தெப்பக்குளம் நிறைந்தது

வீர மங்கை வேலுநாச்சியார் ஆண்ட சிவகங்கைச்சீமை எனது ஊர் என்பதில் என்றுமே எனக்கு பெருங்கர்வம். அந்த வீரச் சீமையின் மத்தியில் ஒரு தெப்பக்குளம் உள்ளது.
              எனது குழந்தைப்பருவத்தில் எப்பொழுதுமே குளம் நிறைந்தே இருப்பதை பார்த்திருக்கிறேன். மழை இல்லா காலங்களில்கூட தண்ணீர் இருக்கும். மிக வறட்சியென்றால் குளத்தின் வெளிப்புற சுற்று கிணறுகள் தெரியுமே தவிர உட்புற பெரிய கிணறு தெரியாவண்ணம் நீர் இருக்கும். குளத்தைச் சுற்றி பெரிய சுற்றுச்சுவரும் நான்கு திசைகளிலும் படித்துறையும் இருக்கும். நீர்வரத்து காலங்களில் மக்கள் முதல் படியில் உட்கார்ந்து துவைப்பதையும், குளிப்பதையும் காண முடியும். குளத்தின் பின்புறம் உள்ள பேருந்துநிலையத்திற்குச் செல்லும்போதும், ஊரிலிருந்து திரும்பும்போதும்  குளத்தின் சுற்றுச்சுவர் அருகேகூட என் தாத்தா விடமாட்டார்கள்..... அவ்வளவு நீர் இருக்கும், எனினும் எட்ட இருந்தே குளத்தை பார்த்து பரவசப்பட்டிருக்கிறேன்.
              ஆனால் 90களில் அதன் நிலை மாறத் தொடங்கியது..... நடுக்கிணறு மட்டுமே அவ்வப்போது தண்ணீரோடு காட்சி தரும். பின் நிரந்தரமாக வறண்டு கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைந்து பாழடைந்த பங்களா போலானது. படித்துறைகளெல்லாம் மனிதன் ஒதுங்குமிடமாகவும் குடிமகன்களின் புகலிடமாகவும் மாறியது.
          கடந்தமுறை சிவகங்கை சென்றபோது குளம் தூர்வாரப்பட்டு, கிணறுகள் ஆழப்படுத்தி சுற்றுச்சுவரெல்லாம் சுண்ணாம்பு அடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்பட்டது. ஆனால் எனக்கு மட்டும் அங்கலாய்ப்பு தீரவில்லை. தண்ணீர் இல்லாத குளத்தைச் சீர்படுத்துறத பார்க்கும்போது யாருமில்லாத கடையில யாருக்கு டீ ஆத்துறீங்கனு கேட்கத் தோனுச்சு.
              சில மாதங்களுக்குப்பின், இவ்வாரத்தொடக்கத்தில் முல்லைபெரியாறில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு.... 20 ஆண்டுகளுக்கும் மேலாக வறண்டிருந்த குளமும், மக்கள் மனமும் நிறைந்தது. இக்கண்கொள்ளா காட்சியைக் காண ஊர் செல்லும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.....

எழுதியவர் : முகில் (20-Oct-18, 11:26 pm)
சேர்த்தது : முகில்
பார்வை : 55

சிறந்த கட்டுரைகள்

மேலே