புள்ளின் பா - - - - பறவையின் பாட்டு

" புள்ளின் " பா " "
**************************************
( பறவையின் பாட்டு "

புள்ளென்று எமைச்சொல்வார் மண்மேல் ! எப்பொருளால்
புள்ளாய்நாம் ஆணோமென்று ஆருரைப்பார் எம்பிறப்பை ?
மரக்கிளையே வீடாகும் மரம்ஊர்ந்து வரும்புழுவும்
சிறுபூச்சி எமக்குணவு ! சிறகிரண்டு உண்டாமால்
விரித்துஉடல் காற்றலைவோம் ! வெளிப்பறப்போம் வேறறியோம்
மண்சிதறும் தானியமும் பழுத்துநிற்கும் கனியும்உண்போம்
சின்னசின்ன குச்சிதேர்ந்து சிதறாமல் சேர்த்துவைத்து
முன்னும்பின்னும் பின்னிவைத்து மரக்கிளையில் கூடுவைப்போம்
வேடுவரின் கவண்கல்லில் போனஉயிர் இங்குமுண்டு
கூடுதேடும் நாகத்துக்கு இரையான உயிருமுண்டு
நாய்நரிக்கும் ஒருநாளில் உணவான உடல்களுண்டு
பொய்யறியோம் சூதறியோம் எம்விதிக்கு நோவதுண்டு !
யாம்பிறந்தும் யாமிருந்தும் ஏதுபயன் என்றறியோம்
எமக்குணவில் லையெனினும் மற்றஉயிர் வாழ்தற்கு
யாம்உணவாய் ஆவதினும் பிறந்த பயன் ஏதுண்டு ?
என்று யாம் கூறினாலும் கூறாது இருந்தாலும்
என்செய எமக்கியலும் ? எங்குசெல்ல வழிகூடும் !

எழுதியவர் : சக்கரைவாசன் (7-Nov-18, 10:18 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 44

மேலே