இன்னாமை நோக்கி மனையாறு அடைவொழிந்தார் ஆன்றமைந்தார் – நாலடியார் 54

நேரிசை வெண்பா

துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை
இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம்
இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையா(று)
அடைவொழிந்தார் ஆன்றமைந் தார். 54

- துறவு, நாலடியார்

பொருளுரை:

அறிவிலார் பல நாட்கள் துன்பத்தால் வருந்தியும், சிறிதுபோழ்து நுகரும் ஒரு நாளைய இன்பத்தையே விரும்புவார்;

கல்வி கேள்விகளால் நிறைந்து அதற்குத் தக்கபடி அடங்கி யொழுகும் பெரியோர் இன்பம் அங்ஙனம் இடையே சிறிது உளதாதல் தெரிந்து துன்பத்தின் மிகுதியை அறிந்து இல் வாழ்க்கையின் வழியில் சார்ந்து நிற்பதை நீங்கினார்.

கருத்து:

உலகத்திற் பல துன்பங்களினிடையிற் சிறிது இன்பமுண்டாதலின், அந் நிலை தெரிந்து தவம் முயலுதல் வேண்டும்.

விளக்கம்:

‘நுண்ணுணர்வின்மை வறுமை அஃதுடைமை செல்வம்,'1 ஆதலின் இங்கே ஏழையார் என்றது அறிவில் வறுமையுடையாரை.

மனையாறு அடைவொழிந்தார் என்றது, மேன்மேலும் இளமை துய்த்தலிற் பற்றுள்ளம் நீங்கினாரென்றற்கு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Nov-18, 7:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

சிறந்த கட்டுரைகள்

மேலே