மாண்பமைந்த அன்பேநல் ஒக்கற் கணியாகும் – அணியறுபது 41

நேரிசை வெண்பா

உற்ற உருவிற்(கு) உணர்வே அணி;உழந்து
கற்ற கலைக்குக் கருத்தணியாம்; - பெற்றெடுத்த
மக்கட் கணிசால்பு மாண்பமைந்த அன்பேநல்
ஒக்கற் கணியாகும் ஓர். 41

- அணியறுபது,
- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்

உணர்வே மனித உருவிற்கு அழகு: கருத்தே கற்ற கலைக்கு அழகு; சால்பே பெற்ற மக்களுக்கு அழகு; உள்ளன்பே ஒக்கலுக்கு அழகு என்க.

ஒக்கல் - உறவு, சுற்றம், சொந்தம், உறவினர்; சுற்றத்தார்;
குடித்தனம், குடும்பம், சொந்தங்கள்

தென்புலத்தார் தெய்வம் விருந் தொக்கல் தான் (குறள், 43)
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே (புறநானூறு)

உணர்ச்சியும் கருத்தும் சால்பும் அன்பும் ஈண்டு உணர வந்துள்ளன. பான்மை படிந்து வரும் அளவே எவையும் எங்கும் மேன்மை அடைந்து வருகின்றன.

மனிதப் பிறப்பு பெறுதற்கு அரியது; அவ்வாறு பெற்றாலும் செவ்விய அறிவு செறிந்து வரவில்லை யானால் அது சிறந்து விளங்காது. மெய்யறிவு மேவி வந்த போதுதான் மெய்யான உயர் பிறப்பாய் அது மேன்மை மிகப் பெறுகின்றது.

மக்கள் உடம்பு பெறற்கரிது; பெற்றபின்
மக்கள் அறியும் அறிவரிது; - மக்கள்
அறிவறிந்தார் என்பார் அறத்தின் வழுவார்;
நெறிதலே நின்றொழுகு வார். 212 அறநெறிச்சாரம்

அரிய மனித உருவை அடைந்தவர் அடையவுரிய பெருமைகளை இதனால் அறிந்து கொள்கிறோம்.

தருமநெறி தழுவி ஒழுகி வருபவரே விழுமிய மேலோராய் விளங்கி எழுமையும் இன்பம் பெறுகின்றனர். புண்ணிய நீர்மையே எண்ணரிய மகிமைகளை எங்கும் நன்கு அருளி வருகின்றது.

உண்மையாகத் தெளிந்த உணர்வுக்குப் பயன் தன்னுடைய நிலைமைகளை முன்னதாக உன்னியுணர்ந்து தெளிந்து உய்தி பெறுவதேயாம்.

எழுசீர் விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

அன்னையின் வயிற்றில் இருந்துநாம் இந்த
அரியமெய் அடைந்துவந் துள்ளோம்;
முன்னையூழ் வழியே யாவையும் முடிந்து
மூண்டுவந் துள்ளன; உயிர்கள்
தன்னையும் தன்னுள் இருந்தெலாம் இயக்கும்
தனிமுதல் தலைவனாம் தனையும்
உன்னிநேர் அறியும் உணர்வொளி உளதேல்,
உய்தியாம்; இலையெனில் இலையே,

பிறவித் துயரங்கள் நீங்கிப் பேரின்பம் பெறவுரிய வழிகளை இது தெளிவாக விளக்கியுளது. பொருள் நிலைகளையும் குறிப்புகளையும் ஓர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஊழின் வழியே உயிரினங்கள் உலாவி வருகின்றன. மனிதன் முன்பு செய்து வந்த செயல்களில் இருந்தே வினை, விதி, ஊழ் என்பன விளைந்து வந்துள்ளன. நல்ல கருமங்கள் நயமான தருமங்களாய் வருதலால் இவற்றை உடையவர்க்கு ஊழ் உரிமையாய் யாண்டும் இன்பங்களை ஊட்டி அருளுகிறது.

வினைப்பயன்களை நுகர்ந்து கொண்டு வாழும் பொழுதே ஊழின் பழமையை உணர்ந்து கொள்ள வேண்டும். உண்மையை உணர்வதே உயர் ஞானம்.

இந்த உடலை ஈன்றவள் தாய்; உயிரை ஈன்றவன் பரமன். தோன்றி மறைகிற உருவைத் தந்துள்ளமையால் முன் அறி தெய்வமாய் எண்ணி வணங்கும்படி அன்னை முன்னுற நின்றாள்.

கண்கண்ட கடவுளாக நேரே விளங்கியுள்ள தாயின் உள்ளம் உவந்து வரப் பணிந்து பேணி ஒழுகி வருகிற மகன் சிறந்த நன்றியறிவுடையனாய் உயர்ந்து திகழ்கிறான். கடமையைக் கருதிச் செய்பவன் கரும வீரனாகிறான், ஆகவே அரிய உறுதி நலன்களை எளிதே அவன் அடைந்து கொள்கிறான்.

உயிர்க்கு உயிராய் நின்று இயக்கி வருகிற ஆண்டவனை உரிமையோடு எண்ணி வருபவன் நீண்ட புண்ணியவானாய் நிலவி வருகின்றான்.

தத்துவஞானி, வித்தகயோகி, உத்தமசித்தன் என உயர்பெயர் பெற்றுள்ளவர் எல்லாரும் பரமான்மாவைப் பரிவுடன் கருதி ஒளிபெற்றுள்ள முத்தர்களே. ஆன்மா நேரே பரம அனுபவம் வாய்ந்த போது அதிசய ஆனந்தம் தோய்ந்து வருகிறது.

தன் உயிரை நோக்கி வருபவன் தனிப் பரமனையே நோக்கி மகிழ்கிறான். மனிதனது அறிவு தெளிந்து புனிதம் அடைந்து வர இனிய பரமனாய் உயர்ந்து இன்பம் மிகப் பெறுகின்றான்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Nov-18, 9:15 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 68

மேலே