வாசிப்பு என்பதே உரையாடல்தான்- வேமுபொதியவெற்பன்

சிற்றிதழ் உலகில் பொதியவெற்பனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. எழுத்தாளர், விமர்சகர், ஆய்வாளர், பதிப்பாளர், புத்தக விற்பனையாளர் என்று பொதியவெற்பனின் மொத்த வாழ்க்கையும் புத்தகங்களோடுதான். தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையிலிருந்து வரும் சிறுபத்திரிகை என்றாலும் அதைப் படித்து விமர்சனங்கள் இருப்பின் தவறாமல் கடிதமும் எழுதிவிடுபவர். மாணவப் பருவத்தில் தொடங்கிய இந்த வழக்கம் 50 ஆண்டுகளாகியும் இன்றும் தொடர்கிறது.

“மேல்நிலைப் பள்ளில பாக்கெட் நாவல்கள் வாசிக்க ஆரம்பிக்குறது மூலமாதான் வாசிப்புக்குள்ள நுழையுறேன். அந்த சமயத்துல திராவிட இயக்கம் படிப்பகங்கள் தொடங்கினாங்க. வாசிப்ப ஜனநாயகப்படுத்தினாங்க. வாசிக்கத் தெரியாதவங்ககூட ஒருத்தர வாசிக்கச் சொல்லி கேக்குற சூழல அது உருவாக்கிக் கொடுத்துச்சு. அப்புறம், மு.வ புத்தகங்கள்தான் எனக்கு இலக்கிய ஈடுபாட்டைத் தந்ததுன்னு சொன்னா, வள்ளலாரும் புதுமைப்பித்தனும் பிரமிளும்தான் எனக்கான பாதையைக் காட்டினாங்க. அப்புறம் பியூசி படிக்கும்போது பேராசிரியர் சா.கு.சம்பந்தமோட தமிழர் மாணவர் அமைப்புக்குப் போக ஆரம்பிச்சேன். அதோட தொடர்ச்சியா முத்தமிழ் இலக்கிய மன்றன்னு எங்க தெருவுல வாசகசாலை நடத்தினோம். ஆண்டு மலர்கள்லாம் வெளியிட்டேன்.

தனித்தமிழ், திராவிடம், மார்க்சிய இயக்கங்கள்லயும் சேர்ந்தே வளர்ந்தேன். தொடர்ந்து வாசிப்போட தொடர்புடையதாத்தான் வாழ்க்கை அமைஞ்சது. நூல்களைக் கடந்து மனுஷங்களை வாசிப்பதாவும் மாறுச்சு. வாசிப்பே ஒரு உரையாடல் என்பது என் கருத்து. உரையாடல் தெரியாதவனால வாசிப்ப அறிய முடியாதுன்னு தேவதேவன் சொல்வாரு. ‘முனைவன்’ இதழ் ஆரம்பிச்சேன். சமூக விமர்சனம், இதழியல் இது ரெண்டும்தான் ‘முனைவன்’ இதழுக்கான நோக்கமா இருந்துச்சு. ‘சிலிக்குயில்’ பதிப்பகம் ஆரம்பிச்சேன். என்னோட வாழ்க்கை முழுசும் புத்தகங்கள் தொடர்புடையதாத்தான் இருக்குது. இலக்கியம் வாழ்க்கையச் சொல்லிக் கொடுக்கும். உறவுகளை எப்படிக் கையாளணும்னு கத்துக் கொடுக்கும். அதுக்காகவே வாசிக்கணும்.

‘இந்து தமிழ்’ நாளிதழ ஒரு தினசரியா மட்டும் இல்லாம ஒரு இதழாவும் நான் பாக்குறேன். செய்திகள் மட்டும் தர்றது இல்லை. ஒவ்வொரு துறைக்கும் அங்க விஷயம் இருக்குது. நூல்வெளி பகுதில மட்டும் இல்லாம வாரக் கட்டுரைகள்லயும்கூட புத்தகத்துக்கான குறிப்பிடல்கள் இருக்குது. ஆக, எல்லா விதத்துலயும் வாசிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்குது. ‘இந்து தமிழ்’ வாங்கின உடனே நடுப்பக்கத்துக்குதான் கை போகும். இந்த அளவுக்கு விரிவான கட்டுரைகள் வேறு எந்தப் பத்திரிகைலயும் பார்க்க முடியாது. அரசியல்வாதிகளோட பாஸிடிவ் பக்கத்தையும் சொல்றது முக்கியமான விஷயமா பாக்குறேன். இலக்கியப் பேட்டி முழுப் பக்கம் வர்றதெல்லாம் பெரிய மாற்றம்.”

த.ராஜன்

எழுதியவர் : (9-Nov-18, 8:33 pm)
பார்வை : 49
மேலே