ஈர நெருப்பு

ஈர நெருப்பு..!

எரித்தது சூரியன்
மரித்தது பச்சை நிலம்
தோலிருக்க சதை தொலைத்த
விவசாயி விழிகளில்
ஈரமாய் கசிந்து கொண்டிருக்கிறது
வறுமை எனும் நெருப்பு..!

பசித்திருக்கும் வயிற்றில்
பற்றி எரிந்துகொண்டிருக்கிறது
பற்ற வைக்காத நெருப்பொன்று
அணைப்பதற்குத்தான் உணவில்லை..!

மக்களால் மக்களில் ஒருவரை
மக்களுக்காக தேர்ந்தெடுத்தல்
மக்களாட்சியாம்
இறந்த காலத்தில்...!

வெள்ளையும் சள்ளையுமான
கரை ஆடை அணி வகுப்புகளில்
தேடினாலும் கிடைக்கவில்லை
மனிதனும் மனசாட்சியும்
கறைக்குள் புகுந்துகொண்டதால்
காணாமல் போயிருக்கக்கூடும்..!

வாக்களித்தவன் குரல்வளையை
நெரித்துவிட்டு
வாய்கிழிய குரல் கொடுக்கிறது
தாங்கள்தான் தர்மர்கள் என்று
தறுதலை கூட்டமொன்று..!

உரிமைக்கு குரல் கொடுத்து
தொண்டை வற்றியவனின்
ஆவி போய்க்கொண்டிருக்க
நெருப்பாய் கசிந்துகொண்டிருக்கிறது
மெள்ள கசியும் நீராவி
வாக்கை தொலைத்துவிட்டு
வாழ்வையும் தொலைத்துக்கொண்டிருக்கும்
சாமானியர்களின் விழிகளில்..!

ஏழைகளின் உழைப்பை
குழல் போட்டு உறிஞ்சி
ஷாம்பைனில் குளித்து
காக் டெய்லில் மிதக்கிறது
கார்ப்பரேட் முதலைகள்..!

இரட்டிப்பாய் உழைத்தும்
பற்றாக்குறையில் வாழ்பவனுக்கு
பற்றி எறிவது வயிறு மட்டுமில்லை
ஈரம் கசியும் மனமும்தான்..!

அல்லும் பகலும் உழைப்பவனுக்கு
கொள்ளு காட்டும்
குதிரைக்கார வர்க்கம்
தோள் நிமிர்த்திக்கொண்டிருக்க
துவண்டுக்கொண்டிருக்கும் தொழிலாளிக்கு
மாலை அணிவித்து
மரியாதை செலுத்துவதெல்லாம்
நெருப்பில் பூத்த
வியர்வை பூக்கள் மட்டுமே..!

ஒடுக்கப்பட்டோரின் மனதில்
எரிந்துகொண்டிருக்கும்
சிறு சிறு நெருப்பு துண்டங்கள்
காட்டுத்தீயாய் மாறும்நாளில்
அழிக்கப்படலாம் அக்கிரமங்கள்
அன்றைய பொழுதில்
தெறித்து சிதறக்கூடும்
ஈர நெருப்பு ஆனந்தக் கண்ணீராய்
எல்லோர் விழிகளிலும் ..!

#சொ.சாந்தி

(14-10-2017 அன்று பண்ணை தமிழ் சங்கத்தில் வாசிக்கப்பட்ட கவிதை. தலைப்பினை அளித்து வாசிக்கும் வாய்ப்பினை அளித்த கவிக்கோ திரு துரை வசந்த ராஜன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.)

எழுதியவர் : சொ.சாந்தி (25-Oct-18, 9:02 am)
சேர்த்தது : C. SHANTHI
Tanglish : eera neruppu
பார்வை : 1814

மேலே