நாட்குறிப்பு எழுதிய நாட்கள்

பள்ளிப் பருவத்தில்
பால்ய சிந்தனையில்
நாட்குறிப்பில்
"நாளை என்ன வீட்டுப்பாடம் "
"நண்பனின் பிறந்தநாள் தேதி "
"பண்டிகை நாட்களின் தேதிகளை வட்டமிட்டது "
"கற்பனை முகங்களை ஓவியம் தீட்டியது "
என என் நினைவலைகளில் நீந்திச் செல்கிறது ..........

பள்ளிப் பருவம்
எனக்கும் என் பேனாவுக்கும்
பக்குவமில்லாத பழைய காலம் ...

சற்று மீசை வளர்ந்து
ஆசை அரும்புகையில்
கல்லூரி நாட்களில்
நாட்குறிப்பு எல்லாமே
கவிதைகளை பிரசவிக்க
என் பேனாவுடன் போராடிக் கொண்டிருந்தது ..
கவி துவங்கும் எல்லோருக்கும்
காதல் கவிதைகளே முதல் பிள்ளையாய் பிறப்பெடுக்கும் ..
நான் மட்டும் என்ன விதிவிலக்கா ..?
பெயரிடப்படாத காதலியின்
கற்பனை பெயர்களையே
அகராதியாக தொகுத்து
தனிப்பக்கம் போட்டிருந்தேன்
என் நாட்குறிப்பில் ....
கனவு தேவதையின்
ஓவியம் ஏந்தியே
பல பக்கங்கள் நிரம்பியிருந்தது ...
போலிச் சாமியாரின் போதனைகள் போல
சமூக சிந்தனை அவ்வப்போது
என் கிறுக்கலில் சிதறியிருந்தது ...

இளமைப் பருவம்
எனக்கும் என் பேனாவுக்கும்
தவழ்ந்த பிள்ளை எழுந்து நடக்கும் காலம் ...

தூசு தட்டும் போது கிடைத்த
என் பழைய நாட்குறிப்பு
என்னை எனக்கே அடையாளம் காட்டியது ...
அது நானா ?
இது நானா ?
எது நான்? என்று
என்னையே கேள்வியும் கேட்டது ...

பல அழகிய நினைவுகளை
மயிலிறகாகவும்
சில கொடிய வலிகளை
பசுமரத்தாணியாகவும்
சராசரி கலவையில் சேர்த்து
கட்டிய கட்டிடமாக தனித்தே நிற்கிறது ...

நாட்குறிப்பு எழுதிய நாட்கள்
காலம் கடந்தும்
மனக்கூட்டின் ஓரத்தில்
வாடகையின்றி குடியிருக்கிறது...

எழுதியவர் : குணா (30-Oct-18, 10:00 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 123

மேலே