பது மக்கட் பிறவியின் முன்நிலை.2 உள்நீர் - கண்ணின் உள்ளுள்ள நீர். கண்டொழுகுவேன் கவற்றவிடுவெனோ என்று கொள்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Oct-18, 8:45 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 69

மேலே