முக்கூடல் நகர்ச் சிறப்பு

தமிழ்நாட்டில் வளமான ஒரு பகுதி திருநெல்வேலி மாவட்டம். திருநெல்வேலியை 'நெல்லை' என்றும் கூறுவர். இதோ தாமிரபரணி ஆற்றைக் காணுங்கள். திருநெல்வேலிக்கு வடகிழக்கே சித்திரா நதி, கோதண்டராம நதி ஆகிய இரு நதிகளும் தாமிரபரணி ஆற்றில் கலக்கும் இடம் முக்கூடல் என்று அழைக்கப்பட்டது. இவ்வூரில் எழுந்து அருளி இருக்கும் அழகர் என்னும் தெய்வத்தின் மீது பாடப்பட்டதே முக்கூடற் பள்ளு ஆகும்.

புலவர் முக்கூடல் நகரின் சிறப்பினைக் கற்பனை நயம்பட விவரித்துள்ளார் முக்கூடலில் அழகர் கோயில் கொண்டிருக்கும் கோயிலின் கோபுரம் மிக உயரமானது. மேகத்திரள் அந்தக் கோபுரத்தைச் சூழ்ந்து நிற்கும்; வானத்திலிருந்து மழைத்துளிகள் படியும். கொடி மரத்துக் கொடிகள் வானத்தையே மூடி மறைத்துக் கொண்டு இருக்கும். பேரண்டப் பறவைகள் கோயிலின் உச்சியை நோக்கிப் பறந்து கொண்டிருக்கும். பொற்கோயிலின் முற்றத்தில் உள்ள மழைநீரில் அன்னங்கள் விளையாடிக் கொண்டிருக்கும். சூரியன், கோயிலின் மதிற்சுவர்களில் தான் புகுந்து செல்வதற்குரிய வழியைத் தேடிக் கொண்டிருப்பான். இவ்வாறாக முக்கூடல் நகரைப் புலவர் வருணித்துள்ளார். இதனைப் பின்வரும் பாடல் விவரிக்கும்.

கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும்
கொடிகள் வானம்
படிதர மூடும்
கண்ட பேரண்டம் தண்டலை நாடும்
கனக முன்றில்
அனம் விளையாடும்
விண்ட பூமது வண்டலிட்டு ஓடும்
வெயில் வெய்யோன் பொன்
எயில் வழி தேடும்
அண்டர் நாயகர் செண்டலங் காரர்
அழகர் முக்கூடல்
ஊர் எங்கள் ஊரே

(கொண்டல் = மேகம், அண்டையில் = அருகில், படிதர = பரவ, பேரண்டம் = பறவை, கனகம் = பொன், முன்றில் = முற்றம், அனம் = அன்னம், விண்ட = விழுந்த, வெய்யோன் = ஞாயிறு, அண்டர் = தேவர், செண்டு = கைத்தடி)

எழுதியவர் : (12-Nov-18, 7:02 pm)
பார்வை : 613

மேலே