மற்றிவற்றுள் எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள் – நாலடியார் 46

நேரிசை வெண்பா

குடருங் கொழுவுங் குருதியும் என்பும்
தொடரும் நரம்பொடு தோலும் - இடையிடையே
வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்
எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள். 46

- தூய்தன்மை, நாலடியார்

பொருளுரை:

குடலும் கொழுமையும் குருதியும் எலும்பும் தசைநாரும் நரம்பும் தோலும் இவற்றின் இடையிடையே வைத்த தசையும் கொழுப்பும் ஆகின்ற இவ்வுடற் பொருள்களுள் எப்பகுதியைச் சேர்ந்தவள் இனிய மாலையையணிந்த மாது.

கருத்து:

பெண்மை யென்பது பெண்ணின் உடம்பில் இல்லை.

விளக்கம்:

பெண்ணுடம்பில், வெறுங் குடர் கொழு நரம்பு தோல் முதலியனவே உள; ஆதலின் அவ்வுடம்பிற் பற்று வைத்து அறத்தைக் கைவிடுதல் ஒவ்வாது.

மேல் வழும்பு என வருதலின் கொழுவென்றது, இங்கே இளமைச் செழுமை, தொடர் வேறாகவும் நரம்பு வேறாகவும் கொள்க.

மகளிரின் அழகிய பண்பை அவரது உயிரறிவில் வைத்துக் காணின் அவருடம்பிற் பற்று நீங்குமாகலின், இவ்வுடற் பொருள்களுள் மாது எப்பகுதியினள் என்றார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Oct-18, 7:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 55

சிறந்த கட்டுரைகள்

மேலே