மன்னிப்பாயா

காலத்தால் நம்காதல் கனியுமென்று
ஞாலமிதில் காத்திருந்தாய் - உன்
அத்தனை நம்பிக்கையையும்
மொத்தமாய்ச் சிதைத்தழித்துச்
“செத்துப்பிழை” என்றே தான்
சத்தமின்றிச் சென்றேன் நான்;
எல்லாமே நானென நம்பியிருந்தாய்;
சொல்லால் வதைத்துன்னைக்
‘கொல்லாமல் கொன்று புதைத்தேன்’ நான்;
உலகில் நல்லுட்கிடையாள் உனையன்றி
என் மனதில் எவருமிலை - இருந்தும்
விலகிடல் வேண்டிய தொன்றாயிற்று...!
என்னுடலில் பரவிவருங் கொடுநோய்
எனைக் கூற்றுவனுக் கிரையாக்க வதைதருது
உனைப் பிரிந்த வாதையது அதைப்பருகி
உயிர்வலிக்க, ஏதோ இயல்பளவில்
சுழலுகிறேன் மூச்சிழுத்து, ஏங்கித் தினம்
உழலுகிறேன் உன்நினைவால்...எனை
மன்னிப்பாயா...?
~ தமிழ்க்கிழவி (2018).

இவ்வாரம் தினமணி - கவிதைமணியில் வெளியானது இக்கவிதை:)

எழுதியவர் : தமிழ்க்கிழவி (28-Oct-18, 9:36 pm)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 1853

மேலே