முல்லை முத்தென் றிவைபிதற்றும் கல்லாப்புன் மாக்கள் – நாலடியார் 45

இன்னிசை வெண்பா
முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும்
கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவெனோ
எல்லாரும் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க
பல்லென்பு கண்டொழுகு வேன். 45

- தூய்தன்மை, நாலடியார்

பொருளுரை:

எல்லாரும் பார்க்கும்படி சுடலையில் பலவாய் வீழ்ந்து சிந்திய அவர் போன்றாருடைய பல்லெலும்புகளைப் பார்த்து அதனாற் பற்றற் றொழுகுவேனான நான்,

மாதர் பற்கள் முல்லையரும்புகள் முத்துக்கள் என்று இப் புனைவுகளை அறிவின்றிச் சொல்லிக்கொண்டிருக்கின்ற மெய்ப்பொருள் கல்லாத தாழ்ந்த மக்கள் எனதுள்ளத்தைக் கவலைப்படுத்த விடுவேனோ!

கருத்து:

உடம்பின் அழுக்கியல்பு தெரிந்து அதனிடம் பற்றற்று ஒழுகுதல் வேண்டும்.

விளக்கம்:

பிதற்றுதல் - அறிவு மயங்கிச் சொல்லுதல். ஊருக்கும் புறம்பேயுள்ள காடாதலின், புறங்காடு எனப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Oct-18, 4:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 54

மேலே