மிடியென்னும் காரணத்தின் கடியென்றார் கற்றறிந்தார் – நாலடியார் 56

நேரிசை வெண்பா

மாண்ட குணத்தொடு மக்கட்பே(று) இல்லெனினும்
பூண்டான் கழித்தற்(கு) அருமையால் - பூண்ட
மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக் கண்ணே
கடியென்றார் கற்றறிந் தார். 56

- துறவு, நாலடியார்

பொருளுரை:

திருமணம் ஆனபின் மனைவிக்கு மாட்சிமைப்பட்ட குணத்தோடு குழந்தைப்பேறும் இல்லை யென்றாலும், கொண்ட கணவன் அவளை விட்டுவிடுவதற்கு அருமையாகுமாதலால் மேலும் தனக்கு உண்டாகும் வறுமை யென்னும் காரணமுங் கொண்டு மேலான ஒழுக்க நெறியிலே, பற்றினை நீக்கு என்றனர் கற்றறிந்தோர்.

கருத்து:

இளமையிலேயே தவம் முயலுதல் நல்லது.

விளக்கம்:

காரணத்தின் என்பதற்கு காரணத்தினாலும் என இறந்தது தழீஇய எச்சவும்மை கொள்க.

மேலான ஒழுக்கநெறி யென்றது, இங்கே தவநெறி, அந்நெறியில் நிற்கும் ஆற்றலாலேயே பற்றினைக் கடியும் உள்ளம் தோன்றுதலின், ‘மேன்முறைக் கண்ணே கடி' யென்றார்1 எனப்பட்டது. "அப்பற்றைப் பற்றுக, பற்று விடற்கு," என்பதனானும் இம்முறைமை பெறப்படும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Nov-18, 4:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

சிறந்த கட்டுரைகள்

மேலே