தீயரையிப் பாரும் கொடுஞ்சுமையா எண்ணியிருக்கும் இனைந்து - குறளை, தருமதீபிகை 147

நேரிசை வெண்பா

கண்டுநேர் பேசிநின்று காணாமல் வேறொன்று
கொண்டு புகன்று குடிகேடு - மண்டவே
பண்ணுகின்ற தீயரையிப் பாரும் கொடுஞ்சுமையா
எண்ணி யிருக்கும் இனைந்து. 147

- குறளை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை: கண் எதிரே கண்ட பொழுது இனியராய்ப் பேசி நின்று, காணாத இடத்தில் வேறொன்றாய்க் கோள் உரைத்துக் குடிகேடு செய்யும் தீயரைக் கொடுஞ்சுமை என்று பூமி தேவியும் பொறுத்திருக்க இயலாது வருந்துவாள் என்று இப்பாடலில் கவிராஜ பண்டிதர் கூறுகிறார்.

வேறு ஒன்று - நேரே பேசியதற்கு மாறான பழிமொழிகளை. ஒருவன் முகத்தின் முன்னே நண்புடையவர் போல் நடித்து அன்புரைகள் சொல்லிப் புறத்தே போய் அவனை இளித்துக்கூறும் ஈன மக்களை அவர்தம் தீமை நிலை கருதித் தீயர் எனப்பட்டது,


கோள் உரையால் பலகேடுகள் விளைகின்றமையால் கோளன் கொடிய பாவி ஆகின்றான்; ஆகவே, அப்பாவியைப் புண்ணியவதியாகிய பூமிதேவி பொறுக்க மாட்டாமல் தவிப்பதாகக் கூறுகிறார்.

மலை கடல் முதலிய அரிய பெரிய சுமைகள் பலவும் பொறுக்கின்ற நிலமகள் கோளனை அவனது நெடிய தீமையை நினைத்து ஒரு கொடிய பாரமாகக் கருதியது.

பார்=பூமி. இனைந்து=வருந்தி.

பொறுமையில் சிறந்த பூமாதேவியே கோளனை வெறுத்து இகழும் என்றமையால் அவனுடைய பழிபாவங்களின் கனம் அறியலாகும். இந்தப் படுபாவி எப்பொழுது தொலைவான் என வையம் வைதிருக்கும் என்பதாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Nov-18, 7:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19
மேலே