கேள்வியும் பதில்களும்

இன்று அவளைப் பார்ப்பேனென்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. சிவரஞ்சனி. பனிரெண்டு வருடங்கள் ஆகிவிட்டது. வாழ்க்கை என்பதே அப்படித்தானே. திடிர் திடிரென்று ஆச்சர்யங்களை தரக்கூடியது.

அப்போது எனக்கு ஒரு பதினேழு பதினெட்டு வயதிருக்கும். ரிலையன்ஸ்காரன் ஐநூற்றியொரு ருபாய்க்கு மொபைல் கொடுத்து பீதியையும் புரட்சியையும் ஏற்படுத்தி மற்ற மொபைல்கள் எல்லாம் விலை குறைந்து கொண்டிருந்த காலகட்டம்.

பள்ளிப்படிப்பை முடித்து விட்டு மேலேயும் படிக்காமல் வேலைக்கும் போகாமல் சினிமாவிற்கு சென்று கலட்டித் தூக்கி அடிக்கப்போகிறேன் என்று சொல்லிக் கொண்டு தண்டமாக ஊரைச் சுற்றிக் கொண்டிருந்த காலகட்டம்.

அப்போது எங்கள் ஏரியாவில் ஒரு டெலிப்போன் பூத் ஒன்று இருந்தது. அங்கேதான் சிவரஞ்சனி வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கொஞ்சம் அழகாகத்தான் இருப்பாள். அந்த பூத் எப்போதுமே பிஸியாகவே இருக்கும். வரிசைக் கட்டி நின்று கொண்டிருப்பார்கள். திருப்பூர் ஒரு தொழில்நகரம் என்பதால் வெளியூர்க்காரர்கள் அதிகம். குடும்பத்தோடு வந்தவர்களை விட குடும்பத்தை விட்டு தனியே வந்தவர்கள்தான் அதிகம். அம்மாவிடமோ, பொண்டாட்டியிடமோ, காதலியிடமோ, நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ, செய்திகளை பரிமாற வேண்டிய தேவை இருக்கிறது. அடுத்தவனின் அவசரம் புரியாமல் போனில் மணிக்கணக்கில் மல்லுக்கட்டுவதோ, மன்றாடுவதோ, கொஞ்சுவதோ, கெஞ்சுவதோ நடந்து கொண்டிருக்கும். அடுத்ததாக பேசுவதற்கு நின்று கொண்டிருப்பவன் கெட்டவார்த்தைகளை தேடி கண்டுபிடித்து திட்டித் தீர்த்துக் கொண்டிருப்பான்.ஆனால் எப்போதும் போன் பேசுபவர்கள் தனி உலகத்திற்கு சென்று விடுகிறார்கள். சுற்றி நடப்பது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. தான் பேசியாக வேண்டும். அவ்வளவுதான்.

ஆனால் எனக்கு அந்த பூத்தில் சென்று பேச வேண்டிய சூழ்னிலை ஏற்பட்டதில்லை. நான் நண்பர்களிடமோ உறவினர்களிடமோ பேச வேண்டுமானால் எங்கள் வீட்டின் மேலேறினாலே போதுமானது. எல்லோரும் எங்கள் வீட்டை சுற்றித்தான் இருக்கிறார்கள். வெளியூரில் இருப்பவர்களிடம் பேச வேண்டுமானால் நான் போய் பேசகூடிய சிறிய விசயமாக இருக்காது. என் அப்பாவோ அம்மாவோ பேசக்கூடிய விசயமாகத்தான் இருக்கும். அப்படியும் நான் ஒன்றிரண்டு முறை அந்த பூத்தில் பேசியிருக்கிறேன். அதுவும் சிவரஞ்சனி வந்த பிறகு இல்லை. அவளுக்கு முன்னால் நளினி என்றொரு அக்கா அங்கே வேலைக்கு இருக்கும் போதுதான்.

அன்று நானும் என் நண்பன் கார்த்தியும் அந்த பூத்திற்கு சென்றோம். போன் பேசுவதற்கோ சிவரஞ்சனியை பார்ப்பதற்கோ அல்ல. கார்த்தியின் ஆள் சரண்யா டெலிப்போன் பூத் போயிருப்பதாக வினோத் மூலம் செய்தியறிந்து அவன் வேகமாக புறப்பட்டான். எனக்கு கிங்ஸ் சிகரெட் வாங்கி தருவதாக ஆசைக் காட்டி துணைக்கு கூட்டி சென்றான். அப்போதுதான் சிவரஞ்சனியை முதல் முதலாகப் பார்க்கிறேன். வானில் பறந்தேன், காற்றில் மிதந்தேன், உடல் லேசானேன், கண் இமைக்கவில்லை, இதயம் துடிக்கவில்லை, இப்படி எந்தவொரு வினோதங்களும் அங்கே நடக்கவில்லை. ”உன்ன இதுக்கு முன்னாடி இங்க பாத்ததில்லயே.. இங்க நளினினு ஒரு அக்கா இருப்பாங்களே அவங்க எங்க” என்றுதான் கேட்டேன். அவங்க வேலைக்கு வரதில்ல நின்னுட்டாங்க, நா வந்து ஒரு வாரமாச்சு என்றாள். ஓ.. என்று தலையாட்டினேன். நீங்க லோக்கலா? எஸ்டிடியா? என்று கேட்டாள். நாங்க லோக்கல்தா என்றேன். அப்போ இந்த போன யூஸ் பண்ணிக்கங்க என்றாள். நாங்க போன் பண்ண வர்ல என்றேன். அப்புறம்? என்றாள் புரியாமல். நான் திரும்பி போன் பேசிக்கொண்டிருந்த சரண்யாவைப் பார்த்து விட்டு சிவரஞ்சனியைப் பார்த்தேன். அவள் விசயம் புரிந்து முறைத்தாள். நளினி அக்கா இருந்திருந்தால் கொஞ்ச நேரம் மொக்கையை போட்டுக் கொண்டு நின்றிருக்கலாம். இவளிடம் என்ன பேசுவது என்று நினைத்துக் கொண்டு சிரித்தபடியே நண்பனிடம் டேய் வாடா என்று சொல்லி அவனை அழைத்து வந்து விட்டேன். அவனும் அவனின் ஆளைப் பார்த்துக் கொண்டே வந்தான்.

அன்று முதல் சிவரஞ்சனி என் கண்ணில் அடிக்கடிப் பட்டுக் கொண்டே இருந்தாள். நாங்கள் திருட்டு தம் அடிப்பதற்காகவே எங்கள் ஏரியாவில் ஒரு இடம் இருக்கிறது. வயதுக்கு வந்தவனெல்லாம் நாசமாய் போவதற்காக அங்கு வருவான். புதிதாக தம்மடித்து பழக ஆசைப்படுபவர்களெல்லாம் அங்கு வருவார்கள். அவர்களுக்கு தினசரி வகுப்பு நடக்கும். சீனியர்கள்தான் வகுப்பெடுப்பார்கள். அண்ணா தம் கட்டுனா இருமல் வருதுணா.. டேய் எரும பஸ்ட்டு கொஞ்சமா பொகைய இழுத்து லேசா தம் கட்டி வெளிய விட்றா.. அப்படியே கொஞ்ச கொஞ்சமா டெவலப் பண்ணு. இது போன்று பயிற்சிகள் ஒரு மாதம் நடக்கும். இறுதியாக ஒரு டம்ளர் டீ வாங்கி வருவார்கள். அப்போது சிகரெட் பற்ற வைத்து நன்றாக புகையை இழுத்து தம் கட்டிக் கொண்டு இரண்டு மடக் டீயை குடித்து விட்டு பிறகு தம் கட்டிய புகையை வெளியே விட வேண்டும். இப்படி செய்து விட்டால் அவன் தேறிவிட்டான் என்று அறிவித்து அவனுக்கு சர்டிபிக்கெட் கொடுத்து விடுவார்கள். நாங்கள் எல்லாம் ஏற்கனவே முதல்வகுப்பில் தேறியவர்கள். அங்கேதான் நின்று எப்போதும் தம்மடித்துக் கொண்டிருப்போம்.

சிவரஞ்சனி அந்த வழியாகத்தான் எங்களைக் கடந்து காலையில் கடைக்கு செல்வாள். மாலை வேலை முடிந்து அந்த வழியாகத்தான் வீட்டிற்கு செல்வாள். இதொரு பத்து நாட்கள் தொடர்ந்தது. என்னை சுற்றி எப்போதும் ஒரு வானரக்கூட்டம் நின்று புகையூதிக் கொண்டிருக்கும். ஆனால் அன்று யாருமில்லாமல் நான் தனியாக நின்று ஓசோனை ஓட்டை செய்து கொண்டிருந்தேன்.அவள் வேலை முடிந்து வீட்டிற்க்கு செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் ஒரு யோசனை.. ஒரு சிரிப்பை போட்டு வைப்போமா? பதிலுக்கு அவளும் சிரித்தால் வொர்க் முடிஞ்சுதா என்று கேட்டு வைப்போம். மாறாக முறைத்தாளென்றால் இன்னொரு சிகரெட்டை வாங்கி பற்ற வைத்துக் கொள்ளலாம் பிரச்சனையொன்றுமில்லை. சொந்த ஊரில் நம்மை யார் கேள்வி கேட்பது? அருகில் வந்துவிட்டாள். பார்க்கிறாளா? என்று பார்த்தேன். பார்த்தாள். டக்கென ஈ.. என்றேன். அவளும் லேசாக சிரித்தாள். ஆஹா.. சூப்பர். ரெடிமேட் டயலாக்கை தூக்கி எறிந்தேன். வொர்க் முடிஞ்சுதா? என்றேன். ம்.. முடிஞ்சுது. என்றாள். ஆஹா இப்படி நடக்குமென்று தெரிந்திருந்தால் இன்னுமொரு நான்கைந்து டயலாக்கை ரெடி பண்ணி வைத்திருக்கலாம் என மனம் அங்கலாய்த்துக் கொண்டது. பரவாயில்லை. நாளைக்கும் வரத்தானே போகிறாள். நாமும் இங்குதானே நின்று கொண்டிருக்கப் போகிறோம் என்று என் மனதுக்கு ஆறுதல் சொல்லி அமைதிப்படுத்தினேன்.

நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்த அந்தப் பழக்கம் நெருங்கிய நட்பானது. அடிக்கடி பூத்திற்கு சென்று பேசி வருவதாகவும் இருந்தது. ப்ளஸ் டூ முடித்துவிட்டதாகவும், சமீபத்தில் அப்பாவுக்கு ஒரு வாகன விபத்து ஏற்பட்டு பணம் நிறைய செலவாகி விட்டதாகவும், அதனால்தான் மேலே படிக்காமல் வேலைக்கு வந்ததாகவும், அடுத்த வருடம் தன்னை கல்லூரியில் சேர்த்து விடுவதாக அம்மாவும் அப்பாவும் சொன்னதாக என்னிடம் சொன்னாள். அப்பா எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் தண்டமாக ஊரைச்சுற்றிக் கொண்டிருக்கும் எனக்கு இதைக் கேட்டதும் பரிதாபமாகத்தான் இருந்தது. வாழ்வில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்து பெரிய சோகத்தை தந்துவிடுகிறது. அதிலும் நல்லவர்களுக்கு நடந்து விடுவது பெரிய வலியை தந்துவிடுகிறது. இவள் இந்த ஒரு வருட வாழ்வை இந்த டெலிபோன் பூத்தில்தான் கழிக்க வேண்டும்.

அங்கே காயின் பாக்ஸ் போன் வைத்த பிறகு எனக்கு சில்லரைத் தட்டுப்பாடே வருவதில்லை. இரண்டு ருபாய் சிகரெட்டுக்கு பத்து ருபாய் கொடுத்தால் கடைக்காரர் கண்டபடியாக காறித்துப்புவார். அதனால் பூத்திற்கு சென்று சிவரஞ்சனியிடம் சில்லரைக் கேட்டால் தருவாள். டேபிள் ட்ராயரில் இல்லையென்றால் காயின்பாக்ஸையே திறந்து எடுத்து தருவாள்.

இதெல்லா சின்ன விசயம் ”பொண்ணுங்களுக்கு நம்மள புடிச்சுருச்சுனா நமக்காக என்ன வேணாலும் செய்வாங்க கல்யாணத்த தவிர” என்று என் நண்பன் கார்த்தி சொன்னான். அனுபவசாலி சொன்னால் சரியாகத்தான் இருக்கும். கல்யாணத்தைப் பற்றி தெரியவில்லை. ஆனால் அவ்வப்போது நூறு இரனூறு கடன் கேட்டால் கூட செய்து கொண்டுதான் இருந்தாள்.

வழியில் சென்றால் கூட ஒரு நொடி நின்று அவளைப்பார்த்து சிரித்துவிட்டோ கையை காட்டி விட்டோ செல்வது வழக்கமாகிவிட்டது. இதைவைத்து நண்பர்கள் உசுப்பேற்றிக் கூடப் பார்த்தார்கள். ”பேசுனா செட்டாயிரும் புரபோஸ் பண்ணிப்பாரு” என்று கூட சொன்னார்கள். ஆனால் என் மனம் ஒத்துக்கொள்ளவில்லை.

நான் உன்னை காதலிக்கிறேன் என்று அவளிடம் சொன்னால் நீ இப்டி வந்து சொல்வேனு நா கொஞ்சம் கூட எதிர் பாக்கல, இப்டினு தெரிஞ்சுருந்தா நா உங்கூட பேசிருக்கவே மாட்ட, நீயும் எல்லார் மாதிரியுந்தா எங்கிட்ட பழகிருக்க, நா உன்ன நல்ல ஃப்ரண்டுனு நெனச்ச, இனிமே இந்த எண்ணத்தோட எங்கிட்ட பழகாத என்று கன்னங்கள் சிவக்க, உதடுகள் துடிக்க, கண்களை உருட்டிக் கொண்டு இந்த வசனங்களை எல்லாம் அவள் மூச்சிறைக்கப் பேசப்போவதில்லை. புடிச்சிருக்கு, புடிக்கல இதையுமே சாதாரணமாகத்தான் அவள் சொல்வாள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அப்படியொரு எண்ணம் அவள் மேல் எனக்கு தோன்றவேயில்லை.

ஒருநாள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது திடிரென்று நீ யாரியாவது லவ் பண்றியா? என்று கேட்டாள். ஏன் கேட்டாள்? எதற்கு கேட்டாள்? எப்படி இப்படி கேட்கலாம்? என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் நான் செல்லவில்லை. எனக்கு கல்யாணமயிருச்சு என்றுதான் சொன்னேன். சற்று அதிர்ச்சியானாள். ஏய் பொய் சொல்லாதப்பா.. என்றாள். நா உண்மையதா சொல்ற என்றேன். அவள் நம்ப மறுத்தாள். நான் நம்ப வைப்பதற்கே முயற்சி செய்தேன். அதற்கு பிறகு ஒரு ஐம்பது முறையாவது என்னிடம் கேட்டிருப்பாள். நான் அதையேதான் திரும்ப திரும்ப சாதித்தேன். உன் வொய்ப் போட்டோவக் காட்டு என்று கூட மிரட்டிப் பார்த்தாள். நான் அதிலேயே உறுதியாக இருந்தேன்.

பின்னொரு நாள் என் நண்பன் கார்த்தியிடம் கேட்டு உண்மையைத் தெரிந்து கொண்டாள். ஏன் அப்டி சொன்ன? என்று லேசாக முறைத்தபடி கேட்டாள். சும்மா என்று முடித்துக் கொண்டேன்.

சிவரஞ்சனியை ஏதோ ஒரு விதத்தில் எனக்கு பிடித்துதான் இருந்தது. அவள் அழகாக இருக்கிறாள் என்பதற்காகவா? இல்லை நன்றாக பழகுகிறாள் என்பதற்காகவா? அல்லது அவளின் வீட்டு சூழ்னிலையை என்னிடம் யதார்த்தமாக சொன்னாள் என்பதற்காகவா? ஏதோ ஒன்று நிச்சயமாக இருக்கும். அவள் ஒரு பெண் என்பதற்காக மட்டும் எனக்குள் இந்த ஈர்ப்பு வந்திருக்காது. நிச்சயம் காரணமிருக்கும். ஆனால் விளங்கிக் கொள்ளத்தான் முடியவில்லை.

ஊரில் குலதெய்வ கோயில் கும்பாபிசேகம் என்று சொல்லி குடும்பத்தோடு வண்டி கட்டி கிளம்பினார்கள். வழுக்கட்டாயமாக என்னையும் தூக்கிப்போட்டு கொண்டு சென்றுவிட்டார்கள். விசேசம் முடிந்த கையோடு ஒரு தாத்தா நேரங்காலத்தோடு கிளம்பிவிட்டார். அவருக்கு சங்கு ஊதி காரியம் முடித்துவிட்டு திரும்புவதற்கு மொத்தமாக பத்து நாட்களாகிவிட்டது. வீட்டிற்கு வந்த பிறகும் சிவரஞ்சனியை போய் பார்க்கும் எண்ணமோ, சூழ்னிலையோ ஏற்படவுமில்லை, நான் ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை.

அப்போது நோக்கியா 1100 விலை குறைந்து பேமஸாக இருந்த காலகட்டம். நானும் ஒரு மொபைலை வாங்கினேன். அதில் ஏர்செல் சிம் வங்கிப் போட்டு கொண்டு நம்பரை சிவரஞ்சனிக்கு கொடுத்து பந்தா காட்டலாம் என நினைத்து பூத்திற்கு சென்றேன். அங்கே வேறொரு பெண் அமர்ந்திருந்தாள். நான் புரியாமல் பார்த்தேன். அவள் என்னை பார்த்ததும் லோக்கலா? எஸ்டிடியா? என்று கேட்டாள். நா போன் பண்ண வர்ல என்றேன். அப்புறம்? என்றாள் புரியாமல். இங்க சிவரஞ்சனினு ஒரு பொண்ணு இருப்பாளே அவ எங்க என்றேன். அந்தப் பொண்ணு வேலைய விட்டு நின்றுச்சு. அதனால என்னய புதுசா சேத்திருக்காங்க என்றாள். ஓ.. ஓகே என்று சொல்லி திரும்பி வந்துவிட்டேன். இருக்கும் போது தெரியாத அருமை இல்லாத போதுதாண்டா தெரியும் என்று பெரியவர்கள் சொல்வது அப்போதுதான் எனக்கு புரிந்தது.

கல்லூரியில் சேர வேண்டுமானால் இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கிறது. அதற்குள் ஏன் வேலையை விட்டு நின்றாள். நின்றது கூட பரவாயில்லை. என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அவளின் ஊர் எங்கள் ஊரிலிருந்து ஒரு ஆறேழு கிலோமீட்டர்தான் இருக்கும். ஆனால் அவளைப் போய் பார்க்க வேண்டுமென்றெல்லாம் எனக்கு தோன்றவுமில்லை.

அதன் பிறகு நான் கல்லூரியில் சேர்ந்தது, படித்தது, படிப்பு முடிந்து சென்னையில் வேலை. அதன் பிறகு சினிமா என இந்த பனிரெண்டு வருடங்களில் என் வாழ்வில் முக்கியமான சம்பவங்கள் நிறைய நடந்திருக்கிறது. ஆனால் சிவரஞ்சனி என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாகவே இருக்கிறாள். மொபைல்கள் ஜனநாயகப்படுத்தப்பட்டதனால் அந்த டெலிபோன் பூத்தை காலி செய்துவிட்டார்கள். அதே கட்டிடத்தில் ஃபேன்ஸி ஸ்டோர், போட்டோ ஸ்டுடியோ என பல கடைகள் மாறி இப்போது அது மொபைல்கடையாக இருக்கிறது. அந்தக் கட்டிடத்தில் நிறைய கடைகள் மாறிவிட்டன. காலங்களும் கடந்துவிட்டன. ஆனாலும் சிவரஞ்சனி விட்டு சென்ற சில விசயங்கள் அங்கே சுலமாடிக் கொண்டுதான் இருக்கிறது. அங்கு செல்லும் போதெல்லாம் அவளின் சிரிப்போ, அவளின் பேச்சோ, அவளின் பார்வையோ ஏதோ ஒன்று நினைவுக்கு வந்து அந்த இடத்தை கவனிக்க வைக்கிறது. மனதை கணக்கவும் வைக்கிறது.

என் முதல் திரைப்பட எழுத்துப் பணிக்காக சில புத்தகங்களை தேடிப்படிக்க வேண்டியிருந்தது. சில புத்தகங்களின் பெயர்களை சொல்லி கோவை விஜயா பதிப்பகத்தில் போன் செய்து கேட்டேன். சில புத்தகங்கள் இருப்பதாக சொன்னார்கள். அதை வாங்குவதற்காக அங்கே சென்றேன். அங்குதான் சிவரஞ்சனியை எதிர்பாராதவிதமாக பார்த்தேன். அவளும் கண்டுகொண்டாள். நீ…. என்று அவள் கேட்பதற்குள், சிவரஞ்சனிதான? என்றேன். ஆமா என்று சிரித்தாள். குடும்பம், நலம், வேலை என விசாரித்தேன். அவளுடன் அவளின் ஆறு வயது பாப்பா இருந்தாள். அவளைப் பற்றியும் கேட்டேன். ஒரே பொண்ணு என்றவள், உனக்கு என்ன கொழந்த? என்று கேட்டாள். ”ஏய் எனக்கு இன்னும் கல்யாணமாகுல” என்றேன். சற்று ஆச்சர்யப்பட்டவளாக, ”ஏய் பொய் சொல்லாதப்பா. நீ.. இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்கியா? என அழுத்திக் கேட்டாள். இல்ல கல்யாணமாகுல என்றேன்.

அவள் அங்கிருந்து என்னிடம் விடை பெற்று செல்லும் வரை இந்தக் கேள்வியை ஒரு ஆறேழு முறை திரும்ப திரும்ப கேட்டிருப்பாள். அன்று கல்யாணமாகிவிட்டது என்றதை நம்ப மறுத்தவள், இன்று கல்யாணமாகவில்லை என்பதை நம்ப மறுக்கிறாள்.

நபரும் அவளேதான். கேள்வியும் அதேதான். ஆனால் பதில் மட்டும் வேறொன்றை எதிர்பார்க்கிறாள். எப்போதும் கேள்விகள் அப்படியேதான் இருக்கின்றன. ஆனால் பதில்களை சூழ்னிலைகள்தான் தீர்மானிக்கின்றன.

என்னிடமும் அவளிடம் கேட்க ஒரு கேள்வி இருக்கிறது. ”ஏன் என்னிடம் சொல்லாமல் சென்றாய்?” இந்த கேள்விக்கு அவளிடம் நிச்சயம் இரண்டு பதில்கள் இருக்கலாம். அன்றைக்கானதும்… இன்றைக்கானதுமாக…



எழுதியவர் : ரமேஷ்குமார் (3-Nov-18, 7:59 pm)
சேர்த்தது : ரமேஷ்குமார்
பார்வை : 100

மேலே