தூரத்தில் கேட்கின்றது ஒரு அழுகுரல்

மாமல்லக் கடற்கரை.
மாலை மணி ஐந்து.
நான்-அவள்......

அருகில் வந்த
அழகு மழலையின்
பந்துக்குப் பங்குக்கேட்டு
அடம்பிடித்து விளையாடினாள்
என்னவள்-நான்
அவளை இரசித்தபடி....

வீசும் காற்றில்
என்
கன்னந்தொட்டு
கையில் இறங்கியது - ஒரு
கசங்கியக் காகிதம்-சில
வரிகளைச் சுமந்து.....


படிக்கின்றேன்...

"உன் மீதான
என் அன்பினை
என்னால் செய்து
உன்னிடம் தந்தேன்
நிமிட வயது சிசுவை-அதன்
தாயிடம் தருவது போல்...
நீ.....
சூறைக்காற்றில்
நொடிந்து உடையும்
ஒரு கருப்புக் குடையைப்
பிடிப்பதுப்போல்
பிடித்தாய்-விட்டுவிட்டாய்....
மகிழ்ச்சியடி பெண்ணே...

இதோ....
என் முன்னால்
பல நூறுக் கருப்புக்குடைகள்
மிதக்கின்றன கிழிந்தபடி இக்கடலில்....

அதோ....அதோ....
எனது குடை....
உன்னை நேசித்ததன்றி
ஒரு பாவமும் செய்யாத
எனது குடை....
அழுகின்றதே எனது குடை.....
இறைவா....
என்னவென்று ஆறுதல் சொல்ல?...- அன்றியும்
நான் அதனிடம்
செல்லவேண்டும்…
செல்வேன்......"


'என்ன அது ?'
என்றாள் என்னவள்
அருகில் அமர்ந்து...

'வெற்றுக்காகிதம்'
என்றுச் சொல்லி
விட்டுவிட்டேன்,காற்றில்....


தோளில் சாய்ந்துகொள்கிறாள்
என்னவள்.....
கடலினை மேய்ந்தபடி என் கண்கள்....



தூரத்தில் கேட்கின்றது
ஒரு
அழுகுரல்.......

எழுதியவர் : முகவை சௌந்தர ராசன் (21-Oct-18, 12:35 am)
பார்வை : 41

மேலே