பசுமை எனது வாழ்வுரிமை 04 காலனியாதிக்கத்துக்குள் இந்திய இயற்கை

‘தம்முடைய நாட்டு இயற்கை மூலப்பொருட்களை வேற்று நாட்டு மக்கள் பெறுவதற்கான முயற்சிகளைத் தடுக்கும் இயல் குடிமக்களின் (நேட்டிவ்) செயல்களை மேற்கத்திய (காலனி ஆதிக்க) மக்கள் வன்மையாக ஒதுக்கித் தள்ளினர். இயல் மக்கள், அவர்களின் சுரண்டலை ‘திருட்டு’ என்று கண்டித்தபோது, தம்முடைய ஏளனக் கோபத்தை இயல் மக்களின் மேல் வெளிக்காட்டினர்’.

- இன்கிரிட் ஹூம்

இந்தியச் சூழலியல் வரலாற்றில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் ஒரு மிக முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. அதிகத் தொழில்நுட்ப முன்னேற்றம் பெற்ற, அதிக இயக்கத்தன்மை கொண்ட, ஒரு வெளிநாட்டு மக்கள் சமுதாயத்தோடு ஏற்பட்ட ‘மோதல்கள்’, ‘முரண்பாடுகள்’ ஆகியவை காரணமாக இந்தியச் சமுதாயத்தின் வெவ்வேறு மட்டங்களில் மிக அதிக அளவு இடப்பெயர்வுகளும் சீர்குலைவுகளும் ஏற்பட்டன.

இந்தியச் சூழல் மற்றும் சமூக மாற்றங்களின் முக்கியமான இடச்சார்புத்தன்மையை இவை எளிதாக வெளிக்கொணர்ந்தன. காலனி ஆதிக்கத்துக்கு முன்பு இந்தத் தன்மை வெளிப்படையாகத் தெரியவில்லை. இயற்கை மூலப் பொருட்களின் பயன்பாடுகளில் உடனடியாக ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் சமூக மாற்றங்கள் பார்க்கப்படத் தொடங்கின.

முடி அரசுகளின் மேலாண்மை

இங்கு, பிரிட்டிஷ் அரசின் குறுக்கீட்டின் முக்கியத்துவம் இயற்கை மூலப்பொருட்களைப் பிரித்தெடுத்தலில் அது பயன்படுத்திய புதுமையான வழிமுறைகளைச் சார்ந்திருந்தது. இந்தப் பிரித்தெடுத்தல், அதன் அரசியல் அதிகார ஓங்குத் தன்மையால் மட்டுமின்றி, இந்தியா அதற்கு முன்பு அறிந்திராத தொழில்நுட்பங்களின் பயன்பாட்டாலும் சாத்தியமாயிற்று.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்கு முன்பும், இந்தியாவில் இயற்கை மூலப்பொருட்களின் மேல் முடி அரசுகளின் மேலாண்மை இருந்தது. என்றாலும், அது செயல்பாட்டளவில் ஒரு சிறிய வரம்புக்குள் மட்டுமே இருந்தது என்பது மட்டுமின்றி, மிகவும் குறிப்பிடத்தக்க நோக்கங்களை மட்டுமே சார்ந்திருந்தது. உதாரணத்துக்கு, மவுரிய அரசு காலகட்டத்தில், ஒரு சில காட்டுப் பகுதிகள், ‘யானைக் காட்டுப் பகுதிகள்’ என்று வரையறை செய்யப்பட்டு அவை சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டன. இதேபோன்று முகலாய, மராட்டிய, நாயக்க மன்னர்களாலும் காடுகளும் இதர இயற்கை மூலங்களும் ஓரளவுக்குத்தான் கட்டுப்பாடு செய்யப்பட்டன.

கட்டுப்பாடான பயன்பாடு

எனினும், காலனி ஆதிக்கத்துக்கு முன்பு இந்தியா வலுவான வட்டாரச் சமுதாயங்களை மட்டுமின்றி, அகக்கலப்பு மேற்கொள்ளும் சாதிக் குழுக்களையும் கொண்டிருந்தது. இயற்கை ஆதாரகளைக் கட்டுப்படுத்துவதற்கான வலுவான நிர்வாக அதிகார மையங்களாக அவை திகழவில்லை என்றாலும், மிகவும் பரவலான நிலப்பரப்புகளும் நீரும், இதர சூழல் பொதுச் சொத்துகளும் இந்த வட்டாரச் சமுதாயங்களால் கட்டுப்படுத்தப்பட்டன. மேலும், ஒரு கட்டுப்பாடான வகையில் பயன்படுத்தப்படவும் அனுமதிக்கப்பட்டன. இந்தியாவின் பல பழங்குடி மக்கள் சமுதாயங்கள் காட்டின் மூலப் பொருட்களைப் பயன்படுத்துவதில் பெற்றிருந்த கட்டுப்பாடு, அதற்கு ஒரு உதாரணம்!

மேற்கூறப்பட்ட நிலைமை, பிரிட்டிஷ் காலனி அரசின் கட்டுப்பாட்டால் திடீரென மாற்றப்பட்டது. இந்த அரசு, பயிரிடப்படாத அனைத்து நிலங்களின் மேலும், அனைத்து நீராதாரங்களின் மேலும் கட்டுப்பாட்டு உரிமையை எடுத்துக்கொண்டது.

கட்டுரையாளர்,
கு.வி.கிருஷ்ணமூர்த்தி
ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்

எழுதியவர் : (17-Nov-18, 5:43 am)
பார்வை : 20

சிறந்த கட்டுரைகள்

மேலே