நவம்பர் 14 குழந்தைகள் தினம் - கல்வியை மீட்டெடுத்த நேரு

இந்தியாவைச் செதுக்கிய சிற்பிகளில் நேரு முதன்மையானவர். தன்னலமற்ற தலைவர். கேள்விகளுக்கு அப்பாற்பட்ட ஆளுமை. எத்தனையோ முக்கியத் தலைவர்கள் விடுதலைக்காகப் போராடியபோதும், நேரு என்ற ஒருவர் இல்லையென்றால் இந்தியாவின் சுதந்திரம் சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்திருக்கும்.

ஏனென்றால், காந்தி என்ற குழந்தைத்தனம் மிகுந்த முரட்டுக் கொள்கைவாதியைச் சமாளித்து சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற பெரும் தலைவர் நேரு. காந்தியின் உண்மையான சீடர். காந்தியின் நம்பிக்கைக்கு நூறு சதவீதம் பாத்திரமானவர். சொல்லப்போனால், ஈருடல் ஓர் உயிராக வாழ்ந்தவர்கள் அவர்கள்.

தேசத்தின் விருப்பத் தேர்வு

குழந்தைகளின் மாமா என்பதாலோ ரோஜாப்பூவின் காதலர் என்பதாலோ மென்மையானவர் என்று நேருவை நினைக்க வேண்டாம். இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேலால் வியந்து போற்றப்பட்ட உறுதிக்குச் சொந்தக்காரர் நேரு. இந்தியாவின் முதல் பிரதமராக சர்தார் படேலை காங்கிரஸ் கட்சியிலிருந்த சிலர் முன்மொழிந்தபோது, “நீங்கள் வேண்டுமானால் என்னைப் பிரதமராக்க விரும்பலாம்.

ஆனால், நான் உட்பட இந்தத் தேசத்து மக்களின் ஒரே விருப்பத்தேர்வு நேரு மட்டுமே” என்று படேல் மறுத்தது அதற்குச் சான்று. நேரு எப்போதும் ஒரு ஜனநாயகவாதியாகவே இருந்தார். இன்றைய முற்போக்குவாதிகளால் கனவிலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு முற்போக்குச் சிந்தனைகளை நேரு கொண்டிருந்தார்.

சிந்தனைக் களமான சிறைச்சாலை

அளப்பரிய அறிவும் தெளிவான சிந்தனையும் மரபின் வழி அவருக்கு வந்த கொடைகள். தொலைநோக்குப் பார்வையும் நவீனமும் நாகரிகமும் இறுதிவரை அவரை விட்டு அகலாமல் பயணித்தன. பலமுறை சிறை சென்றுள்ளார். ஆனால், ஒருமுறை கூட அவர் மன்னிப்புக் கடிதம் கொடுக்கவில்லை.

சிறையைக் கண்டு நேரு அஞ்சவில்லை. தன்னையும் தனது நாட்டையும் வடிவமைக்கும் களமாகச் சிறையை அவர் மாற்றினார். சிறையில் இருந்த காலத்தில் அதிகம் படித்தார். தனது சிந்தனைகளைத் தொகுத்து எழுத்தாக்கினார். சுதந்திரப் போராட்டத்துக்கான தேவைக்கும் நாட்டின் வளர்ச்சிக்கான தேவைக்கும் இடையிலான வித்தியாசத்தை அவர் நன்கு உணர்ந்திருந்தார். சுதந்திரத்துக்குப் பின்னான இந்தியாவை வார்த்தெடுத்து வழிநடத்துவதே தனக்கு முன்னிருக்கும் சவால் என்பதை நேரு தெளிவாக உணர்ந்திருந்தார். கல்லாமையும் அறியாமையும் நாட்டின் முன்னேற்றத்துக்கான தடைகள் என அவர் உணர்ந்திருந்தார். அவற்றைத் தரமான கல்வியால் மட்டுமே களைய முடியுமென நம்பினார்.

காந்திய, மார்க்ஸியச் சிந்தனைகள்

கல்வியைக் குறித்த நேருவின் பார்வையில் பாயும் ஒளியாக காந்தியச் சிந்தனைகளும் கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களும் இணைந்திருந்தன. நேருவைப் பொறுத்தவரை கல்வியறிவு என்பது பகுத்தறிவாலும் அனுபவ அறிவாலும் நேர்மறை எண்ணங்களாலும் வரையறுக்கப்பட்ட ஒன்று. மதங்களிலிருந்து கல்வியைப் பிரித்தெடுத்து, குருகுலங்களிலிருந்து கல்வியை விடுவித்து, கல்வியை அனைவருக்கும் பொதுவானதாக மாற்றியதில் நேருவுக்குக் கணிசமான பங்குண்டு.

பகுத்தறிவாளரான நேருவுக்கு மதத்தைவிட விஞ்ஞானத்தில்தான் அதிக நம்பிக்கை இருந்தது. தனது அறிவாலும் அனுபவத்தாலும் தர்க்கத்தாலும் அறிந்தவற்றை மட்டுமே உண்மையென எடுத்துவைத்தார். காந்தியைப் போன்று கொள்கையை வலிந்து திணிக்காமல், தனது கொள்கையை மக்களின் கொள்கையாக வெகு இயல்பாக நேருவால் மாற்ற முடிந்ததற்கு, நேருவின் இந்தப் பண்பே காரணம். மதங்களால் பரப்பப்படும் மூடநம்பிக்கைகளையும் அந்த மதங்களின் மீதான மக்களின் கண்மூடித்தனமான விசுவாசத்தையும் தீவிரமாக எதிர்த்தார். பகுத்தறிவை அடிப்படையாகக்கொண்ட ஒரு விஞ்ஞானப் பார்வையை, உயர்ந்த தரத்திலான கல்வியை அளிப்பதன் மூலம் நேரு மக்களிடம் ஏற்படுத்தினார்.

அதனால்தான் ‘மதச்சார்பின்மையை வலியுறுத்திய நேரு ஒரு மதத்தலைவராக இருக்கவில்லை, ஆன்மிகத்தில் ஆழமான நம்பிக்கையுள்ள ஒரு மனிதராக இருந்தார்’ என டாக்டர் ராதா கிருஷ்ணன் கூறினார்.

உயர்கல்விக்குச் செறிவூட்டிய நேரு

ஐந்தாண்டுத் திட்டங்களைப் போன்று, நம் நாட்டின் வளர்ச்சிக்கு, மாணவர்களின் உயர்கல்விக்கு அவர் முன்னெடுத்த திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி), இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்), ஆல் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் (ஏ.ஐ.ஐ.எம்.எஸ்) ஆகியவை நேருவால் உருவாக்கப்பட்டவையே. 1950-ல் மேற்கு வங்கத்தில் உள்ள கரக்பூரில் முதல் ஐ.ஐ.டியைத் தோற்றுவித்தார்.

அதன் பிறகு, 1958-ல் சோவியத் யூனியனின் உதவியுடன் மும்பையில் ஐ.ஐ.டியை நிறுவினார். கான்பூர் ஐ.ஐ.டியை 1959-ல் அமெரிக்காவின் உதவியுடன் நிறுவினார். இன்று உலகின் பல உன்னதப் பல்கலைக்கழகங்களுக்குத் தரத்திலும் கல்விச் செறிவிலும் இவை சவால்விடுகின்றன. இதன் மாணவர்கள் இன்று உலகெங்கும் இருக்கும் பல பெரு நிறுவனங்களிலும் நாஸா போன்ற சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களிலும் தவிர்க்க முடியாத ஆளுமைகளாக நிரம்பியிருக்கிறார்கள்.

இந்தியாவின் அடையாளம்

செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர் நேரு, பிறக்கும்போதே வளங்களால் ஆசிர்வதிக்கப்பட்டிருந்தார். உலகின் உன்னதக் கல்வி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

காந்திகூட படித்துப் பட்டம் பெற்ற பிறகு, வேலைக்காகத் தென்னாப்பிரிக்கா சென்றார். ஒருவேளை தென்னாப்பிரிக்க ரயில் பயணத்தில் காந்திக்கு அந்த அவமானம் நேர்ந்திராவிட்டால், காந்தி தென்னாப்பிரிக்காவிலேயே நிம்மதியாக இருந்திருக்கக்கூடும். ஆனால், நேரு அப்படியில்லை. கேம்பிரிட்ஜில் படித்துப் பட்டம் பெற்ற பின்னும், லண்டனில் இருக்க இயலாமல், நாட்டுக்குச் சேவையாற்ற ஓடிவந்தார். தன் சொத்துகளை விற்றும் இழந்தும் இங்கே போராடினார். நம் நாட்டின் மனிதவளம் கல்வியில் தேர்ச்சி பெற்றால், உலகின் முன்னணி நாடாக இந்தியா மாறிவிடும் எனத் தீர்க்கமாக நம்பினார்.

அவரது தொலைநோக்குப் பார்வையால் விளைந்த பயன்களின் மேல் ஏறி நின்றுகொண்டுதான் சிலர் நேருவை இகழ்கின்றனர். நேருவை இகழ்வது இந்தியாவையே இகழ்வது போன்றது. ஏனென்றால், சுதந்திர இந்தியாவின் முதன்மை அடையாளம் நேருதான்.



முகமது ஹுசைன் 

எழுதியவர் : (14-Nov-18, 4:44 pm)
பார்வை : 51

சிறந்த கட்டுரைகள்

மேலே